சொல் பொருள்
(பெ.அ) உரு, வடிவம், அளவு ஆகியவற்றில் அதிகமான
(பெ) பெரிதானவை,
சொல் பொருள் விளக்கம்
உரு, வடிவம், அளவு ஆகியவற்றில் அதிகமான
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
big, large, immense
something that is big, great, huge, immense, large
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய இரும் சுவல் வாளை பிறழும் ஊர – நற் 400/3,4 நெல்லறுப்போர் களத்தில் குவித்த நெற்கதிர்குவைக்கு அயலாக, பெரிய கரிய பிடரியையுடைய வாளைமீன் துள்ளிப்பாயும் மருதநிலத்தலைவனே! அளிய பெரிய கேண்மை நும் போல் சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் – நற் 345/6,7 கருணை செய்தலையுடைய பெரிய நட்பினையுடைய உம்மைப் போல, நற்பண்புகளை எதிரேற்றுப் போற்றும் செம்மையான கொள்கையாரும் பெரிய கற்று இசை விளக்கி – மது 767 பெரிய நூற்களைக் கற்று, (நின்)புகழைப் பலரறியச்செய்து, சிறியிலை வேம்பின் பெரிய கொன்று – நற் 103/2 சிறிய இலையையுடைய வேப்பமரத்தின் பெரிய கிளைகளை முறித்துப்போட்டு பெரிய அல்லவோ பெரியவர் நிலையே – நற் 266/9 மிகுந்த பெருமை உடையன அல்லவோ பெரிய குடிப்பிறந்தவர் இயல்புகள்?. வைகறை 5 கடல் மீன் தந்து கானல் குவைஇ ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி பெரிய மகிழும் துறைவன் – நற் 388/5-9 அதிகாலையில் தாம் பிடித்த கடல் மீன்களைக் கொண்டுவந்து, கடற்கரைச் சோலையில் குவித்து, உயர்ந்த பெரிய புன்னைமரத்தின் வரிவரியான நிழலில் தங்கியிருந்து தேன் மணக்கும் தெளிந்த கள்ளைச் சுற்றத்தாரோடு நிரம்பக் குடித்து, பெரிய அளவில் மகிழ்ச்சிகொள்ளும் துறையைச் சேர்ந்தவனாகிய காதலன் தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு அரியம் ஆகிய_காலை பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/5-7 தொழுது காணும் பிறையைப் போல உமக்குத் தோன்றி, நாம் உமக்கு அரியவளாய் இருந்த பொழுதில் பெரிதான வருத்தத்தைப் பொறுத்துக்கொண்டிருந்தீரோ? வருந்துகிறேன் நான். அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை குறிய ஆகும் துறைவனை பெரிய கூறி யாய் அறிந்தனளே – குறு 248/5-7 அடப்பங்கொடி படர்ந்த மணற் குவியல்கள் பரவ, உயர்ந்த பனைமரம் குட்டையாகிப் போகும் கடல் துறையையுடைய தலைவனைப் உயர்வான புகழ்மொழிகள் கூறி அன்னை அவனைப் புரிந்துகொண்டாள் பெரிய கூறி நீப்பினும் பொய் வலை படூஉம் பெண்டு தவ பலவே – ஐங் 283/4,5 பெற்றோர் வாய்மையுடைய உறுதிமொழிகள் பலவற்றைக் கூறி விலக்கினாலும், காதலரின் பொய்மொழிகளான வலையில் விழும் பெண்கள் மிகவும் அதிகமானோர். புரை_வயின் புரை_வயின் பெரிய நல்கி – பதி 15/37 உயர்ந்தோர்க்கெல்லாம் நிறையப் பொருள் கொடுத்து பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற அரிய என்னாது ஓம்பாது வீசி – பதி 44/3,4 எவ்வளவு பெருமையுடையதாயினும், போரில் வெற்றியடைந்து பெற்றவைகளை, மிகவும் அரியவை என்று எண்ணாமல், தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் வாரி வழங்கி, சிறியிலை வேலம் பெரிய தோன்றும் புன்_புலம் வித்தும் வன் கை வினைஞர் – பதி 58/14,15 சிறிய இலைகளைக் கொண்ட வேல மரங்கள் மிகுந்த எண்ணிக்கையில் இருக்கும் புன்செய் நிலங்களை உழுது விதைக்கும் வலிமையான கைகளையுடைய உழவர்கள் வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூ பெரிய சூடிய கவர் கோல் கோவலர் – அகம் 264/3,4 வரிகளையுடைய வெண்காந்தளின் வளைந்த குலையிலுள்ள சிறந்த பூக்களை மிகுந்த அளவில் சூடிக்கொண்ட கவர்த்த கோலினையுடைய ஆயர்கள் சிறிய கள் பெரினே எமக்கு ஈயும் மன்னே பெரிய கள் பெறினே யாம் பாட தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே – புறம் 235/1-3 சிறிதளவு மதுவைப் பெறின் எங்களுக்கே தருவன் பெரிய அளவினையுடைய மதுவைப் பெற்றானாயின் அதனை யாம் உண்டு பாட எஞ்சியதைத் தான் விரும்பி நுகர்வான். அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின் – மது 394 (இவ்வாறு தடுத்தற்கு)அரியனவும், எண்ணிறந்தனவுமாகிய நால்வகைப் படையும் வந்து போகையினால் சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய – புறம் 205/7 சிறியனவும் பெரியனவும் ஆகிய புழைகளைப் போக்கற விலக்கிய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்