சொல் பொருள்
(வி) 1. பயிர் முதலியன வளர், உற்பத்தியாகு, 2. முற்று, முதிர், 3. உண்டாகு, 4. உற்பத்திச் செய், உண்டாக்கு 5. ஒன்றன் தன்மையைக் கொண்டிரு, 6. நிகழ், 7. பின் நிகழ்வாக ஆகு, பலனாக அமை,
சொல் பொருள் விளக்கம்
பயிர் முதலியன வளர், உற்பத்தியாகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grow, be produced, mature, ripen, come into being, raise, produce, possess the property of something else, occur, result in
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி – பெரும் 131 மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த பருக்கையாகிய சோற்றை உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை – நற் 138/1 உவர் நிலத்தில் உற்பத்தியாகும் குன்றுகளைப் போன்ற உப்புக்குவியல்களை விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு – மலை 109 முற்றிய தயிர் (கீழே விழுந்து ஏற்பட்ட)சிதறலைப்போல் பூக்கள் உதிர்ந்து, வளை வாய் சிறு கிளி விளை தினை கடீஇயர் – குறு 141/1 வளைந்த வாயையுடைய சிறிய கிளிகள் விளைந்து முற்றிய தினையின்மேல் வீழாதபடி விரட்ட நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195 நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை நனை விளை நறவின் தேறல் மாந்தி – அகம் 221/1 அரும்பினின்றும் உண்டாகிய கள்ளின் தெளிவைப் பருகி மை படு சிலம்பின் ஐவனம் வித்தி அருவியின் விளைக்கும் நாடனொடு – குறு 371/2,3 மேகங்கள் படியும் மலைச்சரிவில் மலைநெல்லை விதைத்து அருவிநீரால் விளைவிக்கும் நாட்டினனால் அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த – சிறு 101 அமிழ்தின் தன்மைகொண்ட இனிய பழத்தை ஔவைக்குக் கொடுத்தவனும் – அமிழ்து விளைதலாவது – அமிழ்தின் தன்மையைத் தான் உடைத்தாதல் காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அது தா தா என்றாளுக்கு தானே புறன் தந்து வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது ஓஓ பெரிதும் வியப்பு – பரி 24/34-40 ஒரு காதற்பரத்தையின் காதலன் தன் மார்பில் கிடந்த மணங்கமழும் மாலையைக் கழற்றி நீரில் விட, அதனை நீர் இழுத்துச் செல்ல,அவனது இல்பரத்தை அதனை எடுத்துச் சூடிக்கொள்ள, ஓர் அயலாளின் கூந்தலில் தன் காதலன் மாலையைக் கண்டு, அதனைக் கொடு, கொடு என்று கேட்ட காதற்பரத்தைக்கு, “இது தானாகவே எங்கிருந்தோ வந்து என் கூந்தலில் சூட்டிக்கொண்டது” என்று சொல்ல, “இது எப்படி நடந்தது? அவ்வாறு விளைந்ததற்கு வருந்தமாட்டேன், நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களையுடையவளே! இத்தகைய தருணத்தில் நீ இங்கு இருப்பாய் என அறிந்து அந்த மாலையை நீர் கொண்டுவந்து சேர்த்தது ஓஓ இது பெரிதும் வியப்பிற்குரியது” இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர் ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன் காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம் ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான் வீழ்க்கை பெரும் கரும்_கூத்து – கலி 65/24-29 பெரிய புலியைப் பிடிப்பதற்கு விரித்த வலையினில், ஒரு ஒன்றிற்கும் உதவாத குள்ள நரி மாட்டிக்கொண்டதைப் போல், காதலனுடனான சந்திப்பு கெடும்படியாகவும், நம் ஊருக்கெல்லாம் பெரும் பேச்சாகவும் ஆகி முடிந்துபோனது, என்றைக்கும் தனக்குத் தொழிலாகக் கொண்ட முதிய பார்ப்பானின் காம வேட்கை என்னும் பெரிய கேலிக்கூத்து!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்