Skip to content

சொல் பொருள்

(வி) 1. தாங்கு, பொறு, 2. கொடு, அளி, 3. உலர்த்து, புலர்த்து, 4. போக்கு, நீக்கு (பசி முதலியவற்றைத் தணி), 5. செய், 6. செய்ய இயலு, 7. நேர்படு, ஒப்பாகு, 8. போதியதாகு, 9. ஆறவை, வெம்மை தணிய வை, 10. உதவு, 11. நடத்து, 12. நிகழ்த்து

சொல் பொருள் விளக்கம்

1. தாங்கு, பொறு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bear, give, as alms, to help, assist, dry, remove, assuage, appease, alleviate, mitigate, do perform, be possible to do, be equal to, be comparable, be sufficient, cool, provide help, lead, deliver (speech)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மை பட்டு அன்ன மா முக முசு கலை
ஆற்ற பாயா தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி ஆங்கு நாடன் – குறு 121/2-4

மையை ஊற்றியதைப் போன்ற கரிய முகத்தைக்கொண்ட ஆண்குரங்கு
கிளை தாங்கும்படி தாவாத தவறு, அதனை ஏற்றுக்கொண்டு முறிந்த
கிளைக்கு ஆகினாற்போன்று,

நன் நுதல் பசப்பவும் நறும் தோள் நெகிழவும்
ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி
நம் பிரிந்து உறைந்தோர் மன்ற – ஐங் 227/2-4

உன் நல்ல நெற்றி பசந்துபோகவும், நறிய தோள்கள் மெலிவடையவும்,
பொறுக்கமாட்டேன் நான் என்று நாம் ஏற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு,
நம்மை பிரிந்து வாழ்ந்தவர் அவர் உறுதியாக

கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே – ஐங் 12/1-3

கரையைச் சேர்ந்து வளர்ந்திருக்கும் கொறுக்கச்சியானது கரும்பினைப் போல் பூக்கின்ற
துறையைப் பொருந்திய ஊரினைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமையினைப் பெரிதும்
பொறுத்துக்கொண்டிருப்போம் நாம்,

வரி வண்டு
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி – கலி 66/2-4

இசைக்கும் வண்டுக்கு,
ஓங்கி உயர்ந்த அழகிய யானையின் மிகுதியான மதநீரிலிருந்து கமழும் மணத்துடன்
அங்கிருக்கும் வண்டுகள் விருந்தளிக்க, அதனை உண்டு பகலில் தங்கி,

உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு
ஐது வரல் அசை வளி ஆற்ற – அகம் 102/3,4

பூசிய மயிர்ச்சாந்தினையுடைய பரத்த கரிய கூந்தலை
மெல்லென அசைந்துவரும் காற்றுப் புகுந்து புலர்த்த

ஏகுவர் என்ப தாமே தம்_வயின்
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே – நற் 84/10-12

தாம் தமியராய்ச் செல்லுவர் எனக் கூறுவர், தம்பால்
வந்து இரந்தவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அவரது நசையை ஒழித்தற்கு
இல்வாழ்க்கையிலே பயின்றறியாத நமது தலைவர்.
– பின்னத்தூரார் உரை

செல்குவர் என்பர் தம்பால் போந்து
இரந்தவரது இன்மையைப் போக்கமாட்டாத
இல்லின்கண் வறுமையுற்று வாழும் வாழ்க்கையை விரும்பாதார்
– ஔவை.சு.து.உரை

ஊணும் ஊணும் முனையின் இனிது என
பாலில் பெய்தவும் பாகில் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுத்து ஆற்றி இருந்தெனம் ஆக – புறம் 381/1-4

இறைச்சியும் சோறுமாகியவற்றைத் தெவிட்டி வெறுத்தால், இனிமையானவை என
பால் கலந்து செய்தனவும் வெல்லப்பாகு கொண்டு செய்தனவுமாகிய பண்ணியங்களை
நன்கு கலந்து மென்மையுண்டாகக் கரைத்துக் குடித்துண்டு
விருந்தாகி பசியினைப்போக்கி பன்னாள் இருந்தெனமாக

அவரொடு பேணி
சென்று நாம் முயங்கற்கு அரும் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே – குறு 305/2-4

அவரை விரும்பிச்
சென்று நாம் தழுவிக்கொள்ள முடியாமற்போனவளானேன்;
இங்கு வந்து என் துன்பத்தைத் தீர்த்தலை அவர் செய்தாரில்லை

இளை இனிது தந்து விளைவு முட்டு_உறாது
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின் – பதி 28/5,6

காவல்காட்டைக் காக்கும் தொழிலை இனிதே செய்து, நாட்டினில் விளைச்சல் குறைவின்றி இருக்க,
வீட்டைவிட்டுப் பிரியாத வாழ்க்கையுடன் நீ ஆட்சி செய்வதால்

ஏகுவர் என்ப தாமே தம்_வயின்
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே – நற் 84/10-12

செல்வேன் என்கிறார் அவர்; தம்மிடத்தில்
இல்லையென்று கேட்போரின் இன்மையை மாற்றுவதற்கு இயலாத
இல்வாழ்க்கையை வாழமாட்டாதார்.
– புலியூர்க்கேசிகன் உரை

வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் – புறம் 358/3,4

உலகியலாகிய இல்லறத்தையும் தவ வாழ்வாகிய துறவறத்தையும் சீர் தூக்கினால்
தவத்துக்கு வையம் சிறு கடுகளவும் நேர்படாதாம்

வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
விண் இவர் விசும்பின் மீனும்
தண் பெயல் உறையும் உறை ஆற்றாவே – புறம் 302/9-11

தன் வேலால் களிறுகளை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்க்குமிடத்து
முகில்கள் பரந்துலவும் விழும்பிலுள்ள மீனும்
குளிர்ந்த மழை சொரியும் துளிகளும் உறை போடப் போதாது.
– விண்மீன் தொகையும் மழைத்துளியின் தொகையும் உறையிடற்காகா என்பர்
– ஔவை.சு.து.உரை விளக்கம்.

அவையா அரிசி அம் களி துழவை
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி – பெரும் 275,276

குற்றாத அரிசியை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை
அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் உலரும்படி ஆறவைத்து,

பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி – நற் 69/1

பல கதிர்களையுடைய ஞாயிறு பகற்பொழுதைச் செய்து
ஞாயிறு மண்டிலம் பகற்போதினைச் செய்வதாகிய தன் தொழிலைச் செய்ய்மாற்றால் ஏனை மாவும் புள்ளும்
மக்களும் பிறவும் தத்தமக்குரிய தொழிலைச் செய்யுமாறு உதவுதலால் செய்து என்று ஒழியாது
செய்து ஆற்றி என்றார் – ஔவை.சு.து. உஅரை விளக்கம்

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் – புறம் 58/20

நும்முள் ஒருவீர் ஒருவீர்க்கு உதவுவீராக

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – கலி 133/6
ஆற்றுதல் என்பது வறுமைப்பட்டவர்க்கு உதவுதல்

நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு
அறியா தேஎத்து ஆற்றிய துணையே – அகம் 35/17,18

நெளிந்த கரிய கூந்தலை உடைய என் பேதைமகளுக்கு
அறியாத நாட்டில் அவளைச் செலுத்திப்போம் துணைவன்

சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் – கலி 108/18

சொல்லாட்டியே! உன்னோடு மறுமாற்றம் சொல்லுதலை யார் நிகழ்த்துவார்?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *