Skip to content

சொல் பொருள்

(வி) தாண்டு, குதித்தோடு,

சொல் பொருள் விளக்கம்

தாண்டு, குதித்தோடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

jump, leap, gallop

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சிறு பைம் தூவி செம் கால் பேடை
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி – அகம் 57/1,2

சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை
நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து

முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி
ஏ தொழில் நவின்ற எழில் நடை புரவி
செழு நீர் தண் கழி நீந்தலின் – அகம் 160/9-11

தாற்றினால் குத்தப்பெறின் வேகம் அளவுகடந்துபோதலை அஞ்சி, மெல்ல
தாவிச் செல்லுதல் கொண்டமையின் கடிவாளத்தினால் அதனைக் குறிப்பிக்க,
அம்பின் வேகம் போலச் செல்லுதலைப்பழகிய அழகிய நடையினையுடைய குதிரைகள்
செழுமை வாய்ந்த நீரினையுடைய குளிர்ந்த கழியினைக் கடக்குங்கால்

வாவுதல் என்பது தாவுதல் (leap). நீந்துவதில் எத்தனையோ வகையுண்டு. இரு கைகளையும் முழுதும் முன்னே நீட்டி, அப்படியே பக்கவாட்டில் அவற்றை வலித்து உள்ளங்கைகளால் நீரைப் பின்னே தள்ளி உடலை முன்னே செலுத்துதலே வாவுதல். சிறிய சிறகுகளைக்கொண்ட குருவி போன்ற பறவைகள் தம் சிறகுகளைப் படபட-வென்று அடித்துக்கொண்டு பறக்கும். ஆனால் கொக்கு நாரை போன்றவைகளுக்குச் சிறகுகள் பெரியதாக இருக்கும். அவற்றை மேலும் கீழும் மெல்ல அசைத்து அசைத்து அவை பறக்கும். இதுதான் வாவுப் பறை. பழந்தின்னி வௌவால்கள் பெரிய சிறகுகளைக் கொண்டவை. எனவேதான் புலவர் வாவுப் பறை என்கிறார். மனிதர்கள் நீரில் வாவி வாவி நீந்துவது போல, இந்த வௌவால் வானத்தில் வாவி வாவி நீந்துகிறதாம். வாவுப் பறை நீந்தி என்ற சொல்லாக்கம் எத்துணை பொருத்தமாக வந்து விழுந்திருக்கிறது பாருங்கள்!

வாவு என்ற சொல்லைக்கொண்ட இரு குறிப்புகளும் நீந்தி என்ற சொல்லைக் கையாளுதலை உற்றுக்கவனிக்க.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “வாவு”

  1. சே.முத்துவிநாயகம்

    அய்யா வளர்க நும் தமிழ்த் தொண்டு.வாழ்க நீவிர் பல்லாண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *