சொல் பொருள்
(வி) 1. உண்ணு, சாப்பிடு, 2. தழும்பு ஏற்படுத்து, 3. தேய்வை ஏற்படுத்து, 4. வற்றிப்போகச்செய், 5. இற்றுப்போகச்செய், 6. அராவு, 7. எரி, 8. சிதைத்து அழி, 9. அரி, 10. வருத்து, 11. மெல்லு,
சொல் பொருள் விளக்கம்
1. உண்ணு, சாப்பிடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
eat, make a scar, abrase, make dry, corrode, file, burn, consume as fire, impair, damage, eat away as white ants, afflict, chew
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் – நற் 322/5 ஊனைத் தின்னுகின்ற பெண்புலியின் வருத்துகின்ற பசியைப் போக்குவதற்கு விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 170 விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும் நிற புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின் நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின் இருள் துணிந்து அன்ன ஏனம் – மலை 245-247 மார்பில் புண் ஏற்பட்டு, மண் தின்ற (மண்ணைத்தோண்டியதால் தேய்ந்துபோன)கொம்போடு, வழியை விட்டு விலகிக் கிடக்கின்ற, கரிய சொரசொரப்புள்ள கழுத்தினையுடைய, இருட்டை வெட்டிப்போட்டதைப் போன்ற காட்டுப்பன்றி அத்த பலவின் வெயில் தின் சிறு காய் – ஐங் 351/1 காட்டு வழியிலுள்ள பலாமரத்தின், வெயில் வற்றிப்போகச் செய்ததால் வெம்பிப்போன சிறிய காயை நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை – பதி 12/20 மண்படிந்த கிழிந்த உடையைக் களைந்த பின்னால் அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன – அகம் 199/8 அரத்தால் அராவப்பட்டுத் தேய்ந்துபோன ஊசியின் திரண்ட முனைடைப் போல எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல் – அகம் 288/5 தீயானது எரித்த கொல்லையில் விளைந்து கதிர் வளைந்த தினைப்புனத்தில் நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல் – புறம் 200/6 உடலைக் குத்தி நிணத்தைச் சிதைத்து அழித்துச் செருக்குக்கொண்ட நெருப்புப்போன்ற தலையைக் கொண்ட நீண்ட வேல் நிலம் தின கிடந்த நிதியமோடு அனைத்தும் – மலை 575 மண் அரிக்கக் கிடக்கும் பொருள்குவியலுடன், அனைத்தையும் வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என காணிய சென்ற மட நடை நாரை பசி தின அல்கும் பனி நீர் சேர்ப்ப – ஐங் 159/1-3 வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை பசி தன்னை வாட்டவும் அங்கேயே தங்கியிருக்கும் குளிர்ந்த கடல்நீர்ப்பரப்பின் தலைவனே மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள் பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து – புறம் 159/7,8 இடுப்பில் வைத்திருந்த பல சிறு பிள்ளைகள் பிசைந்து மெல்லுதலால் உலர்ந்த முலையினையுடையவளாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்