Skip to content

சொல் பொருள்

(பெ) 1. புண்ணினால் ஏற்பட்ட தழும்பு, காய்த்துப்போனதால் ஏற்பட்ட தழும்பு, 2. பழி, 3. குற்றம், கறை,  4. கருமணல்,  5. காயத்தின் வாய், 6. உளியாற்செதுக்கின உரு,  7. தடம், சுவடு, 8. மாவடு, மாம்பிஞ்சு,

சொல் பொருள் விளக்கம்

புண்ணினால் ஏற்பட்ட தழும்பு, காய்த்துப்போனதால் ஏற்பட்ட தழும்பு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cicatrice, scar, disgrace, defect, blemish, fine black sand, mouth of a wound, chiselled figure, imprint, mark, tender green mango

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78

கூரிய நுனி(யையுடைய தோட்டி) வெட்டின வடு அழுந்தின புகரையுடைய நெற்றியில்

மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை – பெரும் 78-80

மிளகின்
ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிக் காய்த்துப்போன தழும்பு அழுந்தின வலிமையான முதுகினையும்,
உயர்த்திய செவியினையும் உடைய கழுதை

மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள் – சிறு 121

குற்றமின்றி விளங்கிய, பழி இல்லாத, (தன் தொழில் நன்கு)வாய்க்கும் வாளினையுடைய

வடு இன்று நிறைந்த மான் தேர் – நற் 130/1

குற்றமின்றி நல்லிலக்கணங்கள் நிறைந்த குதிரைகளைப் பூட்டிய தேரில்

வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – மலை 556

கருமணல் இருக்கும் மணல்மேடுகளிலுள்ள மணலினும் பலரே

புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை – சிறு 181,182

புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்
பெரிய நகம் கிழித்த காயத்தினால் ஏற்பட்ட கிழிசல் அழுந்தின பசிய இலையினுடைய

கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 252

கூரிய சிற்றுளிகள் சென்று செத்திய உருவங்கள் அழுந்தின, வலிமையான, அச்சுக்குடத்தில்

நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கி – மது 569

நுண்ணிய அணிகலன்களையுடைய மார்பைத் (தம் மார்பில்) தடம்பதியும்படியாகத் தழுவி

வடு கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் – ஐங் 14/2

பிஞ்சுகள் தோன்றிய மா மரத்தின் வளமையான தளிர்கள் மடங்கி அசையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *