கவரி என்பது கவரி மான்
1. சொல் பொருள்
(பெ) 1. நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம், 2. சாமரை,
2. சொல் பொருள் விளக்கம்
சங்க இலக்கியத்தில் கூறப்படும் பிற நாட்டு விலங்குகளில் கவரிமா என்பது மொன்றாகும் . இக்கவரிமாவைப் பற்றித் திருக்குறளும் கூறியுள்ளது.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் ( 969 )
என்று வரும் குறள்பாட்டு யாவரும் அறிந்ததொன்று . இக்குறளுக்கு உரையாசிரியர்கள் அனை வரும் ஏறக்குறைய ஒரே பொருள்படும்படி உரை கூறிச் சென்றனர் . தன் மயிர்த்திரளின் ஒருமயிர் நீங்கினும் உயிர் வாழாக் கவரிமாவை ஒப்பார் மானம் எய்துங்கால் உயிர் நீங்குபவர் என்று பரிமேலழகர் பொருள் கூறினார் . ஒரு மயிர் நீங்கின் கவரிமாவைப் போன்ற மானமுடையார் மானம் அழியவரின் உயிர் விடுவர் என்று மணக்குடவர் பொருள் கூறினார் . பரிப்பெருமாளும் மணக்குடவர் கூறிய முறையில் உரைத்தார் . பரிதியார் இன்னும் விளக்கமாகக் கூறுவதுபோல் ஒரு மயிர் சிக்கினால் பிராணனை விடும் கவரிமான்போல மானம் வந்தால் பிராணனை விடுவர் நல்லோர் என்றார் . காளிங்கரோ அதைவிட ஒருபடி தாண்டி கற்பனையை உலவவிட்டு , “ தனக்கு அலங்காரம் ஆகிய மயிற்க்கற்றையின் ஒரு மயிர் போகின் மானித்துப் பின் உயிர் வாழாது அம்மயிர் துவக்குண்ட இடத்து நின்று வற்றி விடூஉம் கவரிமா அன்ன கடப்பாடுடையார் ” என்று கூறினார் . இந்த உரைகளிலிருந்து தெரிவது என்ன ? உரையாசிரியர்க கவரிமாவைப்பற்றித் தெளிவாக அறிந்தவர்கள் அல்லர் என்பது தெரிகின்றது .
சங்கப் பாடல்களில் இயற்கையை உள்ளது உள்ளபடியே கூறும் உணர்வு மிகுந்து காணப்படுவதை யாவரும் அறிவர். ஆனால் பிற்காலப் பாடல்களில் இல்லா ததை உள்ள துபோல விதந்துகூறும் போக்கைக் காண்கின்றோம் . சங்கப் புலவர்கள் கவரிமாவைப் பற்றித் தெரிந்து இருந்தனர் என்பதைச் சங்க நூலில் இரு இடங்களில் வரும் குறிப்புகளிலிருந்து அறிகின்றோம் . கவரிமா வாழும் இடத்தை , சூழ்நிலையை நன்றாக அறிந்திருந்தனர் என்று தெரிகின்றது . செவிவழிச் செய்தியாகவோ , கண்டாரிடம் கேட்டதாகவோ , நூல்வழி அறிந்ததாகவோ இருக்ககலாம் .
நரந்தை நறும்புன் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி யயல
தகரத் தண்ணிழற் பிணை யொடு வதியும்
வட திசை யதுவே வான்றோயிமயம் –
என்று வரும் புறநானூற்றும் பாடலில் ( 132) நரந்த புல்லை மேய்ந்த கவரி குவளைப்பூ நிறைந்த சுனையில் நீர்பருகி அருகில் இருந்த தகரமர நிழலில் தன் துணை யொடு வாழும் வடதிசையில் வானை அளாவும் இமயம் இருப்பதாகக் கூறப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும் .
ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி
பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்
எனவரும் பதிற்றுப்பத்துப் பாடல் வரிகளில் .11 : 21-23
கவரி வாழுமிடம் இமயம் என்றே கூறப்பட்டிருக்கின்றது. கவரி இமயத்தில் மிக உயரத்தில் வாழும் விலங்கு , ஆரியர் வாழுமிடத்தில் இருக்கும் விலங்கு என்பதைச் சங்கப்புலவர்கள் தெரிந்து வைத்திருந்தனர் என்பது தெளிவு . கவரிமா தமிழ் நாட்டு விலங்கன்று . இமயமலையில் மயிர்த்திரளோடு வாழும் அத்தகைய விலங்கு என ஆராய்ந்து பார்க்க வேண்டும் . இமயமலையில் வாழும் விலங்குகளில் மனிதரோடு பழகி வாவாழும் விலங்கு யாக் ( Yak ) எனப்படும் விலங்கேயாகும் . இதையே கவரிமா என்று சங்கப்பாடல்கள் கூறுகின்றன . கவரியை ஈந்த விலங்கு கவரிமா எனப்பட்டது . பனிக்கரடி இமயமலையில் வாழினும் மனிதரால் நெருங்கமுடியாத கொடிய விலங்கு . திபெத்திய மொழியில் யாக் என்று அழைக்கப்படும் கவரிமா எருது போன்றதொரு பொதி விலங்காகும் . உயர்ந்த மட்டத்திலுள்ள பனிப்பாறைகளிலும் , அடிவாரத்திலும் வாழ்வது. உலகத்திலேயே குளிர்ந்த பகுதியான உயர்ந்த மலைகளில் வாழும் விலங்குகளில் இது சிறப்பானது . இது காட்டிலும் வாழும். வீட்டிலும் வளர்க்கப்படுவதுண்டு. உயர்ந்த இடத்தில் குளிர்ந்த சூழ்நிலையில் வாழ்வதால் இதற்குக் கடுங்குளிரைத் தாங்கத் தடித்த மயிர்க்கற்றைகளாடற்போர்வை இருக்கின்றது . இதன் மயிர் நிறைந்த தோலையே சிறந்த ஆடையாகவும் மயிரினால் நெய்த ஆடையைப் பாயாகவும் திபெத்தியர் பயன்படுத்துகின்றனர் . எவரெஸ்ட் முதலிய மலையுச்சிகளில் ஏறுபவர்களும் இவ்விலங்கின் மயிர்க்கற்றையை பயன்படுத்துகின்றனர் . திபெத்தில் வாழும் மக்கள் இவ் விலங்கிலிருந்து பெறும் மயிராடையைப் பெரும்பாலும் உடுத்துகின் றனர் .
இத்தகைய தடித்த ஆடைகள் இல்லையெனில் மனிதர் இங்கு உயிர் வாழ்வது இயலாது . என்று வள்ளுவர் இவ் விலங்கைப்பற்றி உண்மையான, இயற்கைக்குப் பொருத்தமான செய்தியை உவமையாகப் பயன்படுத்தியிருக்கிறார் . உண்மையறிவு குறைந்த பிற்காலத்தில் உரையாசிரியர்கள் கற்பனையும் உண்மைக்குப் புறம்பானதுமான ஒரு கதையைக் கவரிமாவின்மேல் பொதியேற்றி உலவவிட்டனர் கருத வேண்டியிருக்கின்றது . நேரிய பொருள் ஒன்று இருக்க உரையாசிரியர்கள் கூறிய பொருள் வேறொன்றாக விருக்கக் காண்கிறோம் . மயிர்க்கற்றையை இழந்தால் தான் வாழுமிடத்தில் உயிரவாழமுடியாத கவரிமாவைப்போல , மானத்தை இழக்கும் சூழ்நிலையில் முடையோர் உயிரோடு வாழமாட்டரர் . என்பதுதான் இக்குறளுக்கு நேரிய பொருள் . சங்கப்புலவர்கள் கவரிமாவைப் பற்றி உண்மையான செய்தியை அறிந்திருந்த போது , வள்ளுவர் கவரிமாவைப்பற்றி நன்றாகத் தெரியா திருந்தார் என்று கருதுவதற்குக் காரணம் யாதுமில்லை . கவரிமாவைப்பற்றித் தாம் பின்னும் தெளிந்த செய்தியையே வள்ளுவர் அழகிய உவமை கையாண்டிருக்கிறார் என்பதை உணர வேண்டும் . இயற்கையில் உண்மையாகக் கண்ட செய்தியை உணராத பிற்காலத்துப் புலவர்களும் ஆசிரியர்களும் உயர்வு நவிற்சியின் காரணமாகக் கற்பனையில் மூழ்கி நுண்மாண் நுழைப்புலத்தைக் காட்டினர் .
