சொல் பொருள்
(பெ) 1. விருந்தினர், 2. விருந்தினரை உபசரித்து வழங்கும் சிறப்பான உணவு, 3. புலன்களுக்கு / மனத்திற்கு மகிழ்வூட்டக்கூடியது, 4. ஏதேனும் புதிய ஒன்று, புதுமை
சொல் பொருள் விளக்கம்
விருந்தினர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
guest, feast, a treat, delight, any new thing, newness, novelty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்து வர கரைந்த காக்கையது பலியே – குறு 210/2-6 கூட்டமான பசுக்கள் கொடுத்த நெய்யோடு, தொண்டி முழுவதும் ஒருசேர விளைந்த வெண்ணெல்லால் ஆக்கிய சூடான சோற்றை ஏழு பாத்திரங்களில் வைத்து ஏந்திக் கொடுத்தாலும், அது சிறிதாகும் என் தோழியே! உனது பெரிய தோள்களை நெகிழ்த்த துன்பம் தீர விருந்தினர் வரும்படி கரைந்த காக்கைக்கு இடும் பலி விருந்து எவன் செய்கோ தோழி சாரல் ——————- ————- —————— சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கே – நற் 112 விருந்து என்ன படைப்போம் தோழி! மலைச்சாரலில் ——————- ————- —————— ஒலிக்கின்ற வலிய இடியுடன் செறிவாகக் கலந்துவந்த இந்த மழைக்கு வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட கார் தொடங்கின்றே காலை இனி நின் நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக வடி மணி நெடும் தேர் கடைஇ வருவர் இன்று நம் காதலோரே – ஐங் 468 வரிகளைக் கொண்ட தவளைகள் மிக்கு ஒலிக்க, தேரைகள் ஒன்றாய் ஒலிக்க, கார்காலம் தொடங்கிவிட்டது குறித்த பருவத்தில்; இனிமேல் உன் அழகாய் இறங்கும் பருத்த தோள்களுக்கு நல்ல விருந்தாக நன்கு வடித்த மணிகள் கட்டப்பட்ட நெடிய தேரைச் செலுத்தி வருவார், இன்று, நம் காதலர். அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை விருந்தின் பாணி கழிப்பி – மலை 538,539 அளவற்ற வலிமைகொண்ட கடவுளை வாழ்த்திய பின்னர், (உமக்கே உரித்தான)புதிய பாடல்களைப் பாடி ஆர் கலி வானம் தலைஇ நடுநாள் கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் – நற் 53/5-8 பெருத்த முழக்கமிடும் மேகங்கள் கூடிவந்து நள்ளிரவில் மிகுந்த மழையைப் பொழிந்ததாக, காட்டின் பாறைகளில் மோதி வரும் ஆற்றின் காய்ந்த சருகுகளோடும், உதிர்ந்த மலர்க் கொத்துக்களோடும் வரும் புதிய சுவையான நீர் மருந்தும் ஆகும் பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் மாயா வேட்டம் போகிய கணவன் பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் விருந்தின் வெம் காட்டு வருந்துதும் யாமே – நற் 103/6-9 பசி வருத்துவதால் சுருண்டுகிடக்கும் பசிய கண்ணையுடைய செந்நாயின், குறிதப்பாத வேட்டையை மேற்கொண்டு சென்ற, கணவனான ஆண்நாய், தன் அன்பில் பொய்க்காத மரபினையுடைய தன் பெண்நாயை நினைத்து வருந்துகின்ற புதிய வழித்தடமான கொடிய பாலை நிலத்தில் வருந்துகின்றேன் நான்! கரும் கோட்டு புன்னை குடக்கு வாங்கு பெரும் சினை விருந்தின் வெண்_குருகு ஆர்ப்பின் – நற் 167/1,2 கரிய கொம்பினையுடைய புன்னையின் மேலோங்கி வளைந்த பெரிய கிளையிலிருந்து புதியதாய் வந்த வெண்குருகுகள் ஒலிக்குமாயின் விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர் துறை கெழு கொண்க – நற் 172/7-9 புதியதாய் வந்த பாணரின் மெல்லிய இசைப்பாட்டுப் போல வலம்புரியாக வெண்சங்கு ஒலிக்கும் ஒளிர்கின்ற நீரையுடைய துறையைச் சேர்ந்த கொண்கனே! அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன் தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ இரந்தூண் நிரம்பா மேனியொடு விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே – குறு 33 தோழியே! இந்தப் பாணன் ஓர் இளம் மாணாக்கன் போல் இருக்கிறான். தன் ஊர் மன்றத்தில் எப்படி இருப்பானோ? இரந்து உண்ணும் உணவினையுடைய நன்கு வளர்ச்சி பெறாத மேனியோடு இந்தப் புது ஊரிலும் பெரும் சிறப்புடையவனாயிருக்கிறான் விருந்தின் வாழ்க்கையொடு பெரும் திரு அற்று என – பதி 71/19 புதிதாகத் தாம் தேடிய செல்வத்தோடு, தமது முன்னோர் தேடிவத்த பெரும் செல்வமும் அழிந்துபோயின என்று, விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப வேந்தனும் வெம் பகை தணிந்தனன் – அகம் 54/1,2 புதிதாய் முளைத்த அரசர்கள் அரிய அணிகலன்களைத் திறையாகக் கொட்ட (நம்)வேந்தனும் கொடிய பகைமை தீர்ந்தனன்; பேஎய் வெண்தேர் பெயல் செத்து ஓடி தாஅம் பட்ட தனி முதிர் பெரும் கலை புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும் – அகம் 241/9-12 வெள்ளிய பேய்த்தேரை மழைஎன்று கருதி ஓடி தாகம்பட்ட தனித்த முதிர்ந்த பெரிய கலைமான் அவ்விடத்தினின்றும் மீண்டூறைதல் மாட்டாது, அப் பேய்த்தேர் அசையும் இடமாய புதிய வெவ்விய காட்டின்கண்ணே வருத்தமுற்றுத் தங்கிக்கிடக்கும் விருந்தின் புன்கண் நோவு உடையர் – புறம் 46/7 முன்பு அறியாத புதியதொரு வருத்தத்தையுடையர் வேய்வை காணா விருந்தின் போர்வை அரிக்குரல் தடாரி – புறம் 369/20,21 குற்றமில்லாத புதிதாகப் போர்க்கப்பட்ட தோலையுடைய அரித்த ஓசையையுடைய தடாரிப் பறையை மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர – பரி 6/40 மெலியர் அல்லாத வலியவர் புதுப்புனலுக்குள் பாய்ந்து விளையாட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்