சொல் பொருள்
(1) அடக்கம் – அடக்கம் செய்யப்பட்ட இடம்
(2) அடக்கம் என்பது உயர்ந்தோர் முன் அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை, பணிந்த மொழியும், தணிந்த நடையும், தானை மடக்கலும், வாய்புதைத்தலும் முதலாயின. (தொல். பொருள். 250. பேரா.)
(3) அடக்கமாவது, பிறர் தன்னை வியந்து உரைக்கத் தான் அடங்கி இருத்தல். (நாலடியார் 170. தருமர்.)
குறிப்பு:
பெரியார் பெருமை சிறு தகைமை; ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம்; தெரியுங்கால்,
செல்வம் உடையாரும் செல்வரே, தற்சேர்ந்தார்
அல்லல் களைபஎனின். –நாலடியார் 170
(பொ-ள்.) பெரியார் பெருமை சிறுதகைமை – கல்வி கேள்விகளிற் பெரியாருடையபெருமைக் குணமாவது யாண்டுந்தாழ்வுடைமையாயிருத்தல்; ஒன்றிற்கு உரியார்உரிமை அடக்கம் – வீடுபேற்றிற்கு உரியரானமெய்யுணர்வாளர்க்கு உரிமையான பண்பாவாதுமனமொழி மெய்கள் அடக்கமாயிருத்தல்;தெரியுங்கால் – ஆராயுமிடத்து, செல்வமுடையாரும்செல்வரே தற் சேர்ந்தார் அல்லல் களைப எனின் -தம்மை அடைந்தவர்களுடைய வறுமைத் துன்பங்களைநீக்குவார்களாயின் செல்வம் படைத்தவர்களும்செல்வரேயாவர்.
(க-து.) செல்வமும் கல்வியும்மெய்யுணர்வுமுடைய பெரியோர், யாண்டும் உதவியும்பணிவும் அடக்கமு முடையராயிருப்பர்.
(வி-ம்.) சிறியதன்மையுடையார்போல் தாழ்வுடையராயிருத்தலின்அப் பணிவுடைமையை ஈண்டுச் சிறு தகைமையென்றார்.சிறப்பு நோக்கி வீடுபேறு, ஒன்றெனப்பட்டது.தற்சேர்ந்தார், ஒருமை பன்மை மயக்கம்.”தற்சேர்ந்தார் ஒற்கம் கடைப்பிடியாதார்”1என்றார் பிறரும். பெரியாராயினார்இத்தகையினராதலின் இது தெரிந்து இந்நிலைகட்கேற்ப அவர்பாற் பிழைபடா தொழுகிக்கொள்க வென்பது கருத்து. இவ்வதிகாரத்தில்பெரியாரியல் புரைப்பனவாய் வந்திருக்கும் இதுபோன்ற செய்யுள்கட்கும் இவ்வாறுரைத்துக் கொள்க.
சொல் பொருள் விளக்கம்
மூச்சு, அடக்கி அப்படியே இயக்கமறச் செய்வது அடக்கம் எனப்படும். மூச்சுப் பயிற்சியில் தேர்ந்த ஓகியர் தம் மூச்சை இயங்காமல் அடக்கி இயற்கை எய்திவிடலுண்டு. அத்தகைய நிலை ‘அடக்கம்’ எனப்படும். இஃது இன்னார் அடக்கமான இடம்’ என்பது வழக்காறு. ஐம்புலன்களை அடக்கும் அடக்கத்தில் இருந்து, மூச்சையே அடக்கி நிறுத்தி விடும் இவ்வடக்கத்திற்குப் பொருள் விரிவாகியது. ‘அடக்கம் செய்தல்’ எனப் புதைத்தலைக் கூறும் வழக் குள்ளதை அறிக. ‘ஒடுக்கம்’ என்பது காண்க.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்