சொல் பொருள்
(பெ) 1. கபிலை நிறம், 2. கூகைப் பெடை
ஈனாததும் ஈனும் பருவம் வந்ததும் ஆகிய ஆட்டைக் குரால் என்பது இடையர் வழக்கம்
சொல் பொருள் விளக்கம்
ஈனாததும் ஈனும் பருவம் வந்ததும் ஆகிய ஆட்டைக் குரால் என்பது இடையர் வழக்கம். வெடிப்பாகவும் எடுப்பாகவும் துள்ளித் திரிதல் குறித்த பெயர் இது. குர் > குரு > குருத்து > குருவி இவற்றை எண்ணினால் இதன் அடிப் பொருள் விளக்கமாம். இது தென்னகப் பொதுவழக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dim tawny colour
female of a kind of owl, female of barn owl (tyto alba)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட – குறு 224/4 கபிலைநிறப் பசு படுகின்ற துயரத்தை இரவில் கண்ட கொழு இல் பைம் துணி வைத்தலை மறந்த துய் தலை கூகை கவலை கவற்றும் குரால் அம் பறந்தலை – பதி 44/17-19 திரட்சி இல்லாத பசிய இறைச்சித் துண்டத்தை வைத்த இடத்தை மறந்த பஞ்சுபோன்ற கொண்டையையுடைய ஆண்கூகையைக் கவலைப்படச்செய்து வருத்தும் பெண்கூகையையுடைய பாழ்நிலத்தில் மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில் கூகை சேவல் குராலோடு ஏறி ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/3-5 மணல் மிகுந்த பழமையான ஊரின் அகன்ற நெடிய தெருவில் ஆண்கூகையானது தன் பெடையுடன் செறு நடமாட்டமில்லாத பெரிய நாற்சந்தியில் அச்சம்தோன்றக் குழறுகின்ற ஒலியை எழுப்பும்; எனவே, குரால் ஆந்தையானது கூகை ஆந்தையின் பெண் என்பது தெளிவு. ஆண்கூகையைக் காட்டிலும் பெண் குரால் உருவத்தில் சற்றுப் பெரியது என்பர் பறவையியலார். மேற்கூறிய பதிற்றுப்பத்துக் கூற்றில் துய் தலை கூகை என்று வருவதால், கூகையும், குராலும் பஞ்சுப்பிசிர் போன்ற மென்மையான தலையை உடையன என்பது பெறப்படும். இருப்பினும், குடுமி கூகை குராலொடு முரல – மது 170 ஒராஅ உருட்டும் குடுமி குராலொடு – அகம் 265/19 என்ற அடிகளால், கூகையும், குராலும் குடுமியை உடையன என்று அறியப்படுகிறது. ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை என்பன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள். பார்க்க : ஆண்டலை ஊமன் குரால் கூகை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்