சொல் பொருள்
வெள்ளிலோத்திரம், வெள்ளைப்பூ பூக்கும் மர வகை
சொல் பொருள் விளக்கம்
வெள்ளிலோத்திரம், வெள்ளைப்பூ பூக்கும் மர வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a tree with white flowers
Lodhra, Symplocos Racemosa
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர் அரும் சுரம் செல்வோர் சென்னி கூட்டும் – ஐங் 301/1,2 பெரிதான வெள்ளோத்திர மரத்தின் கறைபடியாத வெண்மையான பூங்கொத்துகள் கடத்தற்கரிய பாலை வழியில் செல்வோர் தம் தலையுச்சியில் அணிந்துகொள்ளுகின்ற சங்க இலக்கியத்தில் இந்த ஒரு பாடலைத்தவிர , வேறு இடங்களில் இப் பூ குறிப்பிடப்படவில்லை. 99 வகைப் பூக்களைக் குறிப்பிடும் குறிஞ்சிப்பாட்டிலும் இந்தப்பூ இடம்பெறவில்லை. இந்த ஐங்குறுநூற்றுப்பாடல் பாலைத் திணைக்குரியது. எனவே, இம் மலர் பாலை நில மலர் எனலாம். இப் பாடலிலும், சுரம் செல்வோர் இதனைத் தம் தலையில் அணிந்துகோல்வர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுரம் என்பது பாலை நில வழி. பாலயின் வெப்பத்தைத் தணிக்க இப்பூவைத் தலையில் அணிந்துகொள்வர் போலும். எனவே, இதனைக் குளிர்ச்சியுள்ள ஒரு பூ எனலாம். மால் வெள்ளோத்திரம் என இந்த மரம் குறிப்பிடப்படுவதால், இந்த மரம் மிகப் பெரியதாக வளரக்கூடியது என அறியலாம். இணர் என்று இங்கு குறிப்பிடப்படுவதால், இது கொத்துக்கொத்தாகப் பூக்கும் என்றும் அறியலாம். வால் இணர் என்றும் மை இல் வால் இணர் என்றும் இது குறிப்பிடப்படுவதால், இம்மலர் மிகத் தூய்மையான வெண்ணிறமுடையது என அறியலாம். சீவக சிந்தாமணியில் இந்த மலர் இரு இடங்களில் வெள்ளிலோத்திரம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மலர் மணமுள்ளது. இந்த மலர் காய்ந்து சருகானாலும் மணக்குமாம். இச்சருகைப் பொருக்கு’ என்பர். இப்பொருக்கை அரைத்துச் சாந்தாக்கிக் காந்தருவதத்தைக்குக் குவளை இதழின் தடிப்பு அளவில் பூசினார்களாம். பொருக்கு என்பதற்கு மரப்பட்டை என்றும் பொருள். எனவே இந்த மரத்தின் சன்னமான பட்டையை அரைத்துப் பூசினார்கள் என்றுங்கொள்ளலாம்.. வாச நெய் வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்ப பூசி வெள்ளிலோத்திரத்தின் பூம் பொருக்கு அரைத்த சாந்தின் காசு அறு குவளை காமர் அக இதழ் பயில மட்டித்து ஆசு அற திமிர்ந்து மாதர் அணி நலம் திகழ்வித்தாரே – சிந்தா : 3 622 இந்தப்பூவை மாலையாகத் தொடுத்தும் அணிந்தனர் என்று சிந்தாமணி குறிப்பிடுகிறது. வெள்ளிலோத்திரம் விளங்கும் வெண் மலர் கள் செய் மாலையார் கண் கொளா துகில் அள்ளி ஏந்திய அரத்த அல்குலார் ஒள் எரி மணி உருவ பூணினார் – சிந்தா 13 :2685 இந்த மரத்தின் பல பாகங்கள், குறிப்பாக, இதன் மரப்பட்டை சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு இது வெள்ளிலாதி, காயவிலை, தில்லகம் என்றும் அழைக்கப்படுகிறது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்