சொல் பொருள்
1. (வி) 1. கல், மரம், உலோகம் ஆகியவற்றில் உருவம், எழுத்து ஆகியவற்றைச் செதுக்கு, வெட்டு, 2. எழுது, வரை, சித்தரி, 3. முத்துமுத்தாகத் தோன்று/அரும்பு,
2. (பெ) 1. உடலில் காணப்படும் நலமான குறி, 2. மயில் தோகையிலுள்ள கண், ஆகுபெயராகப் பீலியை உணர்த்தும், 3. திரட்சி, 4. முத்திரை, இலச்சினை, 5. ஐம்புலன்களில் ஒன்று, 6. விலங்கு, பறவை ஆகியவற்றைச் சிக்கவைக்க வைக்கப்படும் கருவி, 7. கோழி, மான், போன்ற பறவை, விலங்குகள் ஆகியவற்றின் மேனியில் காணப்படும் புள்ளி, 8. தேமல், சுணங்கு, 9. நல்லபாம்பின் படத்திலுள்ள புள்ளிகள், 10. புலி போன்ற விலங்குகளின் மேனியில் உள்ள வரி, 11. எந்திரம், 12. மூட்டு, 13. தீப்பொறி, தீயின் துகள், 14. ஒளிர்வு,
சொல் பொருள் விளக்கம்
பார்க்க மான்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
inscribe, engrave, impress, stamp, write, delineate, paint, sketch, appear as pearls, auspicious mark on the body, spot on the peacock’s tail, roundness, rotundity, stamp, seal, signet, organ of sense, trap, spot, speck, dot, beauty spot on the body of a person, especially ladies, spots on the hood of a cobra, stripe, machine, joint, spark, brightness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் – சிறு 48,49 வட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைச்) செதுக்கிய கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை – மது 416 சந்தனக்குழம்பால் எழுதப்பட்ட சுணங்கு தோன்றின இளைய முலைகளையும், நெய் துழந்து அட்ட விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி சிறு நுண் பல் வியர் பொறித்த குறு நடை கூட்டம் வேண்டுவோரே – நற் 41/7-10 நெய் பெய்து சமைத்த கொழுத்த தசையிலிருந்து எழும் மணமுள்ள புகை படிந்த நெற்றியில் சிறிய நுண்ணிய பல வியர்வைத் துளிகள் முத்துமுத்தாக அரும்ப குறுகுறுவென நடக்கும் நடையினையுடைய உனது உறவை விரும்பும் உன் காதலர் ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் செம் பொறி வாங்கிய —————– ————— வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 104-106 ஆரத்தைத் தாங்கிய அழகுடைய பெரிய மார்பிடத்தே கிடக்கின்ற உத்தம இலக்கணமாகிய சிவந்த மூன்று வரிகளையும் தன்னிடத்தே வந்து விழும்படி வாங்கிக்கொண்ட,——– வளவிய புகழ் நிறையப்பெற்று, வளைந்து நெளிந்து(உருண்டு திரண்ட) நிமிர்ந்த தோள்கள் பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ – திரு 122 பல பீலியையுடைய மயில் வெற்றிக் கொடியிலிருந்து அகவ, புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13 புல்லிய கொடியையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெண்ணிறப் பூ புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து தகடு கண் புதைய கொளீஇ – நெடு 126,127 புலியின் உருவமுத்திரை பொறிக்கப்பட்ட பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டம் போன்ற தகடுகளால் நடுவுவெளியான இடம் மறையும்படி கோக்கப்பட்டு புலி பொறி போர் கதவின் திரு துஞ்சும் திண் காப்பின் – பட் 40,41 புலிச் சின்னத்தையும் (பலகைகள் தம்மில் நன்கு)பொருதும் (இரட்டைக்)கதவுகளையும் (உடைய), செல்வம் தங்கும் திண்மையான மதிலையும்(உடைய), கயிறு பிணி குழிசி ஓலை கொண்மார் பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/7,8 கயிற்றால் பிணித்தலையுற்ற குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கோடற்கு அக்குடத்தின் மேல் இட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும் அவ்வோலையைத் தேரும் மாக்கள் அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும் பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும் – பட் 101,102 நண்டுகளை அலைக்கழித்தும், தொடர்ந்து வரும் அலைகளை மிதித்து விளையாடியும், (ஈர மணலில்)உருவங்களை உருவாக்கியும்; ஐம்பொறிகளால் நுகரும்பொருள்களை நுகர்ந்து மயங்கியும் விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி புழைதொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் அரும் பொறி