சொல் பொருள்
(பெ) 1. மாட்டுவண்டியில் காளைகள் பூட்டும் இடம், நுகத்தடி, 2. வண்டியின் பாரம், சுமை, 3. பொறுப்பு, 4. கணையமரம், 5. முன்னணிப்படை, தூசிப்படை, 6. வலிமை
சொல் பொருள் விளக்கம்
மாட்டுவண்டியில் காளைகள் பூட்டும் இடம், நுகத்தடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Yoke, burden, load, stress, pressure, protecting bar of the door, van of the army, power, strength
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெண் கழி விளைந்த வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை – அகம் 159/1,2 தெளிந்த கழியின்கண் விளைந்த வெண்மையான கல் உப்பின் விலையைக் கூறி விற்ற வளைந்த நுகத்தையுடைய வண்டிகளின் வரிசை எருதே இளைய நுகம் உணராவே – புறம் 102/1 காளைகள் இளையன, வண்டியின் பாரத்தை உணரமாட்டா. எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் எழுவர் பூண்ட ஈகை செம் நுகம் விரி கடல் வேலி வியல்_அகம் விளங்க ஒருதான் தாங்கிய உரன் உடை நோன் தாள் – சிறு 112-115 (தம்)மேலே வருகின்ற போர்களைக் கடந்த கணையத்துக்கு ஒப்பான திணிந்த தோளினையுடைய எழுவரும், மேற்கொண்ட கொடையாகிய செவ்விய பாரமாகிய பொறுப்பைப் பரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் (எல்லாம்)விளங்கும்படி ஒருவனாகத் தானே(தனியொருவனாகப்) பொறுத்த வலிமையையுடைய முயற்சியினையுடையவனும் வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை கொடு நுகம் தழீஇய புதவின் செம் நிலை நெடு நுதி வய கழு நிரைத்த வாயில் – பெரும் 126-128 உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சூழ்ந்த காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும், உருண்ட கணையமரம் குறுக்கிலிடப்பட்ட ஒட்டுக்கதவினையும், செம்மையான நிலையினையும்(கொண்ட), நெடிய முனையினையுடைய வலிமையான கழுக்களை நிரைத்த ஊர்வாயிலையும் உடைய, இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் நுகம் பட கடந்து நூழிலாட்டி – மலை 86,87 வெகுதூரத்தில் உள்ளனவாயினும், பகைவர் நாட்டின் (வண்டிக்கு நுகத்தடி போன்ற)முன்னணிப்படை வீழுமாறு மேற்சென்று (படையினரைக்)கொன்று குவித்து நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் – பதி 63/15 உன் வலிமையைக் கொண்டு மேலும் பல போர்களை வென்றாய்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்