சொல் பொருள்
(பெ) 1. வலிமை, ஆற்றல், 2. மனத்திட்பம்,
சொல் பொருள் விளக்கம்
வலிமை, ஆற்றல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strength, power, mental strength, firmness of mind
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து – கலி 1/8 மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து தம் இன்றி யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் – கலி 24/13,14 அவரின்றி நான் உயிர் வாழும் ஆற்றல் எனக்கில்லை என்பதால், பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால் விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர் முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று அரி நரை கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல் கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் ஒழுகு நீர் நுணங்கு அறல் போல பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே – நற் 110 தேன் கலந்த நல்ல சுவையையுடைய இனிய பாலை, விரிந்து ஒளிவிடும் பொன்னால் ஆன பாத்திரத்தில் இட்டு அதனை ஒரு கையில் ஏந்திக்கொண்டு அடித்தால் சுருண்டுகொள்ளும் மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை, ‘குடி’ என்று உயர்த்திப்பிடிக்க, அதினின்றும் தப்பிப்பிழைக்க, தெளிவான தன்மையுள்ள முத்துக்களைப் பரல்களாகக் கொண்ட பொற்சிலம்பு ஒலிக்கத் தத்தித்தத்தி ஓடி, மென்மையான நரைக்கூந்தலையுடைய செவ்விய முதுமையையுடைய செவிலியர் ஓடித் தளர்ந்து தம் முயற்சியைக் கைவிட, பந்தல்கால்களுக்கிடையே ஓடி செவிலியரின் கெஞ்சலை மறுக்கும் சிறிய விளையாட்டைச் செய்பவள், இல்லறத்துக்குரிய அறிவையும் ஒழுக்கத்தையும் எங்கிருந்து கற்றுக்கொண்டாளோ? தன்னைக் கைப்பிடித்த கணவனின் குடும்பம் வறுமை அடைந்ததாக, தன்னைக் கைப்பிடித்துக்கொடுத்த தந்தை வீட்டின் மிகுதியான சோற்றினை நினைத்துப்பார்க்கமாட்டாள், சிறிதாக ஓடும் நீரில் நுண்ணிய வளைவுவளைவான கருமணலைப் போல வேண்டும்பொழுது உண்ணாமல் கிடைக்கும்பொழுது உண்ணும் சிறியவளான மனத்திட்பமுடையள் ஆயினள்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்