Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. தழுவு, பின்பற்று, 2. நெருங்கு, 3. வழக்கப்படு, நிலைபெறு, 2. (பெ) 1. தழுவுதல், பின்பற்றுதல், 2. வழக்கப்படுதல், பயிலுதல், 3. காதல்மயக்கம், பித்துப்பிடித்தல்

சொல் பொருள் விளக்கம்

தழுவு, பின்பற்று,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

embrace, follow, adopt, come close, be established, embracing, following, adhering to, becoming accustomed to

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம்
இரும் கழி மருவி பாய பெரிது எழுந்து
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின் – மது 540-542

பெரிய கடலின் ஆழ்பகுதியினின்(று வரும்) புலால் நாறும் அலைகளின் எழுச்சி கரிய கழியில் தழுவிப் பரப்பதற்காக மிகுந்து எழுந்து, அச்சம் பொருந்திய நடுயாமத்தே வருவனவாய் மீளுதலால்,

மகிழ களி பட்ட தேன் தேறல் மாற்றி
குருதி துடையா குறுகி மருவ – பரி 16/28,29

அவன் மகிழும்படி, களிப்பு மிக்க தேனால் சமைக்கப்பட்ட தேறலை அவனுக்குத் தர, அவன் அதனை மறுத்து, அவள் மீது படிந்திருக்கும் சாயநீரைத் துடைப்பான்போல் கிட்டே சென்று அவளைத் தழுவிக்கொள்ள

இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன் தலை மன்றம் வழிநாள் காணின்
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும்
அதுவே மருவினம் மாலை – அகம் 301/23-26

மிகப் பெரிய சுற்றத்தினையுடைய கூத்தர் போய்விட்ட பொலிவற்ற இடத்தினையுடைய மன்றினைப் பின்னாளில் காணின் அக்காட்சி ஆரவாரம் கொண்டிருந்த முதிய ஊரார்க்கு துன்பம் உண்டாகும் அத்தகைய துன்பத்தையே தழுவியுள்ளோம் இந்த மாலையில்

மருவ இன் நகர் அகன் கடை தலை – புறம் 387/17

நெருங்குதற்கு இனிய பெருமனையின் அகன்ற முற்றத்திடத்து

அமர் கண் ஆமான் அம் செவி குழவி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு
மருவின் இனியவும் உளவோ
செல்வாம் தோழி ஒல்வாங்கு நடந்தே – குறு 322

அமர்த்த கண்களையுடைய ஆமானின் அழகிய செவிகளையுடைய குட்டி குறவர்கள் விரட்டியதால் வெருண்டு, தன் கூட்டத்தைவிட்டு ஓடி காட்டின்கண் சேர்ந்துள்ள சிறுகுடியில் அகப்பட்டுக்கொள்ள, இளம்பெண்கள் அதனைப் பேண, அவருடன் கலந்து, அவ்விடத்தை விரும்பி வீட்டில் வாழும் வாழ்க்கையைப் பற்றிக்கொண்டதைப்போல் பழக்கப்பட்டுப்போனால் வேறு இனிமையுடையன உண்டோ? (தலைவன் இருக்குமிடத்துக்குச்)செல்வோம் தோழி! இயன்ற அளவுக்கு நடந்து

மறையில் தான் மருவு_உற மணந்த நட்பு அருகலான்
பிறை புரை நுதல் அவர் பேணி நம்
உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே – கலி 45/22-24

மறைவாகத் தான் தழுவுதலுற மணந்த நட்பு இல்லாமல்போய்விடுமோ என்று பிறை போன்ற நெற்றியையுடையவளே! அவரைப் பேணி நாம் அவரிடத்தில் , அவர் விரும்பிய நாளில். தங்குதலை உன் உறவினரிடம் பேசிமுடித்துவிட்டார்.

ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 21,22

வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின் மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை மருவுதல் – கேட்டற்பொருட்டும், பயிலற்பொருட்டும் அடிக்கடிஅதனை எய்துதல் – பெருமழைப்புலவர் உரை

மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு
மருவு_உழி பட்டது என் நெஞ்சு – கலி 144/14,15

எனக்குக் காதல்மயக்கம் ஊட்டிவிட்டுக் கைவிட்டுச் சென்ற அன்றுமுதல் என் நெஞ்சு மயக்கம் கொண்டுவிட்டது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *