சொல் பொருள்
ஒருவர் இன்னொருவருடன் அல்லது ஒரு பண்பு இன்னொரு பண்புடன் சென்று தழுவுதல், முற்றிலும் பொருந்தி விரவுதல்
அளவளாவுதல் எனபது ஒருவருடன் ஒருவர் உரையாடுதல், அன்புணர்ச்சி பரிமாறி நட்பாடல், பண்பில் கலந்து ஒரு வயப்படுதல் என்பதே ஆகும்.
சொல் பொருள் விளக்கம்
அளாவுதல் என்ற சொல் இன்று ஒரு பொருள் மற்றொரு பொருளுடன், ஒருவர் இன்னொருவருடன் அல்லது ஒரு பண்பு இன்னொரு பண்புடன் சென்று தழுவுதல், முற்றிலும் பொருந்தி விரவுதல் என்ற பொருளே தருகிறது.
இஃது இச்சொல்லின் ஒரு திசைத் தன்மையை நன்கு விளக்குகிறது. நீர் வளாவுதல் என்பது வெந்நீருடன் தண்ணீரைக் கலத்தல் குறிக்கும். வெந்நீரின் மிகுவெம்மை தண்ணீரின் மிகு தன்மையுடன் கலந்து வெம்மை வெந்நீரில் இருந்து தண்ணீருக்குச் செல்கிறது. தண்ணீரின் தண்மையும், வெந்நீரின் வெம்மையும் இரண்டும் இதனால் மட்டுப்பட்டு மட்டு வெம்மை அல்லது மட்டுத்தண்மை அஃதாவது இள வெதுவெதுப்பு அல்லது கதகதப்புத் தன்மை அடைகின்றன.
வளாவுதல் இவ்வாறு ஒருதிசைச் செயலானாலும் அஃது உண்மையில் இருதிசைப் பண்பாய் விடுகிறது. அளாவுதல் என்பதன் மற்றொரு வடிவம் அதன் இரட்டுறு தொகையான அளவளாவுதல் ஆகும். இஃது இறுதிப் பண்பே, இருதிசைப் பண்பே காட்டுகிறது. ஏனெனில் அளவளாவுதல் எனபது ஒருவருடன் ஒருவர் உரையாடுதல், அன்புணர்ச்சி பரிமாறி நட்பாடல், பண்பில் கலந்து ஒரு வயப்படுதல் என்பதே ஆகும். அளைதல் என்ற சொல் அளாவுதல் என்பதனுடன் தொடர்பு உடைய சொல்லே ஆகும். மிகத் தொல் பழந்தமிழில் இரண்டும் ஒரே மூலச் சொல்லின் இருவடிவங்களாக மலர்ந்த சொற்களே என்னலாம்.
ஆயினும் அளைதல் பொருள்கள் விரவும்படி கருத்தற்ற குழந்தைச் செயலையும், அளாவுதல், வளாவுதல், அளவளாவுதல் என்பன படிப்படியாகப் பொருள் விரவுதலில் இருந்து பண்பு விரவுதல், உயிர்களும் மனிதர்களும் உடல் உளம் விரவக் கலந்து பண்பிற் கலத்தல் ஆகியவை குறித்தல் காணலாம். (குறள். மணிவிளக்கவுரை ஐஐ; 391.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்