Skip to content

சொல் பொருள்

(வி) 1. தூக்கத்திலிருந்து எழுப்பு, 2. எழுப்பு, கிளப்பு 3. (காற்று) சினந்து வீசு, 4. போக்கு, விரட்டு.

எடுப்பு – வைப்பாள், வைத்தகுறி

சொல் பொருள் விளக்கம்

எடுப்பு – எடுத்தல், தனக்கென எடுத்து வைத்துக் கொள்ளல் எடுப்பாகும். தவறானச் செயலும் எடுப்பே; தவறான தொடர்பும் எடுப்பே, இரண்டையும் குறிக்க “நீ எடுத்த எடுப்புச் சரியில்லை” என்பர். எடுத்துக் கொண்ட ஒருத்தியைத் தன் பொறுப்பில் வைப்பதால் வைப்பு, வைப்பாள், வைப்பாட்டி ஆகிறாள். அவள் அவனுக்கு வைப்பாக இருப்பதுபோல அவள் வைத்ததெல்லாம் வரிசையாய் அவன் வைப்பெல்லாம் அவள் வைப்பாக ஆட்டி வைக்கிறாள். மூதாள்- மூதாட்டியாவது போல வைப்பாள் வைப்பாட்டியாவது நெறியே.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

awake, raise, rouse, (wind) blow ferociously, dispel, drive away

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எருது எறி களமர்
நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை
மென் தினை நெடும் போர் புரி-மார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரும் கல் நாட்டே – நற் 125/9-12

எருதுகளை ஓட்டும் உழவர்
போரடிக்கும் களத்தைப் பார்த்தாற்போன்ற அகன்ற இடத்தையுடைய பாறையில்
மென்மையான தினைக்கதிர்களை நெடுநேரம் போரடிக்கும்பொருட்டு
தூங்கியிருக்கும் களிறுகளை எழுப்பிக்கொண்டிருக்கும் தம் பெரிய மலை நாட்டுக்கு

கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர்
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை – குறு 398/3-5

கயல்மீனை ஒத்த மையுண்ட கண்களையுடைய பொன் குழைகளையுடைய மகளிர்
தம் கையினால் நெய்யை வார்த்து ஏற்றிய
விளக்குகள் துயரத்தைக் கிளப்புவதற்குக் காரணமான துன்பத்தையுடைய மாலைப்பொழுதில்

கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ
நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 378,379

கடிய காற்று சினந்து வீசுகையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து,
நெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல
– வி. நாகராஜன் உரை – (NCBH)

அமர் கண் ஆமான் அம் செவி குழவி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து – குறு 322/1,2

அமர்த்த கண்களையுடைய ஆமானின் அழகிய செவிகளையுடைய குட்டி
குறவர்கள் விரட்டியதால் வெருண்டு, தன் கூட்டத்தைவிட்டு ஓடி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *