Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. இற, 2. அழி, இல்லாமற்போ, 3. மாறு, பிறழ், 4. நீங்கு, 5. மலர்

2. (பெ) 1. பூ, 2. பூந்துகள், மகரந்தம்,

சொல் பொருள் விளக்கம்

இற,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

die, perish, cease to be, deviate, as from one’s course, leave, depart, blossom, flower, pollen

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வறம் கொல வீந்த கானத்து குறும் பூ – நற் 238/1

கோடை வாட்டுவதால் பட்டுப்போன காட்டில், சிறிதளவு பூவேயுள்ள
– கோடைக் காலத்தே வேனில்வெம்மை மிக்குவெதுப்புதலால் புற்பூடுகளும் செடி, கொடிகளும் பசுமையறப்
புலர்ந்து கரிந்து கெடுதலால் கானம் வறம் கொல வீந்த கானம் எனப்படுவதாயிற்று -ஔவை.சு.து.விளக்கம்.

பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள் – குறு 165/4
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/6-8

அறியாமை மிகுதியால் பகைகொண்டு மேலேறி வந்த
வேந்தர்கள் தம் உடம்பை விட்டு மேலுலகத்துக்குச் சென்று வாழும்படி
இறந்து விழும் போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன்

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய் புரி பழம் கயிறு போல
வீவது-கொல் என் வருந்திய உடம்பே – நற் 284/9-11

ஒளிவிடும் ஏந்திய கொம்புகளைக் கொண்ட யானைகள் தமக்குள் மாறுபட்டு பற்றி இழுத்த
தேய்ந்த புரிகளைக் கொண்ட பழைய கயிற்றினைப் போல
இற்றுப்போவதோ? என் வருந்திய உடம்பு.

வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு – குறு 149/3,4

வெள்ளைப் பூவைக்கொண்ட கரும்பினையுடைய உயர்ந்த மணலாகிய சிறு கரை
இனிய நீர் பெருகி நெருக்க கரைந்து விழுந்ததைப் போல்

பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள் – கலி 132/18

பாரத்தைத் தாங்கமாட்டாத இடுப்பை உடையதால், பூக்கள் உதிர்ந்த கொடியைப் போன்றவள்

தூ துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும் – மலை 75,76

தூய்மையான துளிகளை மிகுதியாகப் பெய்கின்ற பருவம் தவறாத வானத்தைப் போன்று,
பிறழாமற் கொடுக்கும் அவனது நாளோலக்கத்தையும் (முற்பகல் நேர அரசு வீற்றிருப்பு)

வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை
ஈர் எழு வேளிர் – அகம் 135/11,12

நீங்காத சிறந்த புகழினையும் வானை அளாவிய பெரிய குடையினையுமுடைய
பதினான்கு வேளிர்
– நாட்டார் உரை

புது நீர புதல் ஒற்ற புணர் திரை பிதிர் மல்க
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி – கலி 72/5,6

புது நீர் வரும் வழியிலுள்ள சிறு புதர்களின் மீது அலைகள் மோதுவதால் நீர்த்துவலை மிகுவதால்
அதனைத் திங்கள் என்று எண்ணி மலர்ந்த அல்லியின் வெண்மையான மலரின் அருகில்

நகு முல்லை உகு தேறு வீ
பொன் கொன்றை மணி காயா – பொரு 200,201

மலர்ந்து சிரிக்கின்ற முல்லையினையும், சிந்துகின்ற தேற்றா மலரினையும்,
பொன்னிறம் போன்ற நிறமுடைய கொன்றை மலரினையும், மணி போன்ற காயா மலரினையும் உடைய,

நல் நாள் பூத்த நாகு இள வேங்கை
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை – அகம் 85/10,11

நல்ல நாள்காலையில் பூத்த மிக இளைய வேங்கை மரத்தின்
நறிய பூக்களின் துகளை அளைந்த பொறிகளுடன்கூடிய வரிகளையுடைய மயில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *