சொல் பொருள்
(பெ) 1. மலை, 2. பாறை, 3. குவியல், திரள், 4. ஒளி, விளக்கம், 5. மலைத்தொடர்,
சொல் பொருள் விளக்கம்
1. மலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mountain, rock, mass, heap, light, brightness, mountain range
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிறங்கல் என்ற சொல் பெரும்பாலும் மலை என்ற சொல்லுக்கு அடைச்சொல்லாகவே வருகிறது. அவற்றைத் தவிர பிறங்கல் என்று முழுச்சொல்லாக வரும் இடங்களைப் பார்ப்போம். எண்ணரும் பிறங்கல் மான் அதர் மயங்காது – அகம் 8/13 எண்ணற்கரிய குன்றுகளின் பக்கமாகச் செல்லும் மான்களின் நெறிகளில் மயங்கித் திரியாது தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல் வேய் அமை கண் இடை புரைஇ – அகம் 152/22,23 தலையாறு என்னுமிடத்து நிலைபெற்ற மிக உயர்ந்த மலையிடத்திலுள்ள மூங்கிலிற் பொருந்திய கணுக்களின் நடுவிடத்தை ஒத்து வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய – பரி 21/46 வண்டுகள் ஆரவாரித்தற்கிடமான மாலையணிந்த தமது மலையை ஒத்த மார்பின்கண் பூசிய கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் – அகம் 17/15 கடுமை மிக்க ஞாயிற்றின் கதிர்கள் முறுகிய மூங்கில் அடர்ந்த பக்கமலை பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து – பரி 19/59 விளங்கும் பாறைகளின் இடையே இடையே நெறிதவறி புகுந்து திகைத்து காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல் வேய் கண் உடைந்த சிமைய – அகம் 399/16,17 காயும் ஞாயிறு முடுகிய அழகு ஒழிந்த பாறைகளையும் மூங்கில் கணுக்கல் உடைந்த சிகரங்களையும் தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் விண்டு அனைய விண் தோய் பிறங்கல் முகடு உற உயர்ந்த நெல்லின் – புறம் 391/1-3 தண்ணிய நீர்த்துளிகள் பலவற்றையும் சொரிந்து மேகங்கள் முழங்கும் மலை போன்ற வானளாவிய குவியலாய் உச்சி உண்டாக உயர்வுறக் குவ்இத்த நெல்லாகிய கீழ்க்கண்ட இடங்களில் பிறங்கல் என்ற சொல் மலை என்ற சொல்லுக்கு அடைமொழியாக வருவதைக் காணலாம். சில உரையாசிரியர்கள் இந்தச் சொல்லுக்கு, ‘பிறங்குதலையுடைய’ எனப் பொருள் கொள்கின்றனர். பிறங்குதல் என்பது விளங்குதல் என்றும் விளக்குகின்றனர். இவை எல்லாவற்றிலும் ‘உயர்’என்ற அடைமொழியும் இருக்கக் காண்கிறோம். எனவே, மிக உயரமான மலைகளே பிறங்கல் மலை எனப்படுகின்றன. உச்சியில் பெரிய கற்பாறைகளைக் கொண்ட மலைகள் வெயிலடிக்கும்போது ‘பளிச்’ என்று இருக்கும். அவற்றைப் பிறங்கல் மலை என்று கொண்டனர் எனலாம். பிறங்கல் என்ற தனிச்சொல்லுக்குப்பாறை என்ற பொருள் அமைகிறது என்பதனை இங்கு பொருத்திப் பார்க்கவேண்டும். மேலும், ’பிறங்கல் மலை இறந்தோரே’ என்று மலையைக் கடந்துசெல்வதைப் பற்றிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. எனவே, இது தனி மலையாக இருக்கமுடியாது. ஒரு நீண்ட மலையாகவோ, அல்லது மலைகளின் அடுக்காகவோ இருக்கவேண்டும். எனவே, பிறங்கல் மலை என்பதற்கு அடுக்கடுக்கான நீண்ட மலைத்தொடர் (mountain range) என்று பொருள் கொள்வது பொருத்தம் எனத் தோன்றுகிறது. கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அகம் 393/1 என்ற அகநானூற்று அடி இதனை உறுதிப்படுத்துகிறது. கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே – நற் 28/9 விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே – குறு 144/7 கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 253/8 வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 285/8 கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – ஐங் 318/5 குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே – ஐங் 387/6 விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/15 நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 185/13 கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 247/13 கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 249/19 கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 313/17 வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே – அகம் 321/17 கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அகம் 393/1
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்