ஒருமயிர் நீங்கின் வாழாத கவரிமா இன்றும் அன்றும் இயற்கையில் காணக்கூடாத தொன்றும் . விலங்கிற்கு அத்தகைய மான உணர்ச்சி உண்டு என்பதை அறிவியலார் எவரும் ஒப்பார் . விலங்கிற்கு அத்தகைய நுண்ணிய உணர்வு இருப்பதாக
விலங்கு நூலார் கூறவில்லை . மானம் எனும் உணர்ச்சி பகுத்தறிவும் அறிவிலிருந்தும் பிறப்பது . தமிழில் உயர்திணையில் விலங்குகள் சேர்க்கப்படவில்லை. ஆதலால் இந்தக் கற்பனைக் கதை எப்படி எழுந்த தென்று தெரியவில்லை . இதன் அடிப்படையாகப் பல கற்பனைகள் பரவலாயின. பரிதியார் , மயிர் சிக்கினால் பிராணனை விடும் கவரி என்று கூறினார் . ஒரு மயிரை இழந்து உயிரை விடுவதாகக் கூறுவதை விட , மயிர் நீங்கி உயிரைவிடுவதாகக் கூறுவதைவிட, மயிர் சிக்கி உயிரைவிடுவதாகக் கூறுவது பொருத்தம் என்று எண்ணினார் போலும் . பெருங்கதையில் அவ்வாறே கூறப்பட்டுள்ளது . ஆனால் காளிங்கர் கற்பனையின்மேல் றொரு கற்பனையை ஏற்றினார் . தனக்கு அலங்காரம் ஆகிய மயிர்க்கற்றையில் ஒரு மயிர் போகின் மானித்து உயிர்வாழாது என்று அலங்காரமாகக் கூறிச் சென்றார் . கவரிமாவை நேரிலோ அல்லது படத்திலோ பார்த்தவர்கள் அப்படியொன்றும் அலங்காரமான ‘ கூந்தல்மாவாக க் கவரிமாவைக் கருதார்கள் . மகளிரின் கூந்தலை அலங்கரிக்கக் கவரிமாவின் மயிர்க்கற்றை உதவினதே தவிர கவரிமாவுக்கு அத்தகைய அலங்காரம் அதன் மயிரிலிரூந்து கிடைப்பதாகக் தெரியவில்லை ! சீவகசிந்தாமணி ‘ மானக்கவரி ( 2120 ) என்று கொண்டது. கம்பர் “ மானமா வனைய காட்சிபர் ” என்று பாடினார் . ஆனால் மானத்தைத் தமிழர் ஒரு கவசமாக , போர்வையாகக் கருதினரென்று தெரிகின்றது . அந்த மானத்தை இழந்தால் – உயிர் வாழக் கூடாது . என்று கருதினர் .
சங்க காலத்திலேயே கவரியின் மயிரைக் கூந்த லழகுக்கு மகளிர் பயன்படுத்தியதாகத் தெரிகின்றது .
கவரி முச்சிக் கார்விரி கூந்தல்
ஊசன் மேவற் சேயிழை மகளிர்
என்று வரும் பதிற்றுப்பத்துப் பாடல் வரிகள் ( 43 : 1-2) சேயிழை மகளிரின் கூந்தலுக்குக் கவரிதந்த உதவியைக் கூறியிருக்கின்றது . அக்காலத்திலேயே , தமிழ் மகளிர் கூழைக்கற்றையை நெடி தாக்கவோ , இழந்த மயிரை நிறைக்கவோ கவரி மயிரை நம்பினர் . மயிரை இழந்த மகளிரே உயிரை இழக்கவில்லை யெனும்போது , கவரி மயிரை யிழந்து உயிரை விட்டதாகக் கூறுவது கற்பனையே தவிர வேறன்று . கவரிமாவின் மயிர் மகளிர் கூந்தலுக்கு உதவியது போல , கூந்தல் மாவிற்கு உதவி யிருப்பதை, “ ஆய்மயிர் கவரிப் பாய்மா ” என்று வரும் பதிற்றுப்பத்துப் பாடல்வரி தெரிவிக்கின்றது . குதிரை யின் தலையாட்டத்திற்கு , நிறமூட்டிய கவரிமயிர் உதவி வருவது இன்றும் காணப்படும் செய்தியாகும் . வகையில் அன்று மகளிரின் தலையலங்காரத்திற்கும் குதிரையின் தலையலங்காரத்திற்கும் ஓர் ஒப்புமை இருந்தது . ஆனால் இன்று மகளிரின் தலையலங்காரத்திற்குக் குதிரையின் வாலுக்கும் ( Pony Tail ) ஒப்புமை காண்பது நகைப்புக்கிடமாகின்றது . கவரியில் இருந்து தான் சவரி மயிர் தோன்றியது . கவரி என்ற சொல்லே சவரி ஆயிற்று .
கவரிமயிரினால் செய்த சாமரம் கவரி என்று அழைக்கப்பட்டது . கவரி என்ற சொல் முதலில் அழகிய மயிர்க்கற்றையைக் குறித்துப் பின்னர் அந்த மயிர்க்கற்றையைத் தரும் விலங்கிற்குப் பெயராயிற்று . கவரிமாவின்மேல் வள்ளுவர் கொள்ளாக் கற்பனைக் கதையை உரையாசிரியர்கள் ஏற்றியபிறகு , நிகண்டாசிரியர்கள் அதன் அடிப்படையில் கவரி மானமா என்றழைக்கலாயினர் . கவரிமா மானத்திற்கு இலக்கணம் வகுத்த மாவாயிற்று . கவரிமா என்று அழைக்கப்பட்ட விலங்கை பிற்காலத்தில் கவரிமான் என்று அழைக்கலாயினர் . அதனால் ஆனினத்தைச் ( Bovine ) சேர்ந்த கவரிமாவை மானினத்தில் சேர்த்து மருளலாயினர் . மாவென்றால் விலங்கென்றே பொருள் . மான் என்று மானினத்தில் சேர்த்தது பொருத்தமன்று . மேற்கூறியவைகளிலிருந்து கவரிமா மானமா அன்று என்பது தெளிவுபெறும் . வள்ளு வரும் அதை மானமாவாகக் கையாளவில்லை என்பதும் தெரியப் பெறும் .
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Yak, Bos grunniens
Yak-tailfan, used for fanning idols and great personages
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி/பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் – பதி 11/21
முருக்க மரங்கள் செறிவாக வளர்ந்த மலைச்சரிவில் துயில்கொள்ளும் கவரிமான்கள்,
புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா – பரி 19/86
உதிரிப்பூக்களையும் நீரையும் கலந்து தூவி, அழகுபடுத்தப்பெற்ற சாமரையை வீசி
கவரி முச்சி கார் விரி கூந்தல் – பதி 43/1
ஆய் மயிர் கவரி பாய்மா மேல்கொண்டு – பதி 90/36
மூட்டு-உறு கவரி தூக்கி அன்ன – அகம் 156/2
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி/குவளை பைம் சுனை பருகி அயல – புறம் 132/4,5
வேந்து வீசு கவரியின் பூ புதல் அணிய – நற் 241/6
வார்-உறு கவரியின் வண்டு உண விரிய – அகம் 335/19
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்