உடைய ஆறே – மலை 193-195 விளைந்த (தினைப்)புனத்தை (பன்றிகள்)சிறிது சிறிதாக அழித்து இல்லாமலாக்கிவிடுவதால், (அப்)பன்றிகளுக்குப் பயந்து, (அவை நுழையும்)ஒடுங்கிய வழிகள்தோறும் மாட்டிவைத்த பெரிய கல் பலகையால் செய்த அடார் (என்னும்)சிறந்த பொறிகளை உடையன வழிகள், அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி காமரு தகைய கான வாரணம் – நற் 21/7,8 அரித்தெழும் குரலையுடைய தொண்டையினைக் கொண்ட அழகிய நுண்ணிய பலவான பொறிகளைக் கொண்ட காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல் புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன் பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி புன் புறா உயவும் வெம் துகள் இயவின் – நற் 66/3-5 தனித்திருந்த நீண்ட கிளையில் ஏறி, தன் பெடையை நினைத்து, தன் புள்ளிகள் விளங்கும் பிடரிமயிர் மணங்கமழத் தேய்த்துவிடும் புல்லிய புறா வருந்தும் வெம்மையான புழுதியையுடைய காட்டுவழியில் பொறி வரி வானம் வாழ்த்தி பாடவும் – அகம் 67/1,2 புள்ளிகளையும் வரிகளையுமுடைய வானம்பாடிப்புள் பாடவும் பல் பொறி சிறு கண் யானை திரிதரும் – ஐங் 355/3,4 பல புள்ளிகளையும் சிறிய கண்களையும் கொண்ட யானைகள் நடமாடும் தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின் புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து – பதி 74/8-10 அலைந்துதிரிவோர் பிடித்துக்கொண்டு வந்த பரவலான பளிச்சென்ற புள்ளிகளையுடைய, கிளைத்துப் பிரிந்த கோலைப் போன்ற பிளவுபட்ட கொம்பினையுடைய, புள்ளி மானின் தோலை உரித்து, அதினின்றும் ஊனை நீக்கி, செவிமறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை – கலி 101/27 காதில் மச்சம் உள்ள, இடையர்கள் நேர்ந்துவிட்ட, மின்னும் நுண்ணிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட வெள்ளைக்காளையின் உறு பகை பேணாது இரவின் வந்து இவள் பொறி கிளர் ஆகம் புல்ல – நற் 55/4,5 நேரக்கூடிய தீங்குகளை எண்ணிப்பாராமல், இரவில் வந்து இவளின் புள்ளித்தேமல் படர்ந்த மார்பகத்தைத் தழுவிச்செல்ல பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் – நற் 75/2,3 அழகிய புள்ளிகள் பெற்று விளங்குகின்ற நஞ்சைக் கக்கும் அகன்ற படத்தையுடைய பாம்பு உயிர்களைக் கொல்வது போன்று பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை – நற் 104/1 அழகிய வரிகளையுடைய புலியின் பிளந்த வாயையுடைய ஆண் இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி உருள் பொறி போல எம் முனை வருதல் – நற் 270/3,4 இருளைப் போன்ற கூந்தல்களில் உள்ள மிகுதியான பூந்துகள்களில் மூழ்கியெழுந்து கீழே விழுந்து, உருளும் எந்திரத்தைப் போல எம்மிடத்தில் வருதலையுள்ள எனையதூஉம் உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் பொறி அறு பிணை கூட்டும் துறை மணல் கொண்டு வம்மோ தோழி – நற் 363/3-6 சிறிதளவும் மேற்கொண்டுள்ள தொழிலில் தளர்ச்சியடையாமல், சோர்வின்றி இருக்கும் கம்மியன் மூட்டுகள் அற்றுப்போனவிடத்தில் அவற்றைச் சேர்த்து வார்ப்புச் செய்ய உருக்குமண்ணைக் கொண்டு வருவீராக! தோழியே! பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிர ———————— —————————– தொழில் புகல் யானை நல்குவன் பலவே – பதி 40/28-31 பாகரின் ஏவுதலின்படி, கால் மிதித்து எழுகின்ற தூசியின் ஒளிவிடும் துகள்கள் தீப்பொறி போலச் சிதறும்படியாக, ————————– ————————————————– வேண்டும் தொழிலை விரும்பிச் செய்யும் யானைகள் பலவற்றைக் கொடுப்பான். ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி படு ஞெமல் புதைய பொத்தி – அகம் 39/6,7 ழைத்த மூங்கில்கள் உரசிக்கொண்டதால், மூங்கில்கழை சொரிந்த ஒள்ளிய தீப்பொறி மிகுந்த சருகுகளுக்குள் விழுந்து தீ மூள, மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல் வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் – கலி 103/13,14 விண்மீன்கள் தோன்றி ஒளிசிந்தும் அந்திக்காலத்து மேகத்தையுடைய சிவந்த ஆகாயம் போன்று அழகிய ஒளிர்வு பரந்த வெள்ளைப் புள்ளிகளைக் கொண்ட காளையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்