Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. உண்டாக்கு, 2. கொண்டிரு, பெற்றிரு, 3. ஈட்டு, சம்பாதி,

2. (பெ) 1. ஆயுதம், கருவி, 2. போர்வீரர்களின் தொகுதி, 3. குதிரைச் சேணம், 4. வாள், 5. யானைகளின் முகபடாம், 6. சமச்சீராகப் பரப்புதல், 7. செய்கருவி, 8. காமக்கணை, 9. காலாட்படை, 10. அரண், கோட்டை, 11. அடுக்கு மெத்தை, 12. வடம், ஆபரணம்,, 13. கலப்பை

சொல் பொருள் விளக்கம்

1. உண்டாக்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

create, bring into existence, have, possess, earn, acquire, arms, weapons, army of soldiers, saddle, sword, Ornamental cloth on the face of an elephant; spreading evenly, instrument, tool, cupid’s arrow, land force in the army, fortress, layers of cushion, chains of a necklace, ornaments, ploughshare

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பனி மிக
புல்லென் மாலை சிறு தீ ஞெலியும்
கல்லா இடையன் போல குறிப்பின்
இல்லது படைக்கவும் வல்லன் – புறம் 331/3-6

குளிர் மிகுதலால்
புல்லென்ற மாலைப்போதில் சிறிய தீக்கடைகோலைக் கடைந்து தீயை உண்டாக்கும்
கல்லாத இடையன் போல தேவையைக் குறிப்பாய் அறிந்து
இல்லாததை உண்டாக்கிக்கொள்ளும் வல்லமையுடையவன்

குவளை குழை காதின் கோல செவியின்
இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் – பரி 11/97,98

குவளை மலரை, குழையணிந்த காதான அழகிய செவியில்
இவள் செருகிக்கொண்டு நான்கு விழிகளை உடையவள் ஆயினாள்

படைப்பு பல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வராயினும் – புறம் 188/1,2

ஈட்டப்படும்செல்வம் பலவற்றையும் ஈட்டி, பலருடனே கூட உண்ணும்
உடைமை மிக்க செல்வத்தையுடையோராயினும்

ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 21,22

வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)ஆயுதங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை

ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் – சிறு 211

(பகை)மறவரின் அணியில் (அச்சமின்றிப்)புகுதலையும், தோற்ற படையினரைப் பொறுத்தலையும்,

விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ – பெரும் 492

விண்(ணுக்குச்) செல்(வது போல் முன் கால்களைத் தூக்கும்)குதிரைகளுடன் பசிய சேணமும் தந்து,

பகைவர் சுட்டிய படை கொள் நோன் விரல் – முல் 77

பகைவரை நோக்கி வாளைப் பிடித்த வலியினையுடைய கையால்

புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை – பரி 11/52

பறவை போல் விரையும் குதிரைகளையும், பொன்னாலான முகபடாம் அணிந்திருக்கும் யானைகளையும்

படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ
புடைபெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள் – கலி 10/10,11

சீராகப் பரப்பப்பெற்ற படுக்கையில் உறங்கும்போது உன்னை அறியாமல் நீ
சற்று விலகிப் படுத்தாலும் தனிமையுணர்வுகொண்டு தவித்துப்போகின்றவள்;

கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி
ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர்
வழூஉ சொல் கோவலர் தத்தம் இன நிரை
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் – கலி 106/1-5

பசுவின் தலையில் கட்டும் கழியும், சூட்டுக்கோலும் வைத்துக் கட்டிய தோல்பையையும்,
ஒன்றோடொன்று கயிற்றினால் கட்டப்பட்ட மண்கலங்களைக் கொண்ட உறியையும் தூக்கிக்கொண்டு
நீண்டிருக்கிற கொன்றைப் பழத்தில் செய்யப்பட்ட இனிய குழலை வாசித்துக்கொண்டவராய்,
கொச்சையான பேச்சுக்களைப் பேசும் கோவலர்கள் தத்தம் மாட்டுக்கூட்டங்களை,
நேரத்தில் வந்த கார் காலத்தில் தோன்றின மழையில் நனைந்த அகன்ற புல்வெளிக்குக் கொண்டுசென்றனர்;

அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்_கால்
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் – கலி 108/5-7

அகன்ற மன்றங்கள் உள்ள ஊர்களிலே மோரை விற்றுக் களைத்துப்போய் திரும்பும்போது,
எள்ளி நகைக்கத்தக்கவன் நான் என்று என் உயிர்போகும்படி காமக்கணைகளை வீசிச்செல்லும்
கொடுமையுடையவளே! உனக்கு என்ன பிழைசெய்தேன், பெண்ணே! நான்?”

நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக
கரை சேர் புள்_இனத்து அம் சிறை படை ஆக – கலி 149/1-2

வரிசையாக மிதக்கும் மீன்படகுகளே யானைகளாக, அலைகள் எழுப்பும் ஒலியே போர்ப்பறை ஒலி ஆக,
கரையிலிருக்கும் அழகிய சிறகுகளைக் கொண்ட பறவைக் கூட்டமே காலாட்படையாக,

நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் – அகம் 35/4

கூரிய முனை கொண்ட நீண்ட வேலை உடைய சிற்றரண் மழவர்கள்

பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை – அகம் 305/5

பல அடுக்கு மெத்தைகளால் உயர்ந்த வளம் மிக்க படுக்கை

பூம் பொறி பல் படை ஒலிப்ப பூட்டி – அகம் 400/11

அழகிய புள்ளிகளையுடைய பல வடங்கள் ஒலிக்கும்படி பூட்டி
அழகிய ஓவியம் பொறிக்கப் பெற்ற பல அணிகலன்களையும் ஆரவாரம் உண்டாகும்படி அவற்றின்
கழுத்திலே பூட்டி

பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே – புறம் 35/25,26

நின் போர்செய்யும் படை தரும் வெற்றியும், உழுகின்ற கலப்பை
நிலத்தின்கண்ணே ஊன்று சாலிடத்து விளைந்த நெல்லினது பயன்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *