வெளில் என்பது ஒரு வகை அணில்.
1. சொல் பொருள்
யானைத்தறி, தயிர் கடை தறி, அணில்
2. சொல் பொருள் விளக்கம்
யானைத்தறி,
மூவரியணிலைத் தவிர்த்து மற்றோர் அணிலையும் சங்க நூல்களில் இரண்டு பாடல்களில் கூறியுள்ளனர் . இதை வெளில் என்று அழைக்கின்றனர் . இதற்கு அணில் என்றே பொருள் கூறியிருப்பினும் இது மூவரியணில் அன்று என்றே தெரிகின்றது.
” காடுகால் யாத்த நீடுமரச் சோலை
விழைவெளில் ஆடுங் கழைவளர் நனந்தலை “-அகம் , 169
“ ஏனலங் காவலர் ஆனா தார்த் தொறுங்
கிளிவிளி பயிற்றும் வெளிலாடு பெருஞ்சினை “-அகம் , 12
இந்த வெளில் எனும் அணில் ஆடுவதாகக் கூறப்படும் சூழ்நிலை நெருங்கிய காடும் நீண்ட மரச்சோலையும், பெருஞ்சினை மரங்களுமாகையால் இந்த அணில் விலங்கு நூலார் குறிப்பிடும் The Indian giant squirrel ஆகவே இருக்கலாம் . இது பெரிய அணில் : அடர்ந்த காடுகளில் உயர்ந்த கிளைகளில் உச்சியில் ( Deciduous and moist evergreen forests of peninsular India ) வாழ்வது . இந்த அணில் கருமை நிறமானது. வெளில் என்ற பெயர் வெண்மையின்மையைக் குறித்துக் கருமையானது என்ற பொருளில் வழங்கினதாகத் தோன்றுகின்றது . இந்த அணில் மரத்திற்கு மரம் வெகுதூரம் தாவிக் குதிக்கும் .. வெளில் சோலையில் ஆடும் என்று இதையே குறித்தனர் . போலும் . தினைப்புனக்காவலர் கூவுந்தோறும் அதைக் கேட்டுப் பயந்து கிளிபோலக் கத்தியதாகக் கூறுவதையும் காணலாம் . சிறிய ஓசையைக் கேட்டாலும் பயந்து ஓயாது கத்தும் . குரலிலிருந்து இந்த அணிலைக் காட்டில் கண்டுபிடித்துக் கொள்ளலாம் விலங்கு நூலார் கூறுவர் . இந்த அரிய அணிலை The Indian Giant squirrel என்று ஆங்கிலத்திலும் Rainfo Tadica என்று விலங்கு நூலிலும் வழங்குவர் .
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Post to which elephants are tied, churning rod, squirrel, The Indian Giant squirrel, Ratufa indica
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – மலை 325-327
பெரிய நீர்ச்சுழலில் அகப்பட்ட கொடுங்குணமுள்ள யானையின்
மிகுகின்ற சினத்தைத் தணித்து, பெரிய கம்பங்களில் கட்டுவதற்கு,
(விலங்குமொழி கலந்த)கலப்பு மொழியால் பழக்கும் பாகருடைய ஆரவாரமும்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் – நற் 12/2,3
தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின்
வெண்ணெய் தோன்றச் சுழலும் சுழற்சியால் தறியின் அடிப்பகுதி முழக்கமிடும்
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை – அகம் 12/7
கிளிகள் (தம் இனத்தை)பலமுறை அழைத்துக்கூவும் அணில் ஆடும் பெரிய கிளைகளில்
வெளில் இளக்கும் களிறு போல – பட் 172
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி – பதி 84/3
நன் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து – கலி 97/16
விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை – அகம் 109/6
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி – புறம் 44/3
களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில்/கான மஞ்ஞை கணனொடு சேப்ப – புறம் 127/3,4
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு – புறம் 220/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்