சொல் பொருள்
(பெ) 1. திசைகள், 2. நிலத்திற்கும், விசும்புக்கும் இடையிலுள்ள வெளியிடம்,
சொல் பொருள் விளக்கம்
திசைகள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
directions, the space between earth and the upper space.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாகம் சுடர மா விசும்பு உகக்கும் ஞாயிறு போல விளங்குதி பல் நாள் – பதி 88/37,38 திசைகளெல்லாம் ஒளியால் விளங்க கரிய வானத்தில் உயரே எழுகின்ற ஞாயிற்றைப் போல சிறப்புடன் வாழ்வாயாக, பல நாட்கள்; மாகம் – திசை, இனி, நிலத்துக்கும் விசும்புக்கும் இடையிலுள்ள வெளியிடமென்றுமாம் – ஔவை.சு.துரை. உரை இந்த மாகம் என்ற சொல் விசும்பு என்ற சொல்லுடனேயே பயின்று வருகிறது. மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய – மது 454 வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் – பரி 1/50 மழை கால் நீங்கிய மாக விசும்பில் – அகம் 141/6 கடல் கண்டு அன்ன மாக விசும்பின் அழல் கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க – அகம் 162/3,4 மாக விசும்பின் மழை தொழில் உலந்து என – அகம் 317/1 ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ மாக விசும்பின் நடுவு நின்று ஆங்கு – புறம் 35/17,18 இங்கு, மாகம் என்பது எழிலி, மழை, கொண்மூ ஆகிய மேகங்களைக் குறிக்கும் சொற்களுடனும், மின்னலுடனும் சேர்த்துக் குறிப்பிடப்படுவதால், இச்சொல் நிலத்தை ஒட்டி இருக்கக்கூடிய வானவெளியைக் குறிப்பதாகக் கொள்லலாம். அடுத்து, மாக விசும்பின் திலகமொடு பதித்த திங்கள் அன்ன நின் திருமுகத்து – அகம் 253/24,25 செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 60/2 பன் மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 270/1 மாக விசும்பின் வெண் திங்கள் – புறம் 400/1 என்ற அடிகளில், திங்கள், கோள்மீன், நாள்மீன் ஆகியவை உள்ள பகுதி மாக விசும்பு என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றும் நிலவுலகிலிருந்து வெவ்வேறான தொலைவுகளில் விசும்பில் உள்ளவை என்று இன்று நாம் அறிந்திருப்பினும், அன்றைய மக்கள் இவை அனைத்துமே விண்ணில் ஒரே தொலைவில் உள்ளனவாக எண்ணியிருந்தனர் என்று கொள்ளமுடிகின்றது. எப்படியிருப்பினும் இவை மூன்றும் மேகங்களுக்கும் அப்பால் வெகுதொலைவில் உள்ளனவாதலால், மேகங்களுக்கு அப்பால் உள்ள விசும்பின் பகுதியும் மாகம் என்பதைக் குறிக்கும் எனக் கொள்ளவேண்டியுள்ளது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்