மரையான் என்பது ஒரு வகை மான்
1. சொல் பொருள்
(பெ) ஒரு வகை மான்
2. சொல் பொருள் விளக்கம்
இரலை மானினத்தைச் சேர்ந்த மற்றொரு மான் வகை மரையான் என்று சங்க இலக்கியத்தில் அழைக்கப்படுகின்றது . மரை யா என்றும் அழைக்கப்படும் . இந்த விலங்கை இந்தியாவில் பலபகுதிகளிலும் பசுவைப் போன்றதாகக் கருதிக் கொல்வதில்லை . சங்க காலத் தமிழரும் இதைப் பசுவை போலக் கருதினர் என்றே தெரிகின்றது . ஆபோலும் மா , ஆமா என்றழைக்கப் பட்டது போல் ஆ போன்ற மரை , மரைஆன் , மரை ஆ என்றழைக்கப்பட்டது . மரைப் பசு என்ற பொருளில் வழங்கினர் . விலங்கு நூலறிஞர் , இவ் விலங்கு குதிரையைப் போல் ( Horse like ) காணப்படுவதாகக் கூறுவர் . சூடாமணி நிகண்டிலும் மரையானுக்கு மறுபெயராகக் கானக் குதிரை என்று சொல்லப்பட்டிருப்பது வியப்பான ஒப்புமையாகும் . மரையான் பார்ப்பதற்கு அழகற்ற விலங்காகும் . இதன் நிறம் சிறிதே வெண்மை கலந்த கருமையாகும் . நீலம் போல் கருமை நிறமாயிருப்பதால் நீலப் பசு என்ற பொருளில் இந்தியில் நீல்கை ( Nilgai ) என்று பெயரிட்டழைப்பர் .
புரிமட மரையான் கருநரை நல்லேறு
தீம்புளி நெல்லி மாந்தி பயலது – குறுந்தொகை, 317 .
‘ மரையான் கருநரை நல்லேறு என்று குறுந்தொகை கூறுவதைக் கவனிக்கவும் . கருநரை நல்லேறு ஆங்கிலத்தில் Blue Bull என்றழைக்கப் படுவதை நோக்குக . கருநரை ( Black grey ) நிறமுடையது என்பதில் ஐயமில்லை . மரையான் மரங்கள் அடர்த்தியாக இல்லாத குன்றுகளில் பெரும்பாலும் காணப்படுகின்றன . வறட்சியான சமவெளிகளிலும் காணப்படுவதுண்டு . வயற்புறங்களில் நுழைந்து விளைச்சலை உண்ணுமெனக் கூறுவர் . இவை குன்றுகளில் காணப்படுவதாக விலங்கு நூலார் கூறியது போலவே சங்க நூல்களிலும் மலையிலும் குன்றிலும் வாழ்வதாகவே கூறப்பட்டிருக்கின்றது .
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்
ஒய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி – நற்றிணை , 43
மலைத்தலை வந்த மரையான் கதழ் விடை – மலைபடுகடாம் , 331 .
வான்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி
ஒண்செங் குருதி உவறியுண் டருந்துபு
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை – அகம் , 3 .
மரையான் குழவி குளம்பிற் றுகைக்கும்
வரையக நாட ! …… – ஐந்திணை எழுபது , 10.
மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் -கலி, 6.
மரையான்கள் மலைச்சாரலிலிருந்து வருவதாகக் கூறுவதை நோக்க வேண்டும் . குன்றத்துக் கவானிலும் வரையகத்திலும் காணப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. கானமடமரை என்று அகப்பாடல் ( 69 ) கூறும் . கானகத்தில் காணப்படுவதால் கானக் குதிரை என்று நிகண்டு கூறுகிறது . மரையானுக்கு நீண்ட காதிருப்பதை ‘ மடக்கண் மரையான் பெருஞ்செவி என்று மலைபடுகடாம் கூறுகின்றது . மரையான் குதிரையைப்போல் மிக விரைவாக ஓடக் கூடியது . ஓட்டத்தில் தான் இது புலி முதலிய கொடிய விலங்குகளிடமிருந்து தப்பிக்கின்றது .
