சொல் பொருள்
(வி) 1. பலமுறை செய், 2. நெருங்கி அடை, கெழுமு, 3. கற்பி, கற்றுக்கொடு, 4. பழக்கு, 5. செய், 6. வாழச்செய்
சொல் பொருள் விளக்கம்
1. பலமுறை செய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
do repeatedly, get close, approach, teach, instruct, give practice, do, perform, rehabilitate
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 222 ஆம்பல் எனும் பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலகாலும் எழுப்ப குருந்து அவிழ் குறும்_பொறை பயிற்ற பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே – நற் 321/9,10 குருந்த மரங்கள் பூத்து நிற்கும் காட்டை நெருங்கிவர பெருத்த ஆரவாரத்தையுடைய நமது பழமையான ஊரின் மரங்கள் தெரிகின்றன. பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா பெருந்தகாய் கூறு சில – கலி 81/12-15 பெரிய தெருவில் உன்னைச் சீராட்டி உன் செவிலித்தாய்மார் சொல்லிக்கொடுக்க, திருத்தமாக நீ கற்ற சொற்களை நான் கேட்கும்படி, மருந்தறியாமல் துயருற்ற என் நெஞ்சிற்கு அமிழ்தம் உண்டதைப் போல பெருந்தகையே! சிலவற்றைக் கூறுவாயாக! முற்றத்து கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா ஆல்அமர்செல்வன் அணி சால் பெரு விறல் போல வரும் என் உயிர் – கலி 81/7-10 முற்றத்தில் வலுவான சக்கரங்கள் கொண்ட உருட்டு வண்டியைக் கையினால் தள்ளிக்கொண்டு, நடை பழகுகின்ற ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் இறைவனின் அழகு அமைந்த மகனான முருகனைப் போல வருகின்ற என் உயிரே! புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும் அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே அகன் பெரும் சிறப்பின் தந்தை_பெயரன் முறுவலின் இன் நகை பயிற்றி சிறு_தேர் உருட்டும் தளர் நடை கண்டே – ஐங் 403 தான் மணந்த காதலியின் மேல் மட்டுமல்லாது, தன்னுடைய புதல்வனிடத்தும் அன்புகொண்ட உள்ளம், விரிந்து நிற்கிறது – மிகப் பெரிய சிறப்பினைக் கொண்ட தன் தந்தையின் பெயரைத் தாங்கியவன் முறுவலோடுங் கூடிய இனிய நகைப்பினை எழுப்பியவாறு நடை வண்டியை உருட்டியபடியே வரும் தளர்ந்த நடையைக் கண்டு படு பிணம் பிறங்க நூறி பகைவர் கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே – பதி 69/9,10 வெட்டுப்பட்டு விழுகின்ற பிணங்கள் குவிந்து உயரும்படி பகைவர்களைக் கொன்று, அவரின் கெட்டுப்போன குடிமக்களை வாழச்செய்த வெற்றி வேந்தனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்