சொல் பொருள்
(வி) 1. சொல், கூறு, அறிவி, 2. விற்பனை செய், 3. கொடு, 4. உணர்த்து, சுட்டு, 5. இடம்பெயர்,
சொல் பொருள் விளக்கம்
1. சொல், கூறு, அறிவி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sell, hawk, give, indicate, shift, move
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து – கலி 1/1,2 ஆறு அங்கங்களையும் அறிந்த அந்தணர்களுக்கு அரிய வேதங்கள் பலவற்றையும் அறிவித்து, தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி, பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன – மலை 413 (பண்டங்களை)விற்றுப் (பண்டமாற்றாகப்)பெற்ற கலப்பு நெல்லின் பலவாறான அரிசியைப் போல, பரி உடை நன் மான் பொங்கு உளை அன்ன அடைகரை வேழம் வெண் பூ பகரும் தண் துறை ஊரன் பெண்டிர் துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே – ஐங் 13 விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரையின் பொசுபொசுவென்ற தலையாட்டம் போன்ற திண்ணிய கரையில் வளர்ந்திருக்கும் கொறுக்கச்சியின் வெண்மையான பூக்களைக் கொடுக்கும் குளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் காதற்பெண்டிர் ஊரே தூங்கும் நள்ளிரவிலும் தூக்கத்தை அறியாதிருப்பர். குருகு இலை உதிர குயில்_இனம் கூவ பகர் குழல் பாண்டில் இயம்ப – பரி 15/41,42 குருக்கத்தி இலைகள் உதிரும்வண்ணம் குயில் கூட்டங்கள் கூவ, சுருதியை உணர்த்துகின்ற குழலும் தாளமும் ஒலியெழுப்பும்போது குறும் பல் கோதை கொன்றை மலர நெடும் செம் புற்றம் ஈயல் பகர மா பசி மறுப்ப கார் தொடங்கின்றே – ஐங் 497/1-3 குறிய பலவான மாலையாய்க் கொன்றை மலர்ந்திருக்க, நெடிய செந்நிறப் புற்றுகளினின்றும் ஈசல்கள் வெளிப்பட, விலங்கினங்கள் தம் பசியை மறக்க, கார்காலம் தொடங்கிவிட்டது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்