வருடை என்பது வரையாடு, மலை ஆடு
1. சொல் பொருள்
(பெ) 1. வரையாடு, மலை ஆடு 2. மேட இராசி
2. சொல் பொருள் விளக்கம்
தமிழ்நாட்டில் நீலகிரி முதலிய மலைகளில் காணப்படுவதை விலங்கு நூலார் குறிப்பிட்டுள்ளனர் . இதை விலங்கு நூலார் ( Nilgris Tahr என்பர் . தமிழில் ‘ நீலகிரித் தகர் என்று கூறலாம் .
மலைகளில் காடுகளுக்கு மேலே அப்பால் உள்ள மலை உச்சிகளிலும் , மலை முகடுகளிலும் செங்குத்தான சரிவுகளிலும் வருடை வாழுமென்று விலங்கு நூலார் கூறியுள்ளனர்.
இவை நன்கு குதித்துப் பாயக்கூடியது. பாறைக்குப் பாறை எளிதில் பாய்ந்து மலையுச்சியிலும் மலைச்சரிவிலும் மறைந்து விடும் .
இவை செல்லும் செங்குத்தான சரிவில் மனிதன் நடக்க முடியாது . வருடை ஒரு சிகரத்திலிருந்து அருகிலிருக்கும் சிகரத்திற்குப் பாயும் . அப்படிப் பாயும்போது கீழே விழாதபடி அதன் கால்கள் பாறையைப் பிடித்துக்கொள்ளும்.
விலங்கினத்தில் வெள்ளாட்டினத்தைச் சேர்ந்தது என்று விலங்கு நூலார் கருதுவர். வருடையின் ஆணிற்குத் தகர் என்றும் பெண்ணிற்குப் புருவை என்றும் ஆட்டினத்தின் பெயர் வழங்கப்பட்டதை உணர் வேண்டும். இதன் கொம்பு “வார்கோடு”.
வருடையின் கால்கள் நீண்டவையல்ல . நீளமாயின் மலைக்குவடுகளில் குதிப்பது இயலாது. குறுங்கால்வருடை என்று ஐங்குறுநூறு ( 287 ) கூறுகின்றது.வருடை மிகவும் கூரிய பார்வையும் பாதுகாப்புணர்ச்சியும் உடையது என்பர் . சிறிய ஓசை கேட்டாலும் குதித்தோடி ஒளிந்து கொள்ளுமென்பர்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Mountain sheep, Aries of the zodiac, Nilgris Tahr
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
நெடு வரை மிசையது குறும் கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட – ஐங் 287/1,2
நீண்ட மலையின் உச்சியில் உள்ள குட்டையான கால்களையுடைய வரையாட்டைப் பார்த்து,
தினைக் கதிரில் வந்து வீழும் கிளிகள் வெருளும் நாட்டினனே
உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர
வருடையை படிமகன் வாய்ப்ப – பரி 11/4,5
மிக்க வெண்மையான நிறத்தைக்கொண்ட வெள்ளியானது இடபராசியைச் சேர,
மேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்க
வரை ஆடு வருடை தோற்றம் போல – பட் 139
வரை வாழ் வருடை வன் தலை மா தகர் – மலை 503
செ வரை சேக்கை வருடை மான் மறி – குறு 187/1
வருடை மான் குழவிய வள மலை நாடனை – கலி 43/14
வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும் – கலி 50/4
வழை வளர் சாரல் வருடை நன் மான் – கலி 50/21
வேறு_வேறு இனத்த வரை வாழ் வருடை/கோடு முற்று இளம் தகர் பாடு விறந்து அயல – அகம் 378/6,7
போர் உடை வருடையும் பாயா – நற் 359/8
கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும் – நற் 119/7
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்