Skip to content

சொல் பொருள்

(பெ) 1. (துயரத்தால்)மனம்கலங்குதல், மனக்கலக்கம், 2. உன்மத்தம், 3. மனக்குழப்பம், மனமயக்கம், 4. அறிவின்மை, மடமை, 5. மனம்கிறுகிறுத்தல், மனம்மயங்குதல், 6. மனம்பேதலிப்பு, 7. (இடையூறினால் அடையும்) மனச்சஞ்சலம், 8. (அச்சத்தினால் ஏற்படும்)திகில், 9. வருத்தம், தீராத்துயரம், 10. மகிழ்ச்சியினால் திக்குமுக்காடிப்போதல்

சொல் பொருள் விளக்கம்

(துயரத்தால்)மனம்கலங்குதல், மனக்கலக்கம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

depression, dismay, delirium, confusion, misunderstanding, lack of wisdom or intelligence, stupidity, ignorance, getting charmed or allured, discomposure of mind, perturbation, fright, panic due to fear, great distress, choking with extreme joy, Fail to perform adequately due to tension or agitation

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த
ஆதிமந்தி போல
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/19-21

அழுத கண்ணினளாகிய, தன் கணவனை இழந்த
ஆதிமந்தியைப் போல
துன்பத்தைச் சொல்லி மனம்கலங்குதல் பெரிதும் அடைவது

அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும – கலி 129/21,22

உள்ளம் உடைந்து, ஊராருக்கும் தெரிந்துவிட்ட வருத்தம் மிகுந்திட,
மிகவும் பித்துப்பிடித்தவளாய் ஆவதைத் தடுத்து நிறுத்துவாய் பெருமானே!

கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை
பாண் ஆதரித்து பல பாட அ பாட்டு
பேணாது ஒருத்தி பேது உற – பரி 7/65-67

சிவந்த கண்களின் இயல்பினைக் கண்டு, தலைவன் பாராட்டி, தலைவியின் அழகிய தன்மையுள்ள பார்வையை
இசைப்பாட்டால் பாட விரும்பி, பற்பல பாடல்களைப் பாட, அந்தப் பாடல்களைப்
பாடுபவனின் கருத்தை அறியாமல் மற்றொருத்தி (தன்னைக் குறித்ததெனக் கருதியவளாக) தான் மனமயக்கம் கொள்ள

காதலாய் நின் இயல் களவு எண்ணி களி மகிழ்
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க – பரி 18/11,12

“காதலியே! உன்னுடைய மேனிவனப்பைக் களவாடிவிட்டதாக எண்ணிக் களிப்புற்றதாய் மகிழ்ந்து
அறிவின்றி இருக்கும் இந்த மயிலைக் கண்டு நான் நோக்க

பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின்
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/3,4

மயங்க வைக்கும் மென்மையான மொழியும், பெண்மான் போன்ற அழகிய பார்வையும் கொண்ட
மகளிரின் பற்கள் போல் மணக்கின்ற காட்டு முல்லை அரும்புகள் மலரவும்,

மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் நின் கண்டார்
பேது உறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/17,18

கண்டவர் காதல்கொள்ளும் மான் போன்ற பார்வையைக் கொண்ட இளம்பெண்ணே! உன்னைக் கண்டவர்
மனம் பேதலித்துப்போவர் என்பதனை நீ அறிவாயோ? அறியமாட்டாயோ?

குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி
நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய
பூத்த பொங்கர் துணையொடு வதிந்த
தாது_உண்_பறவை பேது உறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண் வினை தேரன் – அகம் 4/8-12

வளைந்த தலையாட்டத்தால் பொலிவுற்ற, கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள்
நரம்புகளைச் சேர்த்தது போன்ற, வளைந்த கடிவாளத்துடன் விரைந்து ஓடுகின்ற,
பூத்திருக்கும் சோலைகளில் துணையோடு தங்கி வாழும்
பூந்தாது உண்ணும் பறவை(வண்டுகள்) மனச்சஞ்சலமடைவதை(எண்ணி) அஞ்சி,
மணிகளின் நாவுகளைச் சேர்த்துக்கட்டிய, சிறந்த வேலைப்பாடுள்ள, தேரையுடைவன்

யாவரும் விழையும் பொலம் தொடி புதல்வனை
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி
பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை
வருக மாள என் உயிர் என பெரிது உவந்து
கொண்டனள் நின்றோள் கண்டு நிலை செல்லேன்
மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை
நீயும் தாயை இவற்கு என யான் தன்
கரைய வந்து விரைவனென் கவைஇ
களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா
நாணி நின்றோள் நிலை கண்டு யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந – அகம் 16/5-17

அனைவரும் விரும்பும் பொற்கொடி அணிந்த நம் புதல்வனைத்
தேர்கள் ஓடும் தெருவில் தனியனாய்க் கண்டு
கூரிய பற்களைக் கொண்ட இளம்பெண் கிட்டச் சென்றவளாய், ஒருவருமே
பார்ப்பவர்கள் இல்லாததால், தோற்ற ஒப்புமையைக் கருதியவளாய்ப் பாசத்துடன் தூக்கி
பொன் அணிகலன்களைச் சுமந்த, பூண்கள் தாங்கிய தன் இளம் கொங்கைகளில் –
“வா என் உயிரே” எனப் பெரிதும் உவந்து-
அணைத்துக்கொண்டவளாய் நின்றவளைப் பார்த்து, நின்ற இடத்தில் நிலைகொள்ளாமல்,
“மாசற்ற இளையவளே, எதற்குத் திடுக்கிட்டுத் திகிலடைகிறாய்,
நீயும் தாயாவாய் இவனுக்கு” என்று சொல்லி நான் பாராட்டிக்
கூறி, விரைவாகச் சென்று அவளை அணைத்துக்கொள்ள,
கையும் களவுமாய்ப் பிடிபட்டவரைப் போல் தலைகவிழ்ந்து, நிலத்தைக் கீறிக்கொண்டு
நாணி நின்றவளின் நிலைகண்டு, நானும்
அன்புடன் உபசரித்தேன் அல்லவா! தலைமகனே!

வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப
எந்தை ஆகுல அதற்படல் அறியேன் – புறம் 238/10,11

வெவ்விய திறலையுடைய கூற்றம் பெரிய துயரத்தை விளைவிக்க
என் தந்தைபோன்றவன் அதினால் இரந்துவிட்டான் என்பதை அறியேனாய் வந்தேன்

திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு
எய்த சென்று செப்புநர் பெறினே
இவர் யார் என்குவள் அல்லள்
——————- ————————– ———-
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – நற் 6/4-11

தேமல் படிந்த அல்குலை உடையவளும், பெரிய தோளினையுடையவளுமாகிய தலைவியிடத்தே
கிட்டிச் சென்று உரைப்பவாரைப் பெற்றால்,
“இவர் யார்” என்று சொல்பவள் அல்லள் அவள்,
———————— ———————— ————-
கரிய பலவாகிய தழைத்துத் தாழ்ந்த கூந்தலாள்
பெரிதும் (மகிழ்ச்சியில்)திக்குமுக்காடிப்போவாள் நான் வந்துவிட்டேன் என்று:

மனத்துயரினால் மட்டுமன்றி, மனமகிழ்ச்சியினாலும் பேதுறல் நடக்கும் என்பதற்கு இது ஒரு சான்று. பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – பலவித உரைகள் பின்னத்தூரார்: களிப்பினாலே பெரிதும் மயக்கமெய்தா நிற்பாள் ச.வே.சுப்பிரமணியன் : எத்தகைய மகிழ்ச்சி அடைவாள் நாம் வருகின்றோம் என்று தெரிந்தால் இராமையா பிள்ளை: மகிழ்ச்சியால் பெரும் மயக்கத்தை அடைவாள், நான் வந்துள்ளேன் என்பதை எண்ணி
கு.வெ.பாலசுப்ரமணியன் : மகிழ்ச்சியால் பெரிதும் மயக்கம் அடைவாள், யாம் வந்துள்ளேம் என்று தெரிந்தால்

பேது என்ற சொல் சங்க இலக்கியங்களில் 22 முறை வருகிறது. அந்த அனைத்து இடங்களிலும் அது ‘உறு’ என்ற
சொல்லை வினையாகவோ அல்லது துணைவினையாகவோ கொண்டு வருகிறது.

பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – நற் 6/11

பெரும் பேது உறுதல் களை-மதி பெரும – கலி 129/22

ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/21

பெரு விதுப்பு உறுவி பேது உறு நிலையே – அகம் 299/21

இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும் – அகம் 310/6

வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப – புறம் 238/10

அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர் – புறம் 336/7

ஆகிய இடங்களில் ‘பேது’ என்ற சொல் ‘பெரும்’ என்ற அடைமொழி தாங்கி வருகிறது. அந்த இடங்களில்
‘உறு’ என்ற சொல் இதற்கு வினைச்சொல்லாக வந்திருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.

யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனை – நற் 88/1

காதலர் அகன்று என கலங்கி பேது உற்று – நற் 109/2

ஊதை அம் குளிரொடு பேது உற்று மயங்கிய – குறு 197/3

எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு – குறு 358/2

பேணாது ஒருத்தி பேது உற ஆயிடை – பரி 7/67

பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை – பரி 18/12

பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் – கலி 27/3

பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின் – கலி 28/9

பேது உறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/18

பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் – கலி 56/28

தாது_உண்_பறவை பேது உறல் அஞ்சி – அகம் 4/11

மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை – அகம் 16/12

ஆதிமந்தி போல பேது உற்று – அகம் 45/14

ஆதிமந்தி பேது உற்று இனைய – அகம் 76/10

பேது உற்றிசினே காதலம் தோழி – அகம் 135/6

ஆகிய இடங்களில் ‘பேது’ என்ற சொல்லுக்கு ‘உறு’ என்ற சொல் ஒரு துணைவினையாக (verbaliser) நின்று ’பேதுறு’என்ற வினைச்சொல்லை ஆக்குகின்றது என எடுத்துக்கொள்ளலாம். தமிழ்ப்பேரகராதியும் (Tamil Lexicon) ’பேது’ என்பதைப் பெயர்ச்சொல்லாகவும், ‘பேதுறு – தல்’ என்பதை வினைச்சொல்லாகவும் தனித்தனியாகக் கையாள்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *