Skip to content

சொல் பொருள்

(வி) 1. கடல் கொந்தளி, 2. மிகு, 3. மயிர் சிலிர்,  4. நீர் முதலியன மேலெழு, 5. துள்ளு, 6. பொலிவுறு, 

மேலெழுதல், உள்ளம் கிளர்ந்து மகிழ்வது, கோழி இறகு

சொல் பொருள் விளக்கம்

பொங்கு என்பது மேலெழுதல் ஆகும். பொங்கி வழிதல், பொங்கல் என்பவை எண்ணுக. உள்ளம் கிளர்ந்து மகிழ்வதும் பொங்குதல் எனப்படும். பொங்குமாகடல் என்பது குற்றால அருவி மேல் நீர் நிலை. கருவூர் வட்டாரத்தார் கோழி இறகைப் பொங்கு என்கின்றனர். சோளத்தின் மேல் உள்ள தோட்டைச் சொங்கு என்பது முகவை, நெல்லை வழக்கு. இதனை எண்ணலாம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

foam and rage as sea, increase, stand on end as hair or mane, rise in the level as backwaters, leap, jump, be bright, attractive

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை – நற் 35/1

பொங்கி எழுகின்ற அலைகள் மோதி ஒதுக்கிய நீண்ட மணல் பரந்த கரையில்

தடம் தாள் தாழை குடம்பை நோனா
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி
உருள் பொறி போல எம் முனை வருதல் – நற் 270/1-4

அகன்ற தாளையுடைய தாழையின் பகுதிகளாலே உண்டாக்கப்பட்ட எம் குடிலின்கண் பொறுக்கமுடியாதபடி,
சோலையில் கமழும் மலர்களைச் சூடியதால் வண்டுகள் வீழும் நறுமணமுள்ள
இருள் போன்ற கூந்தலில் மிக்க துகள் படிய
உருளும் இயந்திரம் போல எம்முன் வருதல்

மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி – குறு 90/3,4

முகிலின் பெரிய மழை விழுந்ததாக, சிலிர்த்த மயிரையுடைய
ஆண்குரங்கு தொட்டவுடன் வீழ்ந்த பூ மணக்கும் பலாப்பழத்தை

பொங்கு கழி நெய்தல் உறைப்ப – ஐங் 186/3

நீர் மேலெழுந்து வரும் கழியின் நெய்தல் பூக்கள் நீர்த்துளிகளை உதிர்க்க

பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன் – அகம் 106/2

நெற்பொரி தெரித்தால் போன்று துள்ளும் பல சிறிய மீன்களை

என் அரை
துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை
புகை விரிந்து அன்ன பொங்கு துகில் உடீஇ – புறம் 398/18,20

என் இடையில்
சிதர்ந்து நார்நாராய்க் கிழிந்திருந்த உடையை நீக்கி, தன் அரையில் உடுத்திருந்த
புகையை விரித்தாற் போன்று பொலிவுறும் உயர்ந்த உடையைத் தந்து என்னை உடுப்பித்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *