சொல் பொருள்
(பெ) 1. நெஞ்சு, 2. உயரமான, உருண்டையான பொருள்களின் கழுத்துக்குக் கீழே உள்ள பகுதி, வடிம்பு, 3. தடாகம், சுனை,
சொல் பொருள் விளக்கம்
நெஞ்சு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bosom, chest
the portion lower to the neck of a tall, cylindrical object
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே – நற் 17/12 வானத்தைத் தொடும் மலைநாட்டினனின் மார்பு என்னை வருத்தியது என்று செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே – ஐங் 255/4 சிவந்த வாயினை உடையவள், மார்பினில் அழகுத்தேமலைக் கொண்டவள் பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் ஏணி எய்தா நீள் நெடு மார்பின் முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின் குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 243-247 எருதுகளோடு கூடிய பசுக்கள் ஈன்ற வளைந்த அடிகளையுடைய கன்றுகளைக் கட்டின நெடிய தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும், ஏணிக்கும் எட்டாத மிக நெடிய வடிம்பினையும், தலையைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லினையும் உடைய, கன்னிமையோடே முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும் தானியங்கள் சேர்த்துவைக்கும் உயர்ந்த குதிர்களில், அதன் கழுத்துக்குக்கும் கீழ்ப்பட்ட பகுதி இங்கே மார்பு எனப்பட்டது. சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும் மலர் அகல் மார்பின் மை படி குடுமிய குல வரை சிலவே – பரி 15/8-10 அந்தச் சில மலைகளிலும் சிறந்து விளங்குவன தெய்வங்கள் விரும்பும் மலர்களையுடைய அகன்ற சுனைகளையுடைய மேகங்கள் படியும் உச்சிகளையுடைய குலமலைகள் சிலவே இங்கு உள்ள மார்பின் என்ற சொல்லுக்குச் சுனைகள், தடங்கள் என்று உரைகள் கூறுகின்றன. தமிழ்ப் பேரகராதியும் (Tamil Lexicon) அவ்வாறே குறிப்பிடுகிறது. ஆனால், இந்தச் சுனைகள் மலையின் மார்புப்பகுதியில் (உச்சிக்கும் கீழே, அடிவாரத்துக்கு மேலே) இருப்பதால் இங்கு மார்பு என்று குறிக்கப்பட்டிருப்பதற்கு எண்-2 -இல் உள்ள பொருளையும் கொள்ளலாம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்