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை –மலைபடு கடாம் . 381,
சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை
தலையிறும்பு கதழு நா றுகொடிப் புறவின் – மலைபடுகடாம் , 406-7
கதழ்விடை என்று கூறுவதிலிருந்து இதன் விரைவான ஓட்டத்தை நன்கு உணர்த்திருந்தனர் என்று தெரிகின்றது . சங்க நூல்களில் மரையானைப் , புலிகள் செந்நாய்கள் கொன்று உண்பதாகப் பல விடங்களில் கூறப்பட்டிருக்கின்றது . இவை ஒடுங்கால் அழகாயிராது. குனிந்து குதித்து ஓடுவது போல் ( Slow ching gallop ) இருக்கும் என்று விலங்கு நூலார் கூறுவர் . அகநானூற்றில் இதன் நடை துளங்கு நடை என்று கூறப்பட்டிருக்கின்றது . நற்றிணை உயங்கு மரை என்றது , அகநானூறு துளங்கு நடை என்றது ஒரு முறையான ஆடி அசையும் நடையையே குறிக்கும் . மரையான்கள் 4 முதல் 10 வரை மந்தையாகக் காணப்படும் . ஒரு மந்தையில் இருக்கும் மரையான்கள் எப்போதும் ஒரே இடத்தில் எச்சமிடும் குணம் உடையவை . திரிந்து மேயும் மரையான்கள் ஓரிடத்தில் கூடுவதற்கு இந்தக் குணம் ஒருவழியாக அமைவதாக விலங்கு நூலார் கூறுவர். மரைகள் ஓரிடத்தில் கூடும் தன்மையுடையவை என்பதைச் சங்கப் புலவர்கள் தெரிந்திருந்தார்கள் என்று சில பாடல்களிலிருந்து உணர்கிறோம் .
( Nilgai like antilopes bave the habit of resorting to the same spot to deposit their droppings forming in this way considerable accumulations. Such a rendevous may be a means of assembling scattered members of a herd . )
முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீரெழுத்து
மனை பாழ் பட்ட மரைசேர் மன்றத்து ” -அகம் , 373.
மரைசேர் மன்றத்து என்று அகப்பாடல் கூறுவதை நோக்குக . மன்றத்தில் சேர்ந்து இருந்த மரையா சிதறும் படி புலி வேட்டையாடியதாக
மன்ற மரையா விரிய வேறட்டுச்
செங்கணிரும்புலி குழுமும்
என்று வரும் குறுந்தொகைப் பாடல் ( 321 ) இந்தப் பழக்கத்தை விளக்குகிறது . மரையான் இலைகளை மட்டும் தின்பதில்லை . மரையான்கள் இலந்தை , நெல்லி முதலிய கனிகளை விரும்பி உண்பதாக விலங்கு நூலார் கூறுகின்றனர் . மரையான் நெல்லிக் கனிகளை விரும்பி உண்பதாகச் சங்க இலக்கியங்களில் சில பாடல்களில் கூறப்பட்டிருக்கின்றது உண்மையான செய்தியாகும் .
” கல்லுயர் நண்ணியதுவே நெல்லி
மரையின மாரு முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லோளூரே – குறுந்தொகை , 285 .
பராரை நெல்லி யம்புளித் திரள்காய்
கான மடமரைக் கணநிரை கவரும் -அகம் , 69 .
பல்கோள் நெல்லிப் பைங்கா யருந்தி
மெல்கிடு மடமரை ஓர்க்கும் அத்தம் -அகம் , 399 .
மரைபிரித் துண்ட நெல்லி வேலி -புறம் , 170 .
மரைகள் நெல்லிக்காயை விரும்பி உண்பதாகச் சங்கப் பாடல்கள் கூறுவதைக் கவனிக்க வேண்டும். மரை யான் இலைகளை உண்பதை
…..இலைகவர்
பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே “
என்று வரும் குறுந்தொகைப் பாடல் ( 115 ) கூறுகிறது
அங்குழை இருப்பை அறைவாய் வான்புழல்
புல்லுளைச் சிறாஅர் வில்லின் நீக்கி
மரைகடிந் தூட்டும் வரையகச் சீறூர் -அகம் , 107 ,
இருப்பை மரத்தின் பூக்களை மரையான் விரும்பி உண்ணும் என்று விலங்கு நூலார் கூறுவர் . ( The fallen flowers of the mohwa tree attracts Nilgai as they attract other animals) மரையான்கள் இருப்பைப் பூவைத் தின்னாது கடிந்து வில்லால் அப்பூக்களைச் சேர்க்கும் வேட்டுவச் சிறுவர்கள் வாழும் மலைச் சிற்றூரைப் பற்றி அகநானூறு 107 ஆம் பாடலில் இச்செய்தியைக் கூறுவதைக் காணலாம் . மரையான்கள் மந்தையாக வாழ்வதை மடமரைக் கணநிரை (அகம் 69 ), மரைக்கணம் ( அகம் 224 ) என்ற , சொற்கள் குறிக்கின்றன . சங்கப் பாடல்களில் மரையான்களை மலையருகாமையில் இருந்த ஊர்களில் கண்டதாகக் கூறியிருப்பதைக் காணலாம் .
