பரிவு என்பதன் பொருள் அனுதாபம், இரக்கம், அன்பு.
1. சொல் பொருள்
(பெ) 1. அனுதாபம், இரக்கம், 2. அன்பு, 3. அவா, ஆசை,
2. சொல் பொருள் விளக்கம்
பரிவு அன்புப் பொருளது. “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்” என்னும் தொடர் கண்ணப்பன் அன்பைக் காட்டும். அவன் வடிவென ஒன்று இல்லையாம்; அன்பே அவன் வடிவாம்” பரிவின் தன்மை உருவு கொண்டனை யவன்” என்கிறது பதினோராம் திருமுறை.
“பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின், யானைபுக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே”
எனப் பரிவின் சிறப்பை விளக்கும் புறநானூறு (184).
‘அன்பு கெடக் கொள்ளும் பொருள்’ என உரைக்கும் பழைய உரையாசிரியர், ‘பரிவுதவ’ என்றோதி ‘அக்குடிகட்கு வருத்தமிக’ என்றுரைப்பாரும் உளர் என்கிறார்.
இது அடுத்தவரின் சோகத்தினை போக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். பிறரின் துயரினை புரிந்து கொண்டு, அதனை போக்க தன்னாலான செயல்களை செய்வதும் அடுத்தவர்க்கு பரிந்துரைப்பதும் பரிவு எனக்கொள்ளலாம்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
sympathy, pity, compassion, love, affection, kindness, desire
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
1. பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு நாடாது இயைந்த நண்பினது அளவே - நற் 378/10-12 நமக்கு அவன்மேல் அனுதாபம் உண்டாகும்படி அவன் சொன்ன பணிவான சொற்களை நம்பி, ஒலி முழங்கும் குளிர்ந்த நீர்ப்பெருக்கையுடைய கடற்கரைத்தலைவனோடு சிந்திக்காமல் உடன்பட்ட நட்பின் அளவு 2. வரிசை அறியா கல்லென் சுற்றமொடு பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம் போல தானும் உண்ணான் உலகமும் கெடுமே - புறம் 184/8-11 தரம் அறியாத ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு கூடி அன்பு கெடக் கொள்ளும் பொருள் தொகுதியை விரும்பின் யானை புகுந்த வயல் போலத் தானும் உண்ணப்பெறான், உலகமும் கெடும். 3. வதுவை நாள் அணி புதுவோர் புணரிய பரிவொடு வரூஉம் பாணன் - அகம் 56/9,10 திருமணக் காலத்து ஒப்பனையையுடைய புதிய பரத்தையரைச் சேர்விக்க அவாவுடன் வந்த பாணன் பந்தொடு பெயரும் பரிவு இலாட்டி - நற் 140/7 பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி - நற் 378/10 பற்றா_மாக்களின் பரிவு முந்துறுத்து - புறம் 29/18 பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின் - புறம் 184/9 பண் வகையால் பரிவு தீர்ந்து - சிலப்.புகார் 7/9 பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்கு-மின் - சிலப்.வஞ்சி 30/186 பரிவுறு வெம் நெயும் பாகு அடு குழிசியும் - சிலப்.மது 15/209 இறு காலத்து என்னை பரிவு - நாலடி:11 10/4 பசைந்த துணையும் பரிவு ஆம் அசைந்த - நாலடி:19 7/2 பரியாதார் போல இருக்க பரிவு இல்லா - பழ:135/2 ஊர்ந்த பரிவும் இலர் ஆகி சேர்ந்தார் - பழ:386/2 பண் வகையால் பரிவு தீர்ந்து - சிலப்.புகார் 7/9 பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி - மணி 15/66
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்