சொல் பொருள்
உயிர்களுக்கு இதமாவன செய்தலும் சத்தியம் சொல்லுதலும் தான தருமங்களைச் செய்தலுமாம்
பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள்படும்
அறு + அம்: அறுக்கப்பட்டது
அறம் என்னுஞ் சொல் அறு என்னும் முதலிலிருந்து உண்டாயது; ஆகவே ஒருவனுடைய நினைவு சொற் செயல்களின் தீமையை அறுப்பதே அறம் என்னுஞ் சொல்லுக்குப் பொருளாதல் பெறப்படும்.
அறம் ‘அறு’ என்னும் முதனிலையிற்றோன்றி அறியாமையினையும் அது காரணமாகச் செய்யும் தீவினையினையும் அறுப்பதென்னும் பொருட்டாம்.
சொல் பொருள் விளக்கம்
(1) அறமாவது, உயிர்களுக்கு இதமாவன செய்தலும் சத்தியம் சொல்லுதலும் தான தருமங்களைச் செய்தலுமாம். (நாலடி. அறன் வலியுறுத்தல். விளக்கவுரை).
(2) அறம் என்னும் சொல் அறு என்னும் முதனிலை அடியாகப் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள்படும். அம் மூலப் பொருளை உட்கொண்டே ஆசிரியர் ஈண்டு ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’ என்றார். (திருக்குறள் 34. தண்ட.)
(3) அறம் என்பது எதுவாக இருந்தாலும், அஃது உலக வாழ்விற்கு உகந்ததாக இருத்தல் வேண்டும். வாழ்விற்கு உகந்ததாக இருத்தல் வேண்டும். வாழ்விற்கு வளம் அளிப்பதாக அஃது அமைதல் வேண்டும். (குறள் கூறும் சட்டநெறி. 6.)
(4) அறு + அம்: அறுக்கப்பட்டது; மனுமுதலிய நூல்களால் இன்னன செய்க இன்னன தவிர்க என வரையறுத்துக் கூறப்பட்டமைபற்றி “அறம்” என்பது அங்ஙனம் அறுத்துரைக்கப்பட்ட தருமத்திற்காயிற்று. ஈண்டு ‘அம்’ செயப்படுபொருண்மை விகுதி. தொழிலாகு பெயர். (தமிழ் வியாசங்கள் 52).
(5) அறம் என்பது தமிழ்ச்சொல். இதனை வடி நூலார் தர்மம் என்பர். அறம் என்னுஞ் சொல் அறு என்னும் முதலிலிருந்து உண்டாயது; ஆகவே ஒருவனுடைய நினைவு சொற் செயல்களின் தீமையை அறுப்பதே அறம் என்னுஞ் சொல்லுக்குப் பொருளாதல் பெறப்படும். (இளைஞர்க்கான இன்றமிழ். 130).
(6) அறம் ‘அறு’ என்னும் முதனிலையிற்றோன்றி அறியாமையினையும் அது காரணமாகச் செய்யும் தீவினையினையும் அறுப்பதென்னும் பொருட்டாம். (திருவாசக விரிவுரை. 78).
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்