தெறிநடை மரைக்கணம் இரிய மனையோள்
ஐதுணங்கு வல்சி பெய்து முறுக் குறுத்த -அகம் , 224 .
….தூங்குநிலை
மரையேறு சொறிந்த மாத்தாள் கந்தின்
சுரையிவர் பொதியில் அங்குடிச் சீறார் – அகம் , 287 .
தெறித்த நடையையுடைய மரைக்கணம் வேட்டுவர் ஊரூரில் காயவைத்த உணவைக் கவர வந்ததை அகநாநூறு 224 ஆம் பாடல் கூறியுள்ளது . நாள்பலி கொடுக்கப்படாது விடப்பட்ட பாழடைந்த பொதியிலில் தூண் விழும்படி உடலைச் சொறிந்த மரையேற்றைப்பற்றி அகம் 287 ஆம் பாடல் கூறுவதைக் காணலாம் . பாழடைந்து போன ஊர்களிலும் மன்றங்களிலும் பொதியிலிலும் மரையான்கள் கூடும் வழக்கம் இருந்ததைக் கண்டே சங்கப் புலவர்கள் பாடியதாகத் தெரி கின்றது . பதிற்றுப்பத்தில் (3 ) ஏறுபுணர் , தண்ணல் மரையா அமர்ந்தினி துறையும் ” என்ற வரிக்கு உரை யெழுதியவர் நகரம் அழிக்கப்பட்டு மரையான்கள் உறங்கு காடாயின என்று கூறியதைக் கூர்ந்து கவனிக்கவும் . பாழடைந்த வீடுகளிலும் ஊர்களிலும் மரையான்கள் கூடும் வழக்கம் சங்க காலத்தில் இருந்ததைக் கண்டு பாடினரெனத் தெரிகின்றது .
கன்றுடை மரையாத் துஞ்சுஞ் சீறூர்க்
கோளிவண் வேண்டேம் புரவே நாரரி ” – புறம் , 297 .
புறநானூறு 297 ஆம் பாடலில் மரையாகன்றுடன் தூங்கும் சிறிய ஊர் இறையிலி நிலமாக வேண்டாம் என்று மருத நிலத்தூரைக் கேட்டது சொல்லப் பட்டுள்ளது . மரையை மானிலிருந்து பிரித்துக் கருதினரென்று தெரிகின்றது . தொல்காப்பியம் இளம்பூரணருரையில் சொல்லதிகாரத்தில் மாவும் மரையும் புலம் படர்ந்தன என்றால் விலங்கு மா என்பது அறியப்படும் என்றார் . மா என்ற சொல் மானைக் குறித்து வழங்கியதாகத் தெரிகின்றது . மானும் மரையினமும் மயில் இனமும் கலந்து எங்கும் என்று வரும் சுந்தரர் தேவாரப்பாட்டு வரியில் மானும் மரையும் தனித்தனியாகக் கூறப்பட்டுள்ளது .மானும் மரையும் நெருக்கமான இனமாயினும் பிரித்துக் கூறவேண்டுமெனக் கருதினர். மரையான் மானைவிட மாட்டிற்கு உருவில் ஒத்துக் காணப்பட்டதால் பிரித்துக் கூறினரென்று தெரிகின்றது . மரத்தில் செய்யப்பட்ட மரைபோன்று புரிவுடன் கூடிய குறுகிய கொம்பு இருப்பதால் மரையான் என்று பெயரிட்டனரென்று கருத இடமுண்டு. கன்னடத்தில் சங்க காலப் பெயரை மறக்காது இன்றும் மரைக் குதிரை என்று மரையானை அழைக்கின்றனர் . ஆ போன்ற விலங்கு ஆமா என்று அழைக்கப்பட்டது. போல் ஆன்போன்ற மரை மரையான் என்றழைக் கப்பட்டது . மரையானை விலங்கு நூலார் (Boselaphus. tragocamelus ) என்று அழைப்பர் .
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Boselaphus. tragocamelus, The Nilgai or Blue Bull
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
மலை தலைவந்த மரையான் கதழ் விடை – மலை 331
மலையிலிருந்து புறப்பட்டுவந்த காட்டுமாட்டின் சீறியெழுந்த காளையும்,
மட கண் மரையான் பெரும் செவி குழவி – மலை 506
பேதைமை மிகுந்த கண்களையுடைய மரைமானின் பெரிய காதுகளைக்கொண்ட குட்டியும்
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு – குறு 317/1
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்