Skip to content

சொல் பொருள்

(வி) 1. வேண்டாம்/இல்லை என்று கூறு 2. இல்லாமல் போ,

2. (பெ) 1. குற்றம், 2. மச்சம், 3. களங்கம், கறை, 

3. (பெ.அ) மீண்டும், மறுபடியும்,

சொல் பொருள் விளக்கம்

வேண்டாம்/இல்லை என்று கூறு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

refuse, deny, cease to exist, fault, blemish, mole, blot, stain, further, once more

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி – நற் 110/1-8

தேன் கலந்த நல்ல சுவையையுடைய இனிய பாலை,
 விரிந்து ஒளிவிடும் பொன்னால் ஆன பாத்திரத்தில் இட்டு அதனை ஒரு கையில் ஏந்திக்கொண்டு
 அடித்தால் சுருண்டுகொள்ளும் மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை,
 ‘குடி’ என்று உயர்த்திப்பிடிக்க, அதினின்றும் தப்பிப்பிழைக்க, தெளிவான தன்மையுள்ள
 முத்துக்களைப் பரல்களாகக் கொண்ட பொற்சிலம்பு ஒலிக்கத் தத்தித்தத்தி ஓடி,
 மென்மையான நரைக்கூந்தலையுடைய செவ்விய முதுமையையுடைய செவிலியர்
 ஓடித் தளர்ந்து தம் முயற்சியைக் கைவிட, பந்தல்கால்களுக்கிடையே ஓடி
 செவிலியரின் கெஞ்சலுக்கு வேண்டாம் என்று மறுக்கும் சிறிய விளையாட்டைச் செய்பவள்,

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே – புறம் 180/1,2

நாள்தோறும் தொடர்ந்து கொடுக்கும் செல்வமும் உடையானல்லன்
இரந்தோர்க்கு இல்லை எனச் சொல்லி மறுக்கும் புன்மையுமுடையன் அல்லன்

கோடு வார்ந்து அன்ன வெண் பூ தாழை
எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு
சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும் – நற் 203/4-6

சங்கினை நீட்டிவைத்தது போன்ற, வெள்ளையான பூவைக்கொண்ட தாழையானது,
ஓங்கி வீசும் அலைகள் மோதுவதால் சிலிர்த்து வாய்திறக்கத் தாது உதிர்ந்து
சிறிதளவு மக்கள் உள்ள கடற்கரை ஊரின் தெருவில் எழும் புலவுநாற்றத்தைப் போக்கும்

தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து – பதி 13/17

சாணப்பூச்சு இல்லாமற்போன, ஆரவாரம் அழிந்துபோன ஊர்ப்பொதுவிடங்கள்,

மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 6

குற்றமற்ற கற்பினையும், ஒளியுடைய நெற்றியினையும், உடையவளின் கொழுநன்

இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை – பெரும் 29,30

பெரிய நிலத்தை அளந்துகொண்ட திருமகளாகிய மறுவை அணிந்த
கடல் (போலும்) நிறத்தையுடையவன் பின்னிடத்தோனாய்

நித்தில மதாணி அ தகு மதி மறு
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் – பரி 2/30,31

நித்தில மதாணி என்னும் அழகிய தகுதிபடைத்த மதியினோடு, அந்த மதியில் உள்ள களங்கம் போன்று
சிவந்த நிறத்தவளான திருமகள் வீற்றிருக்கும் உன் மாசற்ற மார்பு;

ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறு தலைய நெய்த்தோர் வாய
வல்லிய பெரும் தலை குருளை – நற் 2/3-5

வழியே செல்லும் மக்களின் தலையைத் தாக்கியதால்
சிவந்து கறையேறிய தலையையும், குருதியொழுகும் வாயையும் உடைய
வலிமையுடைய பெரிய தலையினைக் கொண்ட புலிக்குட்டிகள்

மறு கால் உழுத ஈர செறுவின் – நற் 210/2

மீண்டும் சாகுபடிக்காக உழுத ஈரமான வரப்புள்ள பாத்திகளில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *