Skip to content
முற்றம்

முற்றம் என்பதன் பொருள்வீட்டின் முன்பக்கமுள்ள திறந்தவெளிப் பகுதி

சொல் பொருள்

(பெ) 1. வீட்டின் எல்லைக்குள், வீட்டின் முன்பக்கமுள்ள திறந்தவெளிப் பகுதி,

2. தெருக்கள் சந்திக்குமிடத்திலுள்ள திறந்தவெளி

3. ஊரின் வெளியே உள்ள திறந்த வெளி,

4. பரப்பு,

சொல் பொருள் விளக்கம்

வீடுகளின் உட்புறம் நடுவிலோ அல்லது வேறு பகுதிகளிலோ சதுரமான வடிவில் வெய்யில், மழை நேரடியாக உள்ளே வரும்படியாக திறந்தவெளியாக மேற்கூறை இல்லாமல் இருக்கும் பகுதியை முற்றம் என்பார்கள்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

courtyard of a house

open space in a street junction

esplanade

expanse

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி – ஐங் 248/1

புதுமணல் பரப்பிய முற்றத்தை அழகு பெற நிறுவி,

தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நற் 143/2

கொண்டுவந்த மணலை, தலைசுற்றிப் பரப்பிய வளமிக்க மனைகளின் முற்றத்தில்

படு நீர் புணரியின் பரந்த பாடி
உவலை கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற
தேம் படு கவுள சிறு கண் யானை – முல் 28-31

ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறையில் –
தழைகளால் வேய்ந்த கூரை ஒழுங்குபட்ட தெருவிடத்து,
நாற்சந்தியான முற்றத்தில் காவலாக நின்ற
மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை

குரு மணி யானை இயல் தேர் பொருநன்
திருமருத முன்துறை முற்றம் குறுகி – பரி 24/71,72

நிறமிக்க மணிகள் பூட்டிய யானைகளையும், அழகிய தேர்களையும் உடைய பாண்டியனின்
திருமருத முன்துறை முற்றத்தை அணுக,

பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென் முலை முற்றம் கடவாதோர் என – அகம் 279/4,5

பொன் என விளங்கும் சுணங்கினைக் கொண்டு நெருங்கப் பணைத்த
மெல்லிய முலைப் பரப்பினை விட்டு நீங்காத நெஞ்சினர்

தாது எரு ததைந்த முற்றம் முன்னி - மலை 531

திரு நகர் முற்றம் அணுகல் வேண்டி - மலை 548

பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு - நற் 268/8

மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் - கலி 96/23

ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ் - அகம் 51/11

தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
புலம்பு உறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு - அகம் 187/9,10

மணல் மலி முற்றம் புக்க சான்றோர் - புறம் 178/3

வரையா பெரும் சோற்று முரி வாய் முற்றம்
வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆக - புறம் 261/3,4

வஞ்சி முற்றம் வய களன் ஆக - புறம் 373/24

வஞ்சி முற்றம் நீங்கி செல்வோன் - சிலப்.வஞ்சி 25/9

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *