Skip to content

கட்டி என்பவன் ஒரு சங்க காலச் சிற்றரசன்

1. சொல் பொருள்

(பெ) 1. ஒரு சங்ககாலச் சிற்றரசன், 2. தோலில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் உருவாகும் திசுக்களின் பெருக்கம், நீர்க்கட்டி, கொழுப்புக்கட்டி

2. சொல் பொருள் விளக்கம்

சோழன் பெரும்பூண் சென்னியை எதிர்த்துப் போரிட்டவர் எழுவர் இந்த எழுவர் கூட்டணியில் கட்டி என்பவனும் ஒருவன். இக்கூட்டணி போரில் சோழர் படைத்தலைவன் பழையனைக் கொன்றது. பின்னர் பெரும்பூண் சென்னியே தலைமையேற்று போரிட்டபோது எழுவர் கூட்டணியில் அறுவர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஒடியவர்களில் இந்தக் கட்டியும் ஒருவன். கணையன் மட்டும் அகப்பட்டுக்கொண்டான். அவன் சோழநாட்டுக் கழுமலச்சிறையில் அடைக்கப்பட்டான். கட்டி உட்பட சோழனை எதிர்த்த எழுவரும் சேரன் படைத்தலைவர்கள் என்பார் நாட்டார் தம் உரையில்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a chieftain of sangam period, tumor,

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என
கண்டது நோனான் ஆகி திண் தேர்
கணையன் அகப்பட கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர் – அகம் 44/7-15

நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,
அதனைக் கண்டு பொறுக்காதவனாகி, திண்ணிய தேரையுடைய
கணையன் என்பானை அகப்படுத்தி, கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய
பிணைப்புள்ள அழகிய கண்ணியையும், மிகுந்த அணிகலன்களையும் அணிந்த சென்னியின்
அழும்பில் என்ற ஊரை ஒத்த, குறையாத புதுவருவாயையுடைய

உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம்
நாண் இலை மன்ற யாணர் ஊர
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை
குறும் தொடி மகளிர் குரூஉ புனல் முனையின்
பழன பைம் சாய் கொழுதி கழனி
கரந்தை அம் செறுவின் வெண்குருகு ஓப்பும்
வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான்
பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய
விடியல் வந்த பெரு நீர் காவிரி
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
முன்நாள் ஆடிய கவ்வை இ நாள்
வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார்
தித்தன்வெளியன் உறந்தை நாள்_அவை
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி
போர் அடு தானை கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே – அகநானூறு 226

நீ கூறுவதை உண்மையென்று ஏற்றுக்கொள்ளமாட்டேன்! உன் பொய்ம்மொழிகளை என்னிடம் கூறாதே! உனக்கு வெட்கமில்லை – நிச்சயமாய், நாளும் புதுப்புது வரவுகளைக்கொண்ட மருதநிலத்துத் தலைவனே! அகன்ற உட்பரப்பினையுடைய ஊரில் உள்ள, முரண்பட்ட நிறங்களையுடைய அழகிய தழையுடையை அணிந்த குறிய வளையல் அணிந்த மகளிருடன் புதிய செந்நிற வெள்ளத்தில் விளையாடுவது வெறுத்துப்போன பின்பு பொய்கையிலுள்ள புதிய தண்டான்கோரையைப் பறித்து, கழனியாகிய கரந்தைக் கொடி படர்ந்த வயல்களில் உள்ள வெள்ளைக் கொக்குகளை ஓட்டுகின்ற இடமான வலிய வில்லைத் தாங்கிய வலிமை பொருந்திய தோள்களையுடைய, பரதவர் தலைவனாகிய பெரிய வேற்படையையுடைய மத்தி என்பவனின் கழார் என்னும் ஊரிலுள்ள நீராடும் துறையின் முன் நீண்ட வெண்மையான மருதமரத்தோடு வஞ்சி மரத்தையும் சாய்த்து விடியலில் பெருகிவந்த மிக்க வெள்ளத்தையுடைய காவிரி ஆற்றில் வளையல் அணிந்த முன்கையினை உடைய உன்னால் விரும்பப்படும் ஒரு பரத்தையுடன் நீ நேற்று விளையாடியதால் உண்டான அலர்மொழி, இன்றைக்கு ஆற்றல் மிக்க வலிமையுடைய பாணன் என்பவனுடன் சேர்ந்து, மாலைகளை மிகவும் அணிகிற தித்தன் வெளியன் என்னும் அரசனுடைய உறையூரில் உள்ள நாளோலக்க மண்டபத்தில் ஓசை இனிய தெளிவான கிணைப்பறையின் ஒலியைக் கேட்டு அவனது பெருமையை அறிந்து அஞ்சி போரில் பகைவரைக் கொல்வதில் ஆற்றல் மிக்க படைகளையுடைய கட்டி என்பவன் போரிடாமல் ஓடிப்போனபோது உண்டாகிய ஆரவாரத்தைக் காட்டிலும் பெரியதாகும்.

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது
குல்லை கண்ணி வடுகர் முனையது 5
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவர்-உடை நாட்டே – குறுந்தொகை 11

சங்கில் அறுத்த வளையல் என் புயத்தோளிலிருந்து நழுவுகிறது.
நாள்தோறும் கண்கள் தூங்காமல் கண்ணீர் வடித்துப் புலம்புகின்றன.
இப்படி இங்கு உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
ஆங்கே செல்வோம்.
அவர் சென்ற நாட்டுக்கே செல்வோம்.
கட்டி அரசன் ஆளும் வடுகர் வேற்றுமொழி பேசும் நாடாயினும் செல்வோம்.
நெஞ்சே, வாழி, இனி எழுக. (புறப்படுக).

நெய் விலை கட்டி பசும்_பொன் கொள்ளாள் – பெரும் 164

பொன் புனை வாளொடு பொலிய கட்டி/திண் தேர் பிரம்பின் புரளும் தானை – மது 434,435

மெல் இரு முச்சி கவின் பெற கட்டி/எரி அவிர் உருவின் அம் குழை செயலை – குறி 104,105

நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி/இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல் – குறி 125,126

குருதி ஒண் பூ உரு கெழ கட்டி/பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள் – நற் 34/3,4

தேம் பூம் கட்டி என்றனிர் இனியே – குறு 196/2

பருதி போகிய புடை கிளை கட்டி/எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன் – பதி 74/12,13

அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி/கட்டளை வலிப்ப நின் தானை உதவி – பதி 81/16,17

கட்டி புழுக்கின் கொங்கர் கோவே – பதி 90/25

நீயே வினை மாண் காழகம் வீங்க கட்டி/புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே – கலி 7/9,10

செறிய கட்டி ஈர் இடை தாழ்ந்த – கலி 85/9

பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி/அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி – கலி 140/6,7

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *