குதிரை என்பது ஒரு வகை விலங்கு
1. சொல் பொருள்
(பெ) நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகை விலங்கு
குதிரையைக் குறியாமல் உயரமான கால்களையுடைய கோக்காலியைக் குறிப்பது தூக்துக்குடி வட்டார வழக்கு. இது கொற்றர் (கொத்தர்) வழக்காகும்
2. சொல் பொருள் விளக்கம்
குதிரையைக் குறியாமல் உயரமான கால்களையுடைய கோக்காலியைக் குறிப்பது தூக்துக்குடி வட்டார வழக்கு. இது கொற்றர் (கொத்தர்) வழக்காகும். குதிரையின் கால்கள் உயரமிக்கவை. ஓட்டத்திற்கு வாய்ப்பானவை.
குதித்து ஓடியதைப் பார்த்துக் குதிரை எனப்பட்டது; பரிந்து (வேகமாக) ஓடுவதைப் பார்த்துப் பரி என்றழைக்கப்பட்டது
குதிரையைப் பற்றியும் சங்க நூல்களில் பல பாடல்களில் செய்திகள் வருகின்றன . தேரில் பூட்டியும் இவர்ந்து போர் புரியவும் குதிரைகள் பயன்பட்டன . மழவர் என்றொரு வீரர் குதிரைகளை ஓட்டுவதில் சிறந்தவராகக் கருதப்பட்டனர் . மழவர் ஓட்டிய உருவக் குதிரை ” என்று அகநானூறு அவருடைய அழகிய வடிவான குதிரைகளைக் குறித்துக் கூறியுள்ளது . குதிரைகள் தமிழ்நாட்டிற்கு இறக்குமதியானதை மார்க்கோ போலோ பிற்காலத்தில் கூறியிருக்கிறார் . சங்க காலத்திலேயே குதிரை தமிழ்நாட்டில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதை நீரின்வந்த நிமிர்பரிப் புரவியும் ” என்று வரும் பட்டினப் பாலைவரி குறிப்பிடுகின்றது . காவிரிப்பூம்பட்டினத்தில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. பிற்காலத்தில் காயல்பட்டினத் துறைமுகத்தில் குதிரைகள் கப்பல் வழியாக இறக்குமதியாயின . குதிரைகளில் வெள்ளைநிறக் குதிரைகளைச் சிறப்பாகக் கருதினர் .. ” பால் புரை புரவி நால்குடன் பூட்டி ” என்று பொருநராற்றுப்படை கூறுகின்றது .
பல்புரிந் தியறல் உற்ற நல்வினை
நூலமை பிறப்பின் நீல உத்திக்
கொய்ம்மயிர் எருத்தம் பிணர்படப் பெருகி
நெய்ம்மிதி முனை இய கொழுஞ்சோற் றார்கை
நிரலியைந் தொன்றிய செலவிற் செந்தினைக்
குரல்வார்ந் தன்ன குலவுத்தலை நன்னான்கு
வீங்குசுவல் மொசியத் தாங்கு நுகம் கழீஇப்
பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி
மதியுடை வலவன் ஏவலின் இகுதுறைப்
புனல்பாய்ந் தன்ன வாமான் திண்டேர்க்
-அகம் , 400 ,
நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் செல்வதை விளக்கமாகக் கூறுகின்றது . சங்க காலத்திலேயே புரவி நூல் என்ற ஒரு நூல் குதிரைகளின் இலக்கணம் கூறியதெனத் தெரிகின்றது . நீல மணியாலாகிய நெற்றிச் சுட்டியும் அழகாகக் கழுத்து மயிர் வெட்டப்பட்டும் குதிரைகள் காணப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது . மார்க்கோ போலோ எழுதிய நூலில் சோழநாட்டில் இறக்குமதியான குதிரைகளுக்கு நெய்கலந்த சோறு அளிக்கப்பட்டதும் அதனால் குதிரை கள் விரைவில் மெலிவுற்று , வலிவற்றுப் போவதும் கூறப்பட்டுள்ளது . பொருத்தமற்ற உணவு கொடுத்ததன் காரணமாக குதிரைகளை இழந்து மேலும் மேலும் குதிரைகளை அரேபியாவிலிருந்து வாங்குவதையும் கூறுவதைக் காண்கிறோம் . சங்க காலத்திலேயிருந்தே இத்தகைய பொருந்தா உணவான நெய்கலந்த சோற்றைக் குதிரைக்களித்து வந்த செய்தி ( அகம், 400 ) குறிப்பிடத்தக்கது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
horse
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
காரிகுதிரை காரியொடு மலைந்த – சிறு 110
ஓரிகுதிரை ஓரியும் என ஆங்கு – சிறு 111
விட்டகுதிரை விசைப்பின் அன்ன – குறு 74/1
குதிரை வழங்கி வருவல் – கலி 96/6
அறிந்தேன் குதிரை தான் – கலி 96/7
கோரமே வாழி குதிரை/வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி – கலி 96/26,27
குதிரை உடல் அணி போல நின் மெய்-கண் – கலி 96/28
வியமமே வாழி குதிரை/மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை – கலி 96/31,32
மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை/பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட – கலி 96/32,33
வாதத்தான் வந்த வளிகுதிரை ஆதி – கலி 96/36
உரு அழிக்கும் அகுதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை – கலி 96/37
திரிகுதிரை ஏறிய செல் – கலி 96/39
உருவ குதிரை மழவர் ஓட்டிய – அகம் 1/2
விடு விசை குதிரை விலங்கு பரி முடுக – அகம் 14/18
சில் பரிகுதிரை பல் வேல் எழினி – அகம் 105/10
மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் – அகம் 143/13
கடும் பரி குதிரை ஆஅய் எயினன் – அகம் 148/7
மற படை குதிரை மாறா மைந்தின் – அகம் 233/6
பெரும் படை குதிரை நல் போர் வானவன் – அகம் 309/10
நெடுநெறிகுதிரை கூர் வேல் அஞ்சி – அகம் 372/9
ஊராது ஏந்திய குதிரை கூர் வேல் – புறம் 158/8
ஊராகுதிரை கிழவ கூர் வேல் – புறம் 168/14
செருஉறுகுதிரையின் பொங்கி சாரல் – குறு 385/3
காதலித்து ஊர்ந்த நின் காம குதிரையை/ஆய் சுதை மாடத்து அணி நிலாமுற்றத்துள் – கலி 96/18,19
மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை/வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்-கொல் – கலி 103/53,54
குதிரையோ வீறியது – கலி 96/24
குதிரையோ கவ்வியது – கலி 96/29
பரும குதிரையோ அன்று பெரும நின் – கலி 96/34
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்