1. சொல் பொருள்
(பெ) 1. காட்டுப்பசு,காட்டு எருது, காட்டா 2. காட்டில் மேயும் பசு. பார்க்க – ஆமான்
2. சொல் பொருள் விளக்கம்
இதை ஆமாவென்றும் அழைப்பர். இஃது ஆவைப் போன்றது என்று பழந்தமிழர் கருதினர் . தொல்காப்பிய உவம இயலில் பேராசிரியர் உவமத்தாலும் பொருளைப் புலப்படுத்தல் எப்படி என்பதற்கு, ஆபோலும் ஆமா என்றக்கால் ஆமா கண்டறியாதான் காட்டுட் சென்றவழி அதனைக் கண்டால் ஆபோலும் என்னும் உவமையேபற்றி ஆமா இதுவென்று அறியுமாகலா னென்பது என்று எழுதியுள்ளார் . ஆபோலும் ஆமா என்று தொன்றுதொட்டு வழங்கிய உவமையை உணர்ந்தவன் , ஆமாவைக் கண்டறியாதவன் காட்டில் அதைக் கண்டதும் இதுதான் ஆவைப் போலிருக்கிறது , ஆதலின் இதுவே ஆமா என்று கண்டறிவான் என்று கூறியிருப்பதிலிருந்து ஆமா எதுவென்று நாம் உற்றுணரலாம் .
ஆபோன்று, (பசுமாட்டைப் போன்று) இன்றும் காட்டில் காணப்படும் விலங்கை விலங்கு நூலார் The Bison என்பர். இது மாட்டினத்தைச் (oxen) சார்ந்த காட்டில் வாழும் மாடு (wild oxen) என்பர். உரையாசிரியர்களும் காட்டுப்பசு, காட்டு எருது, காட்டா என்று பொருள் கூறி இருப்பதைக் காணலாம். ஆபோலும் ஆமா என்ற உவமையைப் புரியாத இன்றைய ஆசிரியர்கள் ஒருவகை மான் என்றும் ஏதோ ஒரு விலங்கு என்றும் கூறினர்.(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 67- 68.)
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Bison, Gaur
wild oxen, wild cow
cows grazing in forest
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
தினைவிளை சாரல் கிளிகடி பூசல்
மணிப்பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல் – மது 291-293
தினை விளையும் மலைச்சாரலில் வந்து வீழும் கிளிகளை ஓட்டும் ஓசையும்,
மணி போன்ற பூவினையுடைய அவரையின் நிறம் மிக்க தளிரைத் தின்னும்
காட்டுப்பசுக்களை ஓட்டுகின்ற கானவர் ஓசையும்
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு வரை நன் புல் ஆர – புறம் 117/4,5
மனையிடத்துக் கன்றினை ஈன்ற அமர்த்த கண்களையுடைய
ஆமா நெடிய மலையில் நல்ல புல்லை மேய
ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று – திரு 315
அருவிகள் வீழும் மிக உயரமான செங்குத்தான மலையில் ஆமான் ஏறு குரலிட்டதாகக் கூறியுள்ளது . ஆமான் குன்றில் வாழும் விலங்கு என்று விலங்கு நூலார் கூறுவர் . குன்றுகளில் உள்ள காடுகளில் 6,000 அடி வரை மேலே ஏறி வாழும் என்று கூறுவர் . மிகப் பெரிய உடலைப் பெற்றிருந்தாலும் இவை குன்றுகளில் மிக நன்றாக ஏறும் .
தொல்காப்பிய எழுத்ததிகாரச் சூத்திரம் 142 க்கு எடுத்துக்காட்டாக குன்றேறாமா என்பது கூறப்பட்டுள்ளது . குன்றேறா + மா என்றும் குன்றேறு + ஆமா என்றும் பிரிக்கப்படும் . குன்றேறாமாவுள தாயினும் ஆமா குன்றேறும் என்பதைக் குறிப்பாகக் காட்டியுள்ளமை போற்றத்தக்கது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்