Skip to content

சொல் பொருள்

1. (வி) மடு, ஊட்டு, அருத்து,

2. (பெ) 1. பலியுணவு, 

2. மடுத்தல், உண்ணுதல், பருகுதல்,

3. ஆபரணங்களின் மூட்டுவாய், 

4. மதகு,

5. உருளையான பொருள்களின் பொருத்துவாய், 

6. மடுத்தல், தடுத்துநிறுத்தல்,

சொல் பொருள் விளக்கம்

மடு, ஊட்டு, அருத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

feed, make to drink

oblation of food to a deity

the act of eating / drinking

Clasp of an ornament;

Shutters of a sluice

joint as in a spherical objects

obstructing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை – அகம் 275/1-3

உயர்ந்த நிலையினதாகிய சாடியில் நிறைய அடைவித்து பனக்குடையால் முகந்த நீரினை மடுத்தவளாய்ச் சொரிந்து வளர்த்த வயலைக் கொடி படர்ந்த பந்தரில்

தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும்
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் – பெரும் 104,105

தெய்வங்களுக்கு இட்டுவைத்த பலியுணவுபோலத் தேக்கின் இலையில் குவிக்கையினால், உம்முடைய
பசுமை(வளமை) தீர்ந்த சுற்றத்தோடு அவ்வுணவினை மிகப் பெறுவீர்;

இரு மடை கள்ளின் இன் களி செருக்கும் – நற் 59/5

மிகுதியாகப் பருகுதலையுடைய கள்ளின் இனிய மயக்கத்தாலே செருக்குண்டு

மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு
முத்து உடை சாலேகம் நாற்றி – நெடு 124,125

மூட்டுவாய் சிறந்துவிளங்கும் நுண்ணிய நூல் அழகுபெறும்படி, (அதனைத்)தொடுத்தல் சிறப்புற அமைந்து முத்துக்களை உடைய (தொடர் மாலைகளைப்)பலகணிகள்(போன்று) தொங்கவிட்டு

மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்
மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் – புறம் 150/20,21

மார்பிற் பூணப்பட்ட விளங்கிய முத்து வடங்களையுடைய ஆரத்தை கொளுத்துச் செறிந்த முன்கைக்கணிந்த கடகத்துடனே தந்தனன் (கொளுத்து = ஆபரணங்களின் மூட்டுவாய்)

படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை – நற் 340/3,4

சிறப்பாகச் செய்யப்பெற்ற பெரிய குளத்தின் மடை நீரைத் திறந்துவிட, வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்

மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யா பூவின் மெய் சாயினளே – குறு 9/2,3

அழகிய பொருத்துவாய் அமைந்த செம்பினுள் தனித்து இருக்கும் சூடாத பூவைப் போல உடல் மெலிந்தாள்;

செறி மடை வயிரின் பிளிற்றி – அகம் 40/15

செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றிப்

மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு – அகம் 119/13

மூட்டுவாய் அமைந்த திண்ணிய சுரையினையும் கரிய தண்டினையுமுடைய வேலே துணையாக

செறி மடை அம்பின் வல் வில் கானவன் – அகம் 282/2

மூட்டுவாய் செறிந்த அம்பினையும் வலிய வில்லினையுமுடைய வேட்டுவன்

மடை செலல் முன்பின் தன் படை செல செல்லாது
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் – அகம் 248/8,9

பகைவர் படையைத் தடுப்பதற்குச் செல்லும் ஆற்றல் வாய்ந்த தன் படை மறவர் புறங்காட்டி ஓடிவிட, தான் மட்டும் ஓடாமல் பகைவர் வரும் வழியில் தடுத்து நிற்கும் எம் வலிய வீரனைப் போல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *