Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. சேர், 2. நெருக்கமாக இரு, 3. சாத்து, மூடு, 4. அனுபவி, 5. சேர்ந்திரு, தங்கியிரு,

2. (பெ) 1. இலை, 2. முளை 3. ஒரு தின்பண்டம்

சொல் பொருள் விளக்கம்

1. சேர்,

அடை என்றால் இலை என்பது பொருள். இலைகளுக்குப் பொதுப் பெயராக வழங்கப்பட்ட அடை என்னும் சொல் வெற்றிலைக்குச் சிறப்புப் பெயராகவும் வழங்கப்பட்டது. அடை (வெற்றிலை) அருந்தும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. வெறும் வெற்றிலையை மட்டும் உண்பது வழக்கம் இல்லை. வெற்றிலையாகிய அடையோடு கமுகின் காயாகிய பாக்கையும் சேர்த்து உண்பது வழக்க மல்லவா! ஆகவே பாக்குக்கு அடைக்காய் என்று பெயர் உண்டாயிற்று. அடைக்காய் என்றால் அடையுடன் சேர்த்து உண்ணப்படும் காய் என்பது பொருள். கோவலன் உணவு கொண்ட பிறகு கண்ணகி வெற்றிலை பாக்குக் கொடுத்தாள் என்பதை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

arrive at, reach, be close, shut, close, experience, enjoy, be full, replete, reside, leaf, sprout, an eatable, pancake

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கோவலன் உணவு கொண்ட பிறகு கண்ணகி வெற்றிலை பாக்குக் கொடுத்தாள் என்பதை 

‘அம்மென் திரைய லொடு அடைக்காய்’ கொடுத்தாள் என்று சிலப்பதிகாரம் (16:55) கூறுகிறது. 

திரையல் - வெற்றிலைச் சுருள். அடைக்காய் - பாக்கு.

வானவரம்பன் நல் நாட்டு உம்பர்
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் – அகம் 389/16,17

வானவரம்பனது நல்ல நாட்டின் அப்பாலுள்ள
வெப்பம் மிக்க கொடிய காட்டினை அடைந்த இடத்தே

உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின் – நற் 24/2

உடும்பு செறிந்தாற் போன்ற நெடிய செதில்களையுமுடைய விளாமரத்திலிருந்து

பலர் புகு வாயில் அடைப்ப கடவுநர்
வருவீர் உளீரோ எனவும்
வாரார் தோழி நம் காதலோரே – குறு 118/3-5

பலரும் புகுவதற்குரிய வாசலை அடைக்க எண்ணி, வினாவுவோர்
உள்ளே வருவோர் இருக்கிறீர்களா என்று கேட்கவும்
வாரார் ஆயினர் நம் காதலர்.

சேறிரோ என செப்பலும் ஆற்றாம்
வருவிரோ என வினவலும் வினவாம்
யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின்
பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து
நெடு மென் பணை தோள் அடைந்திசினோரே – குறு 268

செல்கின்றீரோ என்று சொல்வதற்கும் வலிமையற்றோம்
வருவீரோ என்று கேள்விகேட்டலையும் செய்யோம்
எவ்வாறு செய்வோம்? தோழி! பாம்பின்
படத்தையுடைய பெரிய தலையைத் துண்டிக்கும் இடியோடு கூடிய
நள்ளிரவு என்று எண்ணாமல் வந்து
என் நீண்ட மென்மையான பருத்த தோள்களை அடைந்தவரை

வேலே குறும்பு அடைந்த அரண் கடந்து – புறம் 97/4

வேல்கள்தாம், குறும்பர் சேர்ந்த அரண்களை வென்று
– ஔவை.சு.து.உரை
அவன் வேல்களோ
குறும்பர் வாழும் அரண்களை வென்று
– சாலமன் பாப்பையா உரை.

ஆம்பல் மெல் அடை கிழிய – அகம் 36/3

ஆம்பலின் மெல்லிய இலை கிழியுமாறு

பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூ புற நல் அடை அளைஇ – பெரும் 277,278

பாம்பு வாழும் புற்றிலிருக்கும் புற்றாம்பழஞ் சோற்றை ஒக்கும்,
பொலிவுள்ள புறத்தினையுடைய நல்ல (நெல்)முளையை (இடித்து அதில்)கலந்து

நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை
அயிர் உருப்புற்ற ஆடு அமை விசயம்
கவவொடு பிடித்த வகை அமை மோதகம்
தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க – மது 624-627

நல்ல வரிகளையுடைய தேனிறாலை ஒக்கும் மெல்லிய அடையினையும்,
கண்டசருக்கரையை வெப்பமேற்றிச் சமைத்தல் அமைந்த பாகினை(க் கூட்டிய)
உள்ளீட்டோடெ பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,
இனிய கூழினையும் உடைய அப்ப வாணிகரும் தூங்குவனராய் உறங்க
– விசயம் ஆடு அமை என்னும் தொடரை அடைக்கு முன் கூட்டிப் பாகிலே சமைத்த அடை என்பர் நச்சினார்க்கினியர் – பொ.வே.சோ.விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *