விசும்பு என்பதன் பொருள்ஆகாயம்
1. சொல் பொருள்
(பெ) ஆகாயம்
- வானம், ஆகாயம், விண்
- மேகம்
- தேவலோகம்
- திசை
- சன்னமான அழுகை
- வீம்பு
- செருக்கு
2. சொல் பொருள் விளக்கம்
விசும்பு என்பது சூரிய சந்திரர், விண்மீன்கள், மேகங்கள், மேலோகத்தார், தெய்வமகளிர், பறவைகள் ஆகியோர்
வழிச்செல்லும் பகுதி.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
sky
- sky; visible heavens
- cloud
- heaven;
- direction
- Obstinacy
- Pride
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி – பெரும் 1,2 அகன்ற பெரிய வானில் பரந்த இருளை விழுங்கி, பகற்பொழுதைத் தோற்றுவித்து, எழுதலைச்செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி பால் மலி கடலின் பரந்து பட்டன்றே – நற் 348/1,2 நிலவானது, நீல நிற விசும்பில் பல கதிர்களைப் பரப்பி பால் மிகுந்த கடலைப் போல ஒளியைப் பரப்பி விளங்குகிறது; மை அற விளங்கிய மணி நிற விசும்பில் கைதொழும் மரபின் எழு மீன் போல – நற் 231/1,2 மேகங்கள் சிறிதுமில்லாமல் விளங்கிய நீலமணி நிறத்ததான விசும்பில் வணங்கக்கூடிய மரபினதான ஏழு மீன்களான சப்தரிஷிமண்டலம் போல கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 7,8 கடலில் முகந்த நிறைத்த சூல் கொண்டமேகங்கள், மின்னலாகியவாள் பிளந்த வானிடத்தே பெரிய துளியைச் சிதறி நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் வானவ மகளிர் மான கண்டோர் நெஞ்சு நடுக்குறூஉ கொண்டி மகளிர் – மது 581-583 நீல நிறத்தையுடைய வானத்தின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும் தெய்வமகளிர் போல, (தம்மைக்)கண்டோருடைய நெஞ்சு நடுக்கமடையும் வரைவின் மகளிர், வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல உரம் தலை கொண்ட உரும் இடி முரசமொடு பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர் அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே – திரு 120-125 கொம்பு மிக்கு ஒலிப்பவும், வெள்ளிய சங்கு முழங்கவும், வலிமையை(த் தன்னிடத்து)க் கொண்ட உருமேற்றின் இடி(யைப் போன்று ஒலிக்கும்)முரசுடன் பல பீலியையுடைய மயில் வெற்றிக் கொடியிலிருந்து அகவ, வானமே வழியாக விரைந்த செலவினை மேற்கொண்டு, உலகமக்களால் புகழப்பட்ட மிக உயர்ந்த சிறந்த புகழினையுடைய அலைவாய் என்னும் ஊரில் ஏற எழுந்தருளுதலும் (அவன்)நிலைபெற்ற பண்பே விசும்பு தைவருவளியும் (புறநா. 2) விசும்பிற் றுளிவீழி னல்லால் (குறள், 16) அங்கண் விசும்பி னமரர் (நாலடி, 373) நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் (தொல். 1579)
5. பயன்பாடு
பாரும் விசும்பும் அறியஎனைப் பயந்த தாயும்
உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்