முயல் என்பது ஒரு சிறுவிலங்கு
1. சொல் பொருள்
(வி) முனைப்புடன் ஒன்றைச் செய், முயற்சி செய், விடாது ஊக்கத்துடன் செயல்புரி,
(பெ) பொந்துகளில் வாழும் ஒரு சிறுவிலங்கு
2. சொல் பொருள் விளக்கம்
முனைப்புடன் ஒன்றைச் செய், முயற்சி செய், விடாது ஊக்கத்துடன் செயல்புரி
சங்க இலக்கியத்தில் காட்டு முயலைப்பற்றிச் செய்திகள் வருகின்றன. காட்டு முயல்கள் ( The Indian Hare ) ஊர்களுக்கு அருகாமையிலும் விளைச்சலிலும் காணப்படும். காட்டுச் சாரலிலும் காணப்படுமென்பது காட்டுச் சாரோடும் குறுமுயல் என்ற தொல்காப்பிய மேற்கோள் செய்யுள் வரி காட்டுகின்றது .
” சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன
குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல்
முடந்தை வரகின் வீங்குபிள் அருந்துபு
குடந்தையஞ் செவிய கோட்பவர் ஒடுங்கி
இன்றுயி லெழுந்து துணையொடு போகி
முன்றிற் சிறுநிறை நீர்கண் டுண்ணும்
புன்புலந் தழீஇய பொறைமுதற் சிறுகுடித் ” – அகம்
முயற்பறழ் உகளும் முல்லையம் புறவிற்
கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண் -அகம்
காடுறை இடையன் யாடுதலைப் பெயர்க்கும்
படிவிடு வினை வெரீஇக் குறுமுயல்
மன்ற இரும்புதல் ஒளிக்கும்
புன்புல வைப்பினெஞ் சிறுநல் லூரே – அகம்
” நறும்பூம் புறவி னொடுங்குமுய லீரியும்
புன்புல நாடன் மடமகள் ” -ஐங்குறு நூறு , 481 .
” எல்லுமுய லெறிந்த வேட்டுவன் அம்சுவல்
…
வன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்து – நற்றிணை , 50 .
சங்க இலக்கியத்தில் காட்டு முயல்கள் புன்புலத்திலும் காட்டு நாட்டிலும் முல்லை நிலத்திலும் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது . வீட்டுக்கருகிலே பயமின்றி மேயும் தன்மையாய் முன்றிலிலும் மன்றத்திலும் காணப்பட்டதாகக் கூறியுள்ளனர் . விலங்கு நூலாம் காட்டு முயல்கள் வீட்டுத் தோட்டத்திலும் , நடமாடுந் தடங்களிலும் இரவில் காணப்படுமென்பர் . காட்டு நாட்டில் முயல் வாழ்வதாகக் கூறியது தெளிவான செய்தியாகும் . ( Large tracts of bush and jungle alternating with cultivated plains afford them ideal conditions ) புதரும் , குறுங்காடும் விளைவயலும் அமைந்த சூழ் நிலையில் முயல் மிகுந்து காணப்படும் என்று விலங்கு நூலார் சொல்வதற்கேற்ப முயல் முல்லைப் புறவிலும் புன்புலத்திலும் வன்புலத்திலும் காணப்பட்டதாகச் சங்க நூல்கள் கூறுவது மிகவும் பொருத்தமே. முயலின் கண்கள் , காது ஆகியவை பற்றிச் சங்க நூல் கள் கூறுகின்றன . முயலின் கண்கள் பெரியன என்றும் அவை பளிங்கு போலவும் நெல்லிக் கனியின் உருவம் போலவும் காணப்பட்டதாகவும் கூறியிருப்ப தைக் காணலாம் , மழைக் காலத்தில் நீரில் மொக்குள் தோன்றுவது போல பொகுட்டு விழியையுடைய கண்ணையுடைய தெனவும் கூறப்பட்டுள்ளது .
நீருட் பட்ட மாரிப் பேருறை
மொக்கு ளன்ன பொகுட்டு விழிக் கண்ண
கரும்பிடர்த் தலைப் பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ளூர்க் குறும்புதற் றுள்ளுவன வுகளும்
தாள்ளை மன்றத் தாங்கட் படரின் . -புறம் , 333 .
சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன
குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல் -அகம் , 284 .
நெல்லிக்காயின் அளவும் , திரண்டு உருண்ட தன்மையும் பளபளப்பான தன்மையும் நிறமும் முயலின் கண்களுக்கு மிகவும் பொருத்தமே . தமிழ் நாட்டில் காணப்படும் காட்டு முயலுக்கு விலங்கு நூலார் Blacknaped Hare என்று பெயரிட்டுள்ளனர் . இப்பெயர் இம்முயவிற்குக் கழுத்தில் உள்ள கருப்பு நிறப்பகுதியின் காரணமாக வந்ததாகும் .. இதையே ” கரும்பிடர்த்தலை ” என்று சுட்டிக்காட்டிப் புறநானூறு கூறுவது எண்ணி இன்புறத்தக்க செய்தியாகும் . காட்டு முயலின் காதை பெருஞ் செவிக் குறு முயல் . (புறம் 33 ) நெடுஞ் செவிக் குறுமுயல் – ( பெரும்பாண் 116 , புறம் . 334 , 339 ) என்று கூறுகின் றதைக் காணலாம் . முயலின் காது நீண்டு குறுகி முடங்கி இருக்கும் . ஆதலின் குடந்தையஞ் செவிய என்று அகநானூறு ( 284 ) . கூறுகின்றது . இதன் காது மிக்க நீண்டதென்று விலங்கு நூலார் கூறுவர். முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையு
நெடுஞ்செவிக் குறுமுயல் என்று பெரும்பாணாற்றுப் படை கூறுவது அழகிய பொருத்தமானதாகும் .
காமரு பழனக் கண்பி னன்ன
தூமயிர்க் குறுந்தா ணெடுஞ்செவிக் குறுமுயல் -புறம் , 334 .
விளை வயலில் விளைந்த பைஞ்சாய்க் கோரையைப் போலத் தூய மயிரையுடைய குறுகிய தாளையுடைய நெடிய காதுகளையுடைய முயல் என்றது காட்டு முயலிற்குப் பொருத்தமான வர்ணனையாகும். காட்டு முயல் புல்லையும் இலைகளையும் தின்று வாழும் .
” பதவுமே யல்பற்றி முயற்பற ழோம்புஞ்
சீறூ ரோளே நன்னுதல் ” – தொல் . மரபு . பேராசிரியர் மேற்கோள் .
“ தாளிமுத னீடிய சிறுநறு முஞ்ஞை
முயல்வந்து கறிக்கு முன்றிற்
சீறூர் மன்னனைப் பாடினை செலினே ” -புறம் , 328 .
அறுகம் புல்லை மேய்வதாகவும் முஞ்ஞைச் செடியைக் கறித்துத் தின்பதாகவும் கூறப்பட்டுள்ளது . அகநானூறு 281 ஆம் பாடலில் திரண்ட கதிர்விடும் வரகின் தாளை அருந்தி வளைந்த கொடியில் பதுங்கிவிருந்து தூங்கியெழுந்து முன்றிலில் காணட்பட்ட சிறிதாக நிறைந்த நீரைக் கண்டு உண்ணும் என்று கூறியது இயற்கைச் செய்தியே யாகும் . காட்டு முயல் கள் விடியற் காலையில் பனி நீரைப் புல்லில் அருந்தும் என்பர் . காட்டு முயலைச் சங்க காலத்தில் விரும்பி உண்டனர் . காட்டுப் பன்றியின் இறைச்சியைப் போல முயலின் இறைச்சியும் சுவை மிக்கதாகக் கருதினர் . ஆதலின் முயலை நாய் கொண்டும் , அம்பெய்தும் வேட்டையாடினர் . வலையில் பிடிப்பதும் வழக்கம் . வளை தடி யெறிந்து முயலைக் கொல்வது கூறப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும் . வளை தடியை ( Boomerang ) குறுங்கோல் ( புறம் : 389 ) , மாலை வெண்காழ் (அகம். 394 ) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
” புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பிற்
பெருங்கட் குறுமுயல் கருங்கல னுடைய
மன்றிற் பாயும் வன்புலத் ததுவே – புறம் , 322
பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையு
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளை இக் – பெரும்பாண் . 112- 115.
குருளைக் கோட்பட லஞ்சிக் குறுமுயல்
வலையிற் றப்பாது மன்னுயி ரமைப்ப — தொல் . மரபியல் . மேற்கோள் .
மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண்
முயல்வேட்டு எழுந்த முடுகுவிசைக் கதநாய்” — நற்றிணை , 252
நாய்களைவிட்டுப் புதர்ச் செடிகளை வெட்டி அழித்து வேலி போல வலை போட்டு வளைத்து முயல்கள் தப்பித்துப் போக முடியாதபடி மடக்கி முயல் வேட்டையாடுவதைப் பெரும்பாண் தெளிவாக விளக்குகின்றது. வில்லின் நாணொலி கேட்டு அஞ்சி ஓடும் முயலையும் புறநானூறு கூறுகின்றது .
” குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
நெடுநீர்ப் பரப்பின் வாளையொடுகளுந்து ” -புறம் , 389 .
“ மாலை வெண்காழ் காவலர் வீச
நறும்பூம் புறவி னொடுங்குமுய லிரியும் புன்புல நாடன் மடமகள் – ஐங்குறு நூறு, 41 .
வளை தடி கொண்டு முயலைக் கொல்லுவது பற்றி மேலே காட்டிய பாடல்கள் கூறுவது அரிய செய்தியாகும் . முயலின் இறைச்சியில் கொழுப்பு மிக்கு இருக்கும் .
வன்புலத்துப் பகடுவிட்டுக்
குறுமுயலின் குழைச்சூட்டொடு ” -புறம், 395
குறுமுயலி னிணம்பெய் தந்த
நறுநெய்ய சோறென்கோ – புறம் , 396 .
முயலின் கொழுப்பு நிறைந்த நெய்ச் சோற்றை விரும்பி உண்டனரென்று புறநானூறு கூறுகின்றது .முயலின் இறைச்சி மெதுவாக இருக்கும் என்பதைக் குழைச்சூட்டொடு என்று புறநானூறு கூறுவதில் விளங்குகின்றது . முயலின் இறைச்சி மிக்க மெதுவானது என்பர் . அதனால் விரும்பி உண்பர் . முயலின் இறைச்சியின் சுவையை நோக்கியே முயல் விட்டுக் காக்கை தினல் என்ற பழமொழியும் , தீற்றாதோ நாய் நட்டால் நல்ல முயல் என்ற பழமொழியும் தோன்றின. நாயை நட்புக் கொண்டால் நல்ல முயல் இறைச்சியைத் தரும் என்பது நாயைக் கொண்டு முயல் வேட்டையாடும் வழக்கிலிருந்து தோன்றியது . முயல் விளையும் பயிரிலோ , வளர்ந்த புல்லிலோ நன்கு மறைந்து கொள்ளும் புல்லைக் காலால் தள்ளிப் பார்த்து ஒரு பள்ளத்தை உண்டு பண்ணி அதில் ஒடுங்கித் தூங்கும் . குறுமுயல் மன்ற – இரும்புல்லில் ஒளிந்து கொள்வதாக அகம் 394 ஆம் பாடல் கூறுகின்றது .
நறும்பூம் புறவி னொடுங்கு முயலிரியும்
புன்புல நாடன் மடமகள் — ஐங்குறு நூறு, 421 .
காமரு பழனக் கண்பினன்ன
தூமயிர்க் குறுந்தா ணெடுஞ்செவிக் குறுமுயல்
புன்றலைச் சிறாஅர் மன்றத் தார்ப்பிற்
படப்பொடுங் கும்மே……………. பின்பு ……… ” –புறம் , 334 .
காட்டு முயல் புல்லில் பதுங்குவதையும் மறைவதையும் பற்றிச் சங்கப் புலவர்கள் உணர்ந்திருந்தனர் . ( Scraping the blades of grass it makes out a hollow. In this form it settles down to sleep . Sometimes they lie in fallow fields ) புன்புலத்தில் ஒடுங்குவதாகவும் , படப் பொடுங்குவதாகவும் கூறியதை நோக்குக . படப்பொடுங்குவ தென்பது புல்லில் ஒடுங்கி மறைவதையே குறிக்கின்றது . இவ்வாறு ஒடுங்கிக் கிடக்கும் முயலையாரும் கண்டுபிடிக்க முடியாது. முயல் ஓடும்போது நின்று திரும்பிப் பார்க்கும் . முயல் வில்லோசை கேட்டு இரியும் என்றும் , முயல் துள்ளி உகளும் என்றும் கூறப்பட்டுள்ளது . முயல் பகற் காலத்தில் புல்லிலும் புதரிலும் ஒடுங்கிப் பதுங்கி வாழும் . உழு படைச் சாலிலும் தூங்கும் . முயல் உடலைக் குறுக்கி ஒடுங்கிப் பதுங்கியிருப்பதை நன்கு உணர்ந்த சங்கப் புலவர்கள் கூரலங் குறுமுயல் ( அகம் , 284) என்றும் ,
கோட்பவர் ஒடுங்கி ( அகம், 284) என்றும் , இரும்பு தல் ஒளிக்கும் ( அகம் , 394 ) என்றும் , புறவி னொடுக்கும் ( ஐங்குறு நூறு , 421 ) என்றும், படப் பொடுங்கும் (புறம் , 334 ) என்றும் அதைப் பற்றிக் கூறினர் . முயலின் முன் கால்கள் குறுகிப் பின் கால்கள் நீண்டு மடக்கியிருக்கும் . ஆதலால் முயல்கள் துள்ளிக் குதித்து ஓடும் . இதையே சங்க நூல்களுள் உகளும் , துள்ளுவன உகளும் என்று குறிப்பாகச் சொல்லினர் . விலங்கு நூலார் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள முயலை Lepus nigricollis என்பர். Indian hare என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் .
