வாடூன் என்பது வாடிய ஊன், உப்புக்கண்டம்.
1. சொல் பொருள்
(பெ) உப்புக்கண்டம், வாடிய ஊன்.
2. சொல் பொருள் விளக்கம்
திருவிழாவுக்கு அண்டை கிராமங்களிலிருந்து மாட்டுவண்டிகளில் சாரிசாரியாக மக்கள் வருவர். ஏறக்குறைய ஒவ்வொரு வண்டியிலும் ஓர் ஆடு கட்டப்பட்டிருக்கும். திருவிழாவின்போடு அது சாமிக்குப் பலியிடப்படும். திருவிழா நேரத்தில் வேண்டுமளவுக்கு உண்டபின்னர், மீந்துபோன இறைச்சியை என்ன செய்வது? உப்பும் மஞ்சளும் அரைத்துத் தடவி, கோணியூசியால் ஒரு சிறு சரட்டில் கோத்து, வண்டியில் சரம் சரமாகத் தொங்க விடுவர். ஊர் திரும்பியதும் அவற்றை உருவி எடுத்து வெயிலில் நன்றாகக் காயவைப்பர். அந்த்த் துண்டுகள் ஈரமெல்லாம் புலர்ந்து இறுகிக் கெட்டியாகிவிடும். இதனை உப்புக்கண்டம் என்பர். வேண்டும்போது இதனை எண்ணெயில் பொரித்து உண்பர். சோற்றுடன் நீரிலும் வேகவைத்து உண்பர்.
மீன், ஆடு, மாட்டின் இறைச்சி மிகுந்து போகும் நேரங்களில் மக்கள் அவற்றுடன் உப்பை நன்கு கலந்து வெய்யிலில் காயவைத்து எதிர்காலப் பயன்பாட்டிற்கு சேமித்து வைப்பார்கள்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
dried flesh, dried salted fish, dried salted flesh, dried salted meat.
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி,
(கஞ்சியை)வடிக்காமல் பொங்கிய (மான் கறியின்)உப்புக்கண்ட(ம் சேர்ந்த) ஊன் சோற்றை
வாடூன் கொழும் குறை – புறம் 328/9
வெந்து வாடிய கொழுத்த ஊன்துண்டுகளையும்,
சூடு கிழித்து வாடூன் மிசையவும் – புறம் 386/4
கொழுப்புச் சத்து நிறைந்த இறைச்சியினால் ஆகிய உப்புக்கண்டத்தை நெருப்பில் சுட்டாலே உருகிவிடும்.
அதனை வாயில் வைத்து உறிஞ்சி உண்பர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்