மூதாய் என்பது ஒரு சிவப்பு நிறப் பூச்சி
1. சொல் பொருள்
(பெ) 1. சிவப்பு நிறப் பூச்சி, பட்டுப்பூச்சி, இந்திரகோபம், தம்பலப்பூச்சி, வெல்வெட் பூச்சி, 2. பாட்டி
2. சொல் பொருள் விளக்கம்
- கார்காலத் தொடக்கத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது. இது காணப்படுவதைக் கார்காலத் தொடக்கத்தின்
அறிகுறியாக மக்கள் கொண்டனர். - கார்கால முடிவில் இவை பலுகிப் பெருகி அங்கங்கே பரவலாக படர்ந்திருக்கும்.
- ஒரு நாளின் தொடக்கமான வைகறைப் பொழுதில் இது தன் அன்றைய வாழ்க்கையைத் தொடங்குகிறது.
- ஈரமான பகுதிகளில் விரும்பி உறையக்கூடியது.
- தாம் தங்கியிருக்கும் இடத்தை அழகுசெய்வது.
- பவளம் போல் சிவப்பு நிறத்தது.
- மரத்தடிகளில் ஊர்ந்து திரியக்கூடியது. காயா மரத்தடிகளில் காணப்படுவதாகக் குறிப்புகள் உள்ளன.
- பாதை ஓரங்களில் திரியக்கூடியது.
- ஆள் அரவம் கேட்டு ஓடி ஒளிந்துகொள்ளக்கூடியது.
- இதன் வயிற்றுப்பகுதி சிறியதாக இருக்கும்.
- பஞ்சுப்பிசிர் போன்று மென்மையான உடலைக் கொண்டது.
- சிறுவர்கள் பிடித்து விளையாடும் அளவுக்குச் சாதுவானது (harmless).
மூதாய் என்ற சொல் பத்துப்பாட்டில் இல்லை. எட்டுத்தொகை நூல்களில் நற்றிணை, கலித்தொகை, அகநானூறு
ஆகிய நூல்களில் இச்சொல் ஒன்பது முறை வருகிறது. அதில் ஏழுமுறை இது அகநானூறில் வருகிறது. இவை
ஒவ்வொன்றும் மூதாயைப் பற்றிய ஒரு தகவலைக் கூறுகின்றன. அவற்றைப் பார்ப்போம்.
- கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும் – நற் 362/5
- பெய் புல மூதாய் புகர் நிற துகிரின் – கலி 85/10
- ஈயல் மூதாய் வரிப்ப பவளமொடு – அகம் 14/3
- குருதி உருவின் ஒண் செம் மூதாய் – அகம் 74/4
- செம் புற மூதாய் பரத்தலின் நன் பல – அகம் 134/4
- அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் – அகம் 139/13
- வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப – அகம் 283/15
- ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப – அகம் 304/15
- குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி – அகம் 374/12
இதனை, ஈயன்மூதாய். Cochineal insect என்கிறது தமிழ்ப்பேரகராதி. ஆனால் ஈயன்மூதாய் என்பது Cochineal insect அல்ல.
சித்த மருத்துவத்தில் இது, இந்திரகோப பூச்சி என அழைக்கப்படுகிறது. இது,மருத்துவ குணம் கொண்டது. சிவப்பு வெல்வெட் பூச்சிமிலிருந்து பெறப்படும் எண்ணெய் முடக்குவாத சிகிச்சைக்கு பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
the red velvet mite, Trombidium grandissimum, Trombidium holosericeum
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
இது செம் மூதாய்(1), குருதி உருவின் ஒண்செம் மூதாய்(4), செம்புற மூதாய்(5), அரக்குநிற உருவின் மூதாய்(6)
என்று கூறப்பட்டுள்ளதாலும், இது பவளத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளதாலும்(3), இப்பூச்சி சிவப்பு நிறத்தது என்பது
தெளிவாகின்றது. இதன் பண்புகளைப் பற்றி அறிய, இந்த அடிகளுக்கு அடுத்த, முந்தைய அடிகளையும்,
அவற்றின் உரைகளையும் பார்க்கலாம்.
கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும் – நற் 362/5
வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனையாயின்
தலைநாட்கு எதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீ விளையாடுக சிறிதே ——- நற்றிணை 362:1-6
வேலைப்பாடு நன்கு அமைந்த பாவை போல இயங்கி, நின் தந்தையின்
மனையெல்லையைக் கடந்து (என்னுடன்) வந்திருக்கிறாய், அதனால்
முதல் மழையைப் பெய்யத் தொடங்கிய குளிர்ந்த மழையையுடைய மேகம்
அழகு மிக்க காட்டில் அகன்ற இடமெல்லாம் பரந்த
விரைந்து ஓடும் சிவந்த ஈயலின் மூதாயைப் பார்த்தும் பிடித்தும்
நீ விளையாடுக சிறிது பொழுதே —
என்பது இதன் பொருள்.
தலைவனோடு உடன்போகும் தலைவிக்கு, இடைச்சுரத்தின்கண்ணே தலைவன் கூறிய கூற்று இது.
விரைந்த செலவினையுடைய சிவந்த ஈயலின் மூதாயை நோக்கியும், அவற்றைப் பிடித்தும் சிறிதுபொழுது நீ
விளையாடுவாயாக என்று உரை கூறும் பின்னத்தூரார், பின்னர், செம்மூதாய் – தம்பலப்பூச்சியுமாம் என்கிறார்.
எனவே இவர் ஈயலின் மூதாய் என்று எதனைக் குறிக்கிறார் என்று தெரியவில்லை. ஈயல் என்பது
இன்றைக்கு ஈசல் எனப்படுகிறது. இங்கு நாம் உற்றுநோக்கவேண்டியது, தலைவனும் தலைவியும் நடந்துசெல்லும்
பாலை வழியில், முதல்மழை பெய்கிறது. உடனே, இந்த ஈயன்மூதாய் அணிமிகு கானத்து அகன்ற மேற்பரப்பில்
பரவி, அங்குமிங்கும் விரைவாகச் செல்கின்றன என்று பார்க்கிறோம். நாம் அறிந்த சாதாரண ஈசல் என்றால் அது
புற்றுக்குள்ளிருந்து புறப்பட்டு சிறிது தொலைவு பறந்து, பின்னர் தரையில் பரவி, வேகமாக அங்குமிங்கும் செல்லும்;
ஆனால் அது சிவப்பாக இருக்காதே! எனவே இது ஈசல் வகையைச் சேர்ந்த வேறொரு பூச்சியாக இருக்கவேண்டும்.
இதற்கு உரை எழுதிய ஔவை துரைசாமியார், கடும்செம் மூதாய் என்பதற்கு மிகச் சிவந்த
தம்பலப்பூச்சிகள் என்று ‘கடும்’ என்பதனை நிறத்திற்கு ஏற்றிக் கூறுகிறார்.
‘செம்மூதாய் தம்பலப்பூச்சி; இதனைக் கோபம் என்பதும் வழக்கு; இந்திரகோபம் என்பதுமுண்டு’ என்ற
கூற்றுக்களால் இது இந்திரகோபமே என உறுதி செய்கிறார். ‘இப்பூச்சிகளின் செம்மைநிறமும் மென்மைத்
தன்மையும் காண்பார்க்கு இன்பம் நல்கலின், இளையர் அவற்றை எடுத்துத் தம்முடைய ஆடைமேல் இட்டு
மேயவிடுவர்’ என்றும் அவர் கூறுகிறார்.
- பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின் – கலி 85/10
பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின்
மையற விளங்கிய ஆனேற்று அவிர்பூண் – கலி 85:10,11
மழை பெய்த புலத்து ஈயன்மூதாயின் புகர்நிறமுள்ள பவளத்தாற் செய்த
அழுக்கற விளங்கிய இடபத்தையுடைய விளங்குகின்ற பூண்
இங்கே துகிர் என்பது பவளம். புகர்நிறம் என்பது கருஞ்சிவப்பு நிறம் (tawny colour) அல்லது கபில
நிறம் ஆகும். பெய்புல மூதாய் என்பதால் மழை பெய்தபின் முல்லை நிலக் காடுகளில் காணப்படும் என்பது
பெறப்படுகிறது. எனவே, இது முற்கண்ட நற்றிணை அடிகளின் பொருளை மெய்ப்பிக்கிறது எனலாம்.
- ஈயல் மூதாய் வரிப்பப் பவளமொடு – அகம் 14/3
அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு
மணிமிடைந் தன்ன குன்றம் —– – அகநானூறு 14:1-4
செவ்வரக்கினை யொத்த சிவந்த நிலத்திற் செல்லும் பெருநெறியில்
காயாவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்க, பலவும் ஒருங்கே
தம்பலப்பூச்சிகள் வரிவரியாக ஊர்ந்து செல்ல (அவை) பவளத்தொடு
நீலமணி நெருங்கி யிருந்தா லொக்கும் குன்றம்
என்று வேங்கடசாமிநாட்டார் உரை கூறுகிறது. இங்கே வரி என்ற வினைச்சொல்லுக்கு அழகுசெய்
(adorn, decorate) அல்லது ஓடு (run, flow) என்ற பொருள் கொள்ளலாம். இங்கும் நாம் ஏற்கனவே கண்ட
செய்திகள் உறுதிப்படுகின்றன எனக் காண்கிறோம்.
- குருதி உருவின் ஒண் செம் மூதாய் – அகம் 74/4
தண்பெயல் பொழிந்த பைதுறு காலைக்
குருதி யுருவின் ஒண்செம் மூதாய்
பெருவழி மருங்கில் சிறுபல வரிப்ப – அகநானூறு 74:3-5
குளிர்ந்த மழை பொழிந்ததாற் பசுமையுற்ற காலத்தே,
குருதியைப் போலும் சிவந்த நிறத்தையுடைய ஒள்ளிய தம்பலப்பூச்சி
பெரிய வழிகடோறும் பல சிறிய வரிகளாகப் பரக்க
என்று இதற்கு நாம் முன்னர் கண்ட வகையிலேயே பொருள் அமைந்துள்ளது.
- செம்புற மூதாய் பரத்தலின் நன்பல – அகம் 134/4
வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின் ———- – அகநானூறு 134:1-4
மழை தப்பாது பெய்தலால் காடு அழகுபெற்று,
நிறைந்த சூலுடைய கரிய மேகங்கள் கார் காலத்தினைத் தந்து தங்கிற்றாக,
நீலமணியை ஒக்கும் காயாவின் அழகிய மலர்களின் இடையிடையே
சிவந்த புறத்தினையுடைய இந்திரகோபப் பூச்சி பரத்தலோடு
என்ற பொருளும் நாம் அறிந்த செய்திகளை உறுதிசெய்கிறது.
- அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் – அகம் 139/13
அரக்குநிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பியவை போல் பாஅய்ப் பலவுடன்
நீர்வார் மருங்கின் ஈரணி திகழ – அகம் 139/13-15
செவ்வரக்கு அனைய நிறத்தையும் அழகினையுமுடைய தம்பலப்பூச்சிகள்
பரப்பிவைத்தாற் போலப் பலவும் ஒருங்கே பரந்து
நீர் ஒழுகிய ஈரமுடைய இடத்தில் அழகுடன் விளங்க
என்பது இதன் பொருள். மழைக்காலத்தில், ஈரமான இடங்களில் இவை படைபடையாக அடைந்திருக்கும்
என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. கார்காலத்தின் கடைநாள் காட்சியாகப் பாடல் இதைக் கூறுகிறது.
எனவே, கார்காலத்தில் பிறந்து ஓடியாடித் திரிந்த இவை, கார்கால இறுதியில் அங்கங்கே திட்டுதிட்டாய்ப்
படுத்துக்கிடக்கும் என்பது தெரிகிறது.
- வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப – அகம் 283/15
———– ———- ——— கரிமரம்
கண்அகை இளம்குழை கால்முதல் கவினி
விசும்புடன் இருண்டு வெம்மை நீங்கப்
பசுங்கண் வானம் பாய்தளி பொழிந்தெனப்
புல்நுகும்(பு) எடுத்த நல்நெடுங் கானத்(து)
ஊட்டு பஞ்சிப் பிசிர்பரந் தன்ன
வண்ண மூதாய் தண்நிலம் வரிப்ப — அகநானூறு – 283:9-15
கரிந்த மரங்கள்
தம்மிடத்தே கிளைக்கப்பெறும் இளந்தளிர்கள் அடி முதல் கிளைத்து அழகுபெறவும்,
வானில் ஒருங்கே இருட்சியுற்று, வெம்மை நீங்கவும்,
பசுமையைத் தன்பால் கொண்ட மேகம் பரந்த துளியினைச் சொரிந்ததாக,
புற்கள் குருத்தினைவிட்ட நல்ல நீண்ட காட்டில்
செந்நிறம் ஊட்டிய பஞ்சின் பிதிர் பரவியது போன்ற
செந்நிறமுடைய தம்பலப்பூச்சிகள் குளிர்ந்த நிலத்தே அழகுறுத்த
என உரை கூறப்படும் இந்த அழகிய அடிகளில், கார்காலத் தொடக்கம் அழகுற வருணிக்கப்பட்டுள்ளது.
எனவே, கார்காலத் தொடக்கத்தில் இப்பூச்சிகள் தென்பட ஆரம்பிக்கின்றன என்பது மீண்டும் உறுதிசெய்யப்படுவதோடு,
அதன் மேனி பிய்த்தெறிந்த பஞ்சுச் சிதறல்கள் போல் இருக்கும் என்பதுவும் தெளிவாகிறது. இவற்றின் இயக்கத்தை
விளக்கும் வரிப்ப என்ற சொல் இங்கும் காணப்படுகிறது. ஆனால் அதற்கு அழகுறுத்து என்ற பொருள்
கொள்ளப்பட்டுள்ளது.
- ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப – அகம் 304/15
——— ———— ——— வரிமணல்
மணிமிடை பவளம் போல அணிமிகக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப
புலனணி கொண்ட காரெதிர் காலை – அகநானூறு – 12-16
வரிப்பட்ட மணலில்
நீல மணியுடன் கலந்த செம்பவளம் போல அழகு மிக
காயாவின் வாடல்பூ பலவும் சேரப் பரந்து அவற்றுடன்
தம்பலப்பூச்சியும் நிலத்தில் ஈரம்பட்ட இடத்தை அழகுசெய்ய,
காடாகிய நிலம் அழகு பெற்ற கார்காலம் தோன்றிய பொழுதில்
என்பது இதன் பொருள். இப்பூச்சியின் முன்னற்கண்ட பண்புகளை இங்கு மீண்டும் காண்கிறோம்.
- குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி – அகம் 374/12
இடியும் முழக்கும் இன்றிப் பாணர்
வடியுறு நல்யாழ் நரம்பிசைத் தன்ன
இன்குரல் அழிதுளி தலைஇ நன்பல
பெயல்பெய்து கழிந்த பூநாறு வைகறைச்
செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில்
குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணிமண்டு பவழம் போலக் காயா
அணிமிகு செம்மல் ஒளிப்பன மறைய – அகநானூறு 374:7-14
இடித்தலும் குமுறுதலும் இன்றி, பாணர்
வடித்தலுற்ற நல்ல யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற
இனிய குரலுடன் மிக்க துளியைப் பொருந்தி, நன்றாகிய பல
மழைகளைப் பெய்து கழிந்த, பூக்கள் மணக்கும் விடியற்காலத்தில்,
செறிந்த மணல் மேடுபட்டுக் களர்மண்ணும் தோன்றும் நெறியில்
சிறு வயிற்றினையுடைய தம்பலப்பூசி குறுகுறுவென்று ஓடி
நீலமணியுடன் கூடிய பவழம் போலக் காயாவின்
அழகுமிக்க வாடற்பூவில் ஒளிந்து மறைய —
என்பது இதன் பொருள்.
மின்னாமல் முழங்காமல் விடிய விடியப் பொழிந்த விடியற்காலையில், செறிந்த மணல் மேடுபட
அதன்மேல் களர்மண் படிந்திருக்கும் பாதையில், சிறிய வயிற்றினை உடைய தம்பலப்பூச்சி குறுகுறுவென ஓடி,
நீலமணியுடன் கூடிய பவழம் போல காயாவின் அழகு மிக்க வாடற்பூவில் ஒளிந்து மறைய என்று கூறும் இப்பகுதி
தம்பலப்பூச்சியைப் பற்றி மேலும் இரு செய்திகளைக் கூறுகிறது. இப் பூச்சியின் வயிறு குறுகியதாக இருக்கும்
(குறு மோடு). அது குறுகுறுவென ஓடி ஒளிந்துகொள்ளும். எனவே, ஆளரவம் கேட்டு அதற்கேற்ப இயங்கக் கூடியது
அது.
எனவே, இதுவரை கண்டவற்றால் இப் பூச்சியைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது:-
இத்தனை பண்புகளிலும் சிவப்பு நிறம் என்ற ஒன்றைத் தவிர ஏனையவை cochineal என
அழைக்கப்படும் தம்பலப்பூச்சிக்கு இல்லை. எனவே, இதிலிருந்து நாம் இருவித முடிவுகளுக்கு வரலாம்.
- Cochineal எனப்படும் இந்திரகோபப்பூச்சி வேறு – மூதாய் என்றழைக்கப்படும் தம்பலப்பூச்சி வேறு.
- இந்திரகோபம், தம்பலப்பூச்சி, மூதாய் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் பூச்சி ஒன்றே
– ஆனால் அது cochineal என்றழைக்கப்படும் coccus cacti என்ற சப்பாத்துக்கள்ளிப் புழு அல்ல.
அப்படியென்றால் இது என்ன?
இப் பூச்சியின் பண்புகளைப் பற்றி ஆராய்ந்தபோது இது நமது கிராமங்களில் வெகுவாக அறியப்பட்ட
வெல்வெட் பூச்சியாக இருக்கலாம் எனத் தோன்றியது. இந்தத் தலைப்பில் வலைத்தளங்களில் தேடியபோது பல
தகவல்கள் கிடைத்தன. இது ஆங்கிலத்திலும் the red velvet mite எனப்படுகிறது. இது Trombidium grandissimum என்ற
வகையைச் சேர்ந்தது. இதைப்பற்றிக் கிடைத்த பல தகவல்களில் கீழ்க்கண்டவை நம் மூதாய்க்குப் பொருந்திவந்தன.
Trombidium grandissimum is a red mite about half an inch long and from a quarter to three-eighths of an inch in its widest part. It is covered with a scarlet, velvety down, and appears on the ground at the beginning of the rainy season. It is only to be found for a few weeks in the year. The mites are visible in large numbers early in the Monsoon season and so are also called rain mites in the subcontinent.
எனவே, தமிழ் இலக்கியங்களில் கோபம், கோவம், மூதாய், ஈயன் மூதாய் என்று அழைக்கப்படும்
இந்திரகோபம் எனப்படும் தம்பலப்பூச்சி என்பது வெல்வெட் பூச்சி, Trombidium grandissimum எனப்படும்
பூச்சியே என்பது தெளிவாகும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்