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
strive, try hard, endeavour
rabbit, hare, The Indian Hare, Blacknaped Hare, Lepus nigricollis
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின்
பனிய கண்படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/12,13
மிக்க வருத்தமின்றி ஊக்கத்துடன் ஈட்டமுடிகின்ற பொருளுக்காகப் போகிறாய் நீ என்று கேள்விப்பட்டால்
நீர் நிறைந்த கண்கள் உறக்கம் கொள்ளாமல் துன்பம் மிகுவாள் அன்றோ
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை – அகம் 365/7
வன்கண்மையுடைய ஆறலைப்போர் அம்பு எய்ய முயற்சிசெய்து பதுங்கியிருத்தற்கண்
செல்லிய முயலி பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலை யாம் புலம்ப – ஐங் 378/1,2
பறந்து செல்வதற்கு முயன்று விரித்துப் பரப்பிய சிறகினையுடைய
வௌவால் வானுக்கு உயர்ந்து செல்லும் மாலை நேரத்தில் நாம் தனித்து வருந்த,
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ – பெரும் 115
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல – நற் 59/3
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் – நற் 252/10
நறும் பூ புறவின் ஒடுங்கு முயல் இரியும் – ஐங் 421/2
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின் – கலி 10/12
இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும் – அகம் 140/11
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து – அகம் 141/7
குறு விழி கண்ண கூரல் அம் குறு முயல்/முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு – அகம் 284/2,3
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை – அகம் 365/7
முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் – அகம் 384/5
மடி விடு வீளை வெரீஇ குறு முயல்/மன்ற இரும் புதல் ஒளிக்கும் – அகம் 394/14,15
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு – புறம் 34/11
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம் புகுதந்து – புறம் 319/8
பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய – புறம் 322/5
முயல் வந்து கறிக்கும் முன்றில் – புறம் 328/15
கரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல்/உள்ளூர் குறும் புதல் துள்ளுவன உகளும் – புறம் 333/3,4
தூ மயிர் குறும் தாள் நெடும் செவி குறு முயல்/புன் தலை சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின் – புறம் 334/2,3
குறும் கோல் எறிந்த நெடும் செவி குறு முயல்/நெடு நீர் பரப்பின் வாளையொடு உகளுந்து – புறம் 339/4,5
அம் கண் குறு முயல் வெருவ அயல – புறம் 384/6
புறங்காலின் போக இறைப்பேன் முயலின்/அறம் புணை ஆகலும் உண்டு – கலி 144/47,48
குறு முயலின் குழை சூட்டொடு – புறம் 395/3
குறு முயலின் நிணம் பெய்தந்த – புறம் 396/17
அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள் – நற் 9/1
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு – நற் 186/8
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து – பதி 27/13
என் குறை புறனிலை முயலும்/அண்கணாளனை நகுகம் யாமே – அகம் 32/20,21
செழும் கோள் பெண்ணை பழம் தொட முயலும்/வைகல் யாணர் நன் நாட்டு பொருநன் – புறம் 61/11,12
பசித்து பணை முயலும் யானை போல – புறம் 80/7
முயலைப்பற்றிய சில வருணனைகள்:
குறு விழி கண்ண கூரல் அகுறு விழி கண்ண கூரல் அம் குறு முயல் – அகம் 284/2
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ – பெரும் 115
குறு விழி கண்ண கூரல் அபெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய – புறம் 322/5
குறு விழி கண்ண கூரல் அகரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல்
உள்ளூர் குறும் புதல் துள்ளுவன உகளும் – புறம் 333/3,4
குறுவிழி கண்ண கூரல் அதூ மயிர் குறும் தாள் நெடும் செவி குறு முயல் – புறம் 334/2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்