சொல் பொருள்
(பெ) 1. பொங்குதல், 2. பஞ்சுப்பொதி,
சொல் பொருள் விளக்கம்
பொங்குதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
swelling, ebbing
a bunch of white cotton
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை அகல் இரு விசும்பில் துவலை கற்ப – நெடு 19,20 மழை பெய்து ஓய்ந்த பின் மேலெழுந்த, (நுரை)பொங்குதலை(ப்போன்ற) வெண்ணிற மேகங்கள் அகன்ற பெரிய ஆகாயத்தில் சிறு தூறலாகத் தூவ மந்தி காதலன் முறி மேய் கடுவன் தண் கமழ் நறை கொடி கொண்டு வியல் அறை பொங்கல் இள மழை புடைக்கும் நாட – ஐங் 276/1-3 பெண்குரங்கின் காதலனான, இளந்தளிர்களை மேயும் ஆண்குரங்கு குளிர்ச்சியுள்ள மணங்கமழும் நறைக்கொடியினைக் கொண்டு அகன்ற பாறையில் படிந்திருக்கும் பொங்கிவரும் நுரை போன்ற வெண்மையான மேகத்தினை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே! பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி விண்டு சேர்ந்த வெண் மழை போல – பதி 55/14,15 மழையைப் பெய்து உலகைக் காத்த பின்பு, பஞ்சுப் பிசிறுகளாய்ப் பொங்கி மேலெழுந்து, மலை உச்சியை அடையும் வெண் மேகத்தைப் போல, தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் – அகம் 129/7-10 தாழியிடத்தே தழைத்த கொழுவிய இலையையுடைய பருத்திச் செடியின் பருத்த வயிற்றினையுடைய இளங்காயைப் பேடைகட்கு ஊட்டி ஆண்பறவைகள் பிளந்து போகட்ட பஞ்சினையுடைய வெள்ளிய கொட்டையை வறுமையுற்ற மகளிர் வைத்துண்ணும் உணவாகச் சேர்க்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்