ஆன்பொருநை என்பது ‘அமராவதி ‘ எனப்படும் ஆற்றின் பழைய தமிழ்ப் பெயர்
1. சொல் பொருள்
(பெ) ‘அமராவதி ‘ எனப்படும் ஆற்றின் தமிழ்ப் பெயர், கரூர் அருகிலுள்ள ஓர் ஆறு, ஆன்பொருந்தம்.
2. சொல் பொருள் விளக்கம்
சேரநாட்டுள்ளதோர் யாறு. ஆநிரைகள் நிறைய இவ்வாற்றங்கரைகளில் காணப்பட்டதால் இப்பெயர். ஆவினங்கள் மேய்ந்து திகழுமாறு பாயும் ஆறு என்ற பொருளில் அமைந்தது. ஆனி, வானி, ஆன்பொருந்தம், தண்பொருநை, சூதநதி எனவும் கூறப்படும்
பொருநை –‘தண்பொருநை‘, ‘பொருநை‘, ‘பொருநல்‘, ‘தண் பொருத்தம்‘, ‘தாமிரபரணி‘ என இலக்கியங்களும், ‘தண்பொருந்த ஆறு‘, ‘தண் பொருத்தப் பேராறு‘, ‘முடி கொண்ட சோழப் பேராறு‘ என்று கல்வெட்டுகளும் இன்றைய தாமிரபரணி ஆற்றினைச் சுட்டுகின்றன.
அமராவதி ஆறு காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். பழனி மலைத்தொடருக்கும்ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது. இதனுடன் பாம்பாறு, சின்னாறு மற்றும் தேவாறு ஆகியவை இணைந்து கொள்கின்றன. இது அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு அமராவதி நீர்த்தேக்கம் தோன்றுகிறது. அங்கிருந்து வடகிழக்காக செல்லுகையில் கொழுமம், அருகில் குதிரை ஆறு இணைந்த பின் கொமரலிங்கம்,தாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது. உபநதிகள் சண்முகா நதி, குடகனாறு, உப்பாறு ஆகியன. சங்ககாலத்திற்குப் பின் இந்த ஆற்றுக்கு ஆம்ரபி என பெயர் வழங்கி வந்துள்ளது. கொழுமம், அருகில் இந்த ஆற்றுடன் அசுவநதி குதிரை ஆறு|குதிரையாற்றுடன் இணைந்து வடக்காக செல்கிறது. சங்ககால தமிழ்ப்பெயர் ஆன்பொருநை ஆகும்.
இந்த ஆன்பொருநை
ஆற்றின் கரையிலேயே பொருந்தல்
என்ற சங்ககால ஊரின் எச்சங்கள் அகழ்வாய்வில் வெளிவந்திருந்தன. இந்தப் பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த நெல்மணிகளையுடைய கலன் ஒன்றில் வய்ர
என்ற தமிழி எழுத்துகள் பொறித்த சான்று கிடைத்தமையும்; அந்த நெல்மணிகள் கதிரலை கரிமக் காலக் கணிப்பில் பொ.ஆ.மு 490 எனத் தெரிய வந்தது (BCE490, AMS dating by Beta analytic, USA);
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
A river near Karur, Amaravati River
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
திருமா வியல்நகர்க் கருவூர் முன்றுறைத்
தெள் நீர் உயர்கரைக் கவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே – அகம் 93/21-23
ஆன்பொருநை, ஆன்பொருந்தம் என்றும் அழைக்கப்படும். இவ் ஆறு இப்போது அமராவதி யென வழங்குகிறது.
– புறநானூறு, 36, ஔ.சு.து உரை விளக்கம்
ஓரரசரை வாழ்த்துங்கால் அவரை அவர் யாற்று மணலினும் வாழ்கவென்றல் மரபாகலான் இங்ஙனங் கூறினான்.
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய – புறம் 36/5
பொன்னால் செய்த கழங்குகளை வைத்து திண்ணைபோன்ற மணல்மேட்டில் விளையாடும்
குளிர்ந்த நீரையுடைய ஆன்பொருநை ஆற்றின் வெண்மையான மணல் சிதறும்படி
தண் ஆன்பொருநை ஆடுநர் இட்ட – வஞ்சி:27/231
தண் ஆன்பொருநை மணலினும் சிறக்க – வஞ்சி:28/126
வாழியரோ வாழி வரு புனல் நீர் ஆன்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே – வஞ்சி: 29/128,129
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்