புழுக்கல் என்பது வேகவைத்த உணவு
1. சொல் பொருள்
(பெ) 1. வேகவைத்தது, அவித்தது, 2. சோறு
2. சொல் பொருள் விளக்கம்
ஆவியில் வேக்கவைத்தலை அவித்தல் என்கிறோம். அவ்வாறு அவித்துச் சமைக்கப்பட்ட உணவு புழுக்கல் எனப்படுகிறது. புழுங்கலாக வேகவைத்த உணவு புழுக்கல் எனப்படுகிறது. இதுவே புழுக்கு என்றும் சொல்லப்படுகிறது. இது இறைச்சி உணவாகவோ அல்லது வேறு தாவர உணவாகவோ இருக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
anything that is slightly boiled, cooked rice
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பரல் வறை கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை – பொரு 113-116
(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்
விரல் என்னும்படி நெடுகின, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)வேகவைத்ததை(சோற்றை)யும்,
பருக்கைக் கற்கள் போன்று (நன்கு)பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி
உண்டபொழுதின்
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்/எலி வான் சூட்டொடு மலிய பேணுதும் – நற் 83/5,6
ஆட்டிறைச்சி கலந்த நெய்யிட்டுச் சமைத்த வெண்சோற்றை,
வாராது அட்ட வாடூன் புழுக்கல்/வாடா தும்பை வயவர் பெருமகன் – பெரும் 100,101
(கஞ்சியை)வடிக்காமல் பொங்கிய (மான் கறியின்)உப்புக்கண்ட(ம் சேர்ந்த) ஊன் சோற்றை
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல்/அரும் கடி தீம் சுவை அமுதொடு பிறவும் – பெரும் 474,475
ஆராய்ந்து பொறுக்கிக்கொண்ட அரிசியால் ஆக்கின திரண்ட நெடிய சோற்றையும்,
உப்பு இலாஅ அவி புழுக்கல்/கை கொண்டு பிறக்கு நோக்காது – புறம் 363/12,13
உப்பில்லாமல் வேகவைத்த சோற்றை,
மூழ்ப்ப பெய்த முழு அவிழ் புழுக்கல்/அழிகளின் படுநர் களி அட வைகின் – புறம் 399/9,10
மூடிவைத்து அவித்து முழுதும் வெந்த சோறும்
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் – அகம் 393/16
இடையர்கள் புழுக்கி ஆக்கிய பொங்கி மலர்ந்த சோற்றை
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி – புறம் 168/9
மானின் தசையை வேகவைத்த புலால் நாறும் பானையின் (கொழுப்புத்தோய்ந்த)
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்/பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 103,104
அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
கட்டி புழுக்கின் கொங்கர் கோவே – பதி 90/25
சர்க்கரைக் கட்டியுடன் அவரை விதைகளை வேகவைத்து உண்ணும் கொங்கர்களின் அரசனே!
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு – அகம் 136/1
குற்றம் நீங்க, இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய நெய் மிக்க வெண்மையான சோற்றை
யாமை புழுக்கின் காமம் வீட ஆரா – புறம் 212/3
ஆமையின் அவித்த இறைச்சியுடன் ஆசைதீர அவ்வுழவர்கள் உண்டு,
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வு-உற்று – பெரும் 195
அவரை விதையின் (தோலுரித்த)வெண்மையான பருப்பை வேகவிட்டு, துழாவுதலால்
வயல் ஆமை புழுக்கு உண்டும் – பட் 64
வயல் ஆமையைப் புழுக்கின இறைச்சியைத் தின்றும்,
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 119/9
வலிய வில்லையுடைய மழவர் (மணமுண்டாகும்படி) ஊனைப் புழுக்கி உண்ணும்
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர் – அகம் 136/21
‘மிகுந்த புழுக்கம் எய்திய உனது பிறை போன்ற நெற்றியில் புள்ளிகளாய் அரும்பிய வியர்வைத் துளிகளை
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 159/10
தழைமாலையைத் தலையில் சூடியவராய் – ஊனை வேகவைத்து உண்ணுகின்ற
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் – அகம் 172/13
சந்தன விறகினாலான தீயில் ஊனுடன் கூடிய சோற்றைச் சமைத்து உண்ணும்
புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை – அகம் 309/6
அதன் புலாலைப் புழுக்கி உண்ட உயர்ந்த இடம் அகன்ற பாறையில்,
ஊன் புழுக்கு அயரும் முன்றில் – அகம் 315/17
ஊனை வேகவைத்து உண்ணுகின்ற முற்றத்தைக் கொண்ட
எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே/வருநர்க்கு வரையாது பொலன் கலம் தெளிர்ப்ப – பதி 18/2,3
அறுப்பீராக, தின்பதற்கான ஊன்கறியை! உலையில் ஏற்றுவீர்களாக வேகவைக்கவேண்டியவற்றை!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்