சொல் பொருள்
(பெ) ஒரு தோல் இசைக்கருவி,
சொல் பொருள் விளக்கம்
ஒரு தோல் இசைக்கருவி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of drum
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1. மாட்டு வண்டியின் உருளி, இந்த முழவைப் போன்றது. கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து முழவின் அன்ன முழு மர உருளி – பெரும் 46,47 கொழுவிய வட்டைகள் தம் அகத்தே கொண்ட, திருத்தமான நிலையிலுள்ள ஆரங்களையுடைய, மத்தளம் போன்று முழுமர(த்தால் கடைந்த) உருளியினையும், வட்டை என்பது ஒரு சக்கரத்தை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் வளைந்த அமைப்பு. இது felloe of a wheel எனப்படும். ஆறு வட்டைகள் ஒரு சக்கரத்தை வடிவமைக்கும். உருளி என்பது குடம். இது ஆரக்கால்களை வட்டையுடனும் அச்சுடனும் இணைக்கும் பகுதி. இது முழுமரத்தைக் கடைந்து செய்யப்படுவது. இந்த உருளி முழவினைப் போன்றது. 2. பழுத்துத் தொங்குகின்ற பலாப்பழங்கள், கோடியர் தூக்கிச்செல்லும் முழவினைப் போன்றது. சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே – மலை 143,144 வழியே செல்லும் கூத்தருடைய மத்தளங்களைப் போன்று தொங்கி, முதிர்வு கொண்டு தலை வணங்கின, (மேலும் கீழும்)அசைகின்ற கிளைகளிலுள்ள பலாப்பழங்கள்; 3. இந்த முழவுகளின் இரு முகப்புகளும் வெவ்வேறான அளவுள்ளவையாக இருந்திருக்கக்கூடும். அவை முழவின் தலை எனப்பட்டன. அவற்றில் பூச்சுற்றி வைத்திருப்பார்கள். அவற்றுள்பெரிய முகப்பு நோன்தலை எனப்பட்டது. இது பெண்கள் வைத்திருக்கும் பூக்குடையைப் போன்றது என்கிறது மதுரைக்காஞ்சி. பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப பிடகை பெய்த கமழ் நறும் பூவினர் – மது 396,397 பூவைத் தலையில் கொண்ட முழவின் வலிய கண்ணைப் போன்ற கூடைகளில் இட்டுவைத்த கமழ்கின்ற நறிய பூவினையுடையவரும், 4. முழவை ஒரு குறுந்தடிகொண்டு அடுத்து இசையை எழுப்புவர். முழவின் முகப்பில் மார்ச்சனை என்ற கரிய சாந்து பூசுவர். மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி ஊன்றினிர் கழிமின் ஊறு தவ பலவே – மலை 370-372 (தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முழவின் (அதை எடுத்துச்செல்லக் கட்டிய)காவுமரத்தைக் கையில் பிடித்து (முழவை அடிக்கும்)குறுந்தடியை (மூன்றாவது)காலாக (ஊன்றிக்)கொண்டு, தடுமாறுதலினின்றும் (உம்மைக்)காத்து, (தடியை)ஊன்றினராக(வே) கடந்து செல்லுங்கள் – இடையூறுகள் மிகப் பலவாம், 5. முழவின் முகப்புகளில் உள்ள தோல் பரப்பு, வார்களினால் இழுத்துக் கட்டப்பெற்றிருக்கும். வாருற்று விசி பிணி கொண்ட மண் கனை முழவின் – புறம் 15/22,23 வார் பொருந்தி வலித்துக் கட்டுதலைப் பொருந்திய மார்ச்சனை செறிந்த முழவினையுடைய 6. முழவு ஒருவரின் பருத்த கைகளுக்கு உவமையாகக் கொள்ளப்பட்டது. முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி – திரு 215 முழவுக்கு மாற்றான பெருமையுடைய கைகளில் பொருந்தத் தாங்கி 7. முழவு ஒருவரின் திண்ணிய தோள்களுக்கு உவமையாகக் கொள்ளப்பட்டது. முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி – அகம் 61/15 முழவைப் போன்ற திணிந்த தோள்களையுடைய நெடுவேளாகிய ஆவி என்பானின் 8. மரங்களின் தடிமனான அடிப்பகுதிக்கு முழவை உவமிப்பர். இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை – நற் 307/6 நம் வீட்டுக் கூரையின் சாய்ப்பில் படுமாறு வளைந்த முழவு போன்ற அடியையுடைய புன்னையின் முழவு முதல் அரைய தடவு நிலை பெண்ணை – குறு 301/1 முழவைப் போல அடிமரத்தையுடைய வளைந்து நிற்கும் பனையின் முதிர் இணர் ஊழ் கொண்ட முழவு தாள் எரிவேங்கை – கலி 44/4 முற்றிய பூங்கொத்துக்களைத் தீயைப் போல் வரிசையாகக் கொண்ட, முழவினைப் போன்ற அடிமரத்தையுடைய வேங்கை, 9. தாழையின் காயும் பழமும் முழவுக்கு உவமிக்கப்பட்டன. நிலவு கானல் முழவு தாழை – மது 114 நிலாப்போலும் மணலையுடைய கரையினில் குடமுழா(ப்போலும் காயையுடைய) தாழையைக் கொண்ட 10. விழாக்காலங்களில் ஊர்களில் முழவு இடைவிடாமல் இசைக்கப்பட்டது விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர் – பதி 15/18 முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும் – பதி 30/20 முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர் – அகம் 206/11 முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண் – நற் 220/6 முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் – அகம் 336/16 விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று – நற் 320/1 11. வீட்டுச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் முழவு இசைக்கப்பட்டது. உழவர் களி தூங்க முழவு பணை முரல – பரி 7/16 படு மண முழவொடு பரூஉ பணை இமிழ – அகம் 136/7 முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும் – ஐங் 171/2 இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை – அகம் 66/22
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்