Skip to content

சொல் பொருள்

(வி) 1. பெரிதாகு, பரு, 2. பொங்கு, 3. பூரிப்படை, 4. ஏக்கம்கொள், பெருமூச்சுவிடு, 5. இறுகு, விறைப்பாகு, 6. மிகு,

சொல் பொருள் விளக்கம்

பெரிதாகு, பரு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 increase in size, become enlarged, swell, build up, expand, have morbid desires, become tight, be copious or excessive; to increase

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஞாலம் வறம் தீர பெய்ய குணக்கு ஏர்பு
காலத்தில் தோன்றிய கொண்மூ போல் எம் முலை
பாலொடு வீங்க தவ நெடிது ஆயினை – கலி 82/1-3

“உலகத்தின் வறட்சி நீங்கும்படியாக மழை பெய்வதற்காக, கிழக்குத்திசையில் ஏறி
சரியான பருவத்தில் தோன்றிய கார்மேகத்தைப் போல, என்னுடைய முலைகள்
பாலால் பெருத்து வீங்க, மிகவும் காலம் தாழ்த்திவிட்டாய்,

பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர – கலி 134/6

பெரிய கடலில் ஓதநீர் பொங்கி எழுந்து கரையினைச் சேர,

கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு
வாடிய மென் தோளும் வீங்கின
ஆடு அமை வெற்பன் அளித்த_கால் போன்றே – கலி 43/28-31

நானும் அவளும் சேர்ந்து அவரின் சிறப்புகளைப் பற்றிப்பாட, என் தோழிக்கு
வாடிப்போயிருந்த மென்மையான தோள்களும் பூரிப்படைந்தன,
அசைகின்ற மூங்கிலையுடைய மலை நாட்டினன் நேரில் வந்து அன்பு காட்டியது போன்று!”

யானும் தாயும் மடுப்ப தேனொடு
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி
நெருநலும் அனையள்-மன்னே – நற் 179/5-7

நானும் தாயும் ஊட்டிவிட தேன்கலந்த
இனிய பாலை அருந்தாமல், ஏக்கங்கொண்டு விம்மி
நேற்றைக்குக்கூட அவ்வாறே இருந்தாள்;
– வீங்குவனள் – வெய்துயிர்த்து – ஔவை.சு.து.உரை

நீயே வினை மாண் காழகம் வீங்க கட்டி
புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே – கலி 7/9,10

நீயோ, சிறப்பாகச் செய்யப்பட்ட கையுறையை இறுகக் கட்டி,
பூவும் சாந்தும் பூசிச் சிறந்த அம்புகளை ஆராய்ந்து தெரிகின்றாய்;

விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் – அகம் 89/10

கொழுப்பினையுடைய ஊனைத்தின்ற விசைகொண்ட சிலையினராய மறவர்கள்
– வீங்கு – விறைப்பு – தமிழ்ப்பேரகராதி – விசைகொள்ளுதல் – விறைப்பாக இருத்தல் – இறுகக் கட்டப்பெறுதல்

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 161

விண்ணில் ஊர்ந்து திரிதலைச்செய்யும் மிகுந்த ஓட்டத்தையுடைய ஞாயிற்றோடு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *