சொல் பொருள்
(வி) 1. சிதறு, 2. துண்டாக்கு, 3. ஊற்று, சொரி, 4. தெளி, 5. உதறு,
சொல் பொருள் விளக்கம்
சிதறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
scatter, cut into pieces, pour, sprinkle, shake off
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும் – புறம் 188/5 நெய்யை உடைய சோற்றை உடம்பின்கண் படச் சிதறியும் யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின் ஆக மேனி அம் பசப்பு ஊர – அகம் 333/1,2 யா மரத்தின் ஒள்ளிய தளிரில் அரக்குப்பொடியைச் சிதறினாற் போன்ற, நின் உடம்பினது மேனியின்கண் அழகிய பசலை பரக்க நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர் – பெரும் 309,310 நெடிய மரமாகிய மாவின் நறிய வடுவினைத் துண்டாக்கிப்போட்ட, ஊறவைத்தல் நன்கமைந்த ஊறுகாயோடும் வகை வகையாகப் பெறுவீர் குருதி விதிர்த்த குவவு சோற்று குன்றோடு – பதி 88/11 இரத்தம் ஊற்றிக் கலந்து குவிக்கப்பட்டிருக்கும் குன்று போன்ற சோற்றுக் குவியலுடன் விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி காமர் சேவல் – அகம் 103/3,4 தெளித்தன போலும் அழகிய சிறிய பலவாய புள்ளிகளையுடைய அழகிய குறும்பூழ் சேவல் உருக்கு_உறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன – நற் 21/6 உருக்கிய நறுமணமுள்ள நெய்யில் பாலைத் தெளித்தாற்போல் புல்_இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர் முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால் கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய் வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ அதனை வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள் நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்டு நீங்கி புறங்கடை போயினாள் – கலி 115/4-12 ஆட்டினத்து ஆயர்மகன் சூடி வந்த ஒரு முல்லைச் சரத்தையும், தலைமாலையையும், மெல்லிய இயல்புடையவளே! என்னுடைய கூந்தலுக்குள் வைத்து முடிந்திருந்தேன், தோழியே! என் செவிலித்தாய் என்னுடைய தலைக்கு வெண்ணெய் தடவுவதற்காக என் கூந்தலை விரித்துவிட என் தாயும், தந்தையும் வீட்டிலே இருக்கும்போது, செவிலித்தாய் பதறிப்போக, என் தாயின் முன் விழுந்தது அந்தப் பூ; அதனை ஏன் என்று அவள் கேட்கவுமில்லை, கோபப்படவும் இல்லை, நெருப்பைக் கையால் தொட்டவர் அக் கையைப் பிதிர்க்குமாறு போலக் கையைப் பிதிர்த்து வீட்டைவிட்டு நீங்கி வாசலுக்கு வெளியே சென்றாள் – நச்.உரை. – விதிர்த்திட்டு – நடுங்கி உதறி – மா.இரா. விளக்கம். பருமம் களையா பாய் பரி கலி மா இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 179,180 சேணம் களையப்பெறாத பாயும் ஓட்டத்தையுடைய செருக்கின குதிரைகள் கரிய சேற்றையுடைய தெருவில் (தம்மேலே)வீசும் துளிகளை உடல் குலுக்கி உதற, ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப தண் நறும் சாந்தம் கமழும் தோள்மணந்து – அகம் 186/11,12 மிக்க தண்மை வாய்ந்த முழவினைக் குறுந்தடியால் அடிக்கவும் தண்ணிய நறிய சந்தனம் நாறும் தோளையுடையவளை மணம்புரிந்து மேலே குறிப்பிட்ட ஐந்து வகையான விதிர்ப்புகளை உற்றுநோக்குங்கால், விதிர்த்தலில் ஒரு விரைவான செயல் (quick action) தெரிகிறது. எனவே, இங்குக் கூறப்பட்டுள்ள ’எறி குணில் விதிர்ப்ப’ என்பதிலும் ஒரு விரைவான செயல் இருக்கவேண்டும். இங்குக் குறிப்பிடப்படும் முழவினைத் தடியால் விதிர்ப்பது என்பது, ஒரு மண நிகழ்வின் போது நடப்பதாகும். எறி குணில் விதிர்ப்ப — தோள் மணந்து’ என்று வருவதால், தற்காலத்துத் திருமணங்களில் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும்நேரத்தில் எழுப்பப்படும் கெட்டிமேளம் போல் அன்றைக்கும் விரைவாக முழவு அடிக்கப்படுவதையே பாடலாசிரியர் எறி குணில் விதிர்ப்ப‘ என்கிறார் என்று தோன்றுகிறது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்