Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு நீர்ப்பறவை, சம்பங்கோழி,

சொல் பொருள் விளக்கம்

ஒரு நீர்ப்பறவை, சம்பங்கோழி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a water bird, Gallirallus striatus

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பழன கம்புள் பயிர் பெடை அகவும் – ஐங் 60/1

நீர்நிலைகளில் வாழும் சம்பங்கோழி, விருப்பத்தோடு தன்னை அழைக்கும் தன் பெடையை நோக்கிக் கூவுகின்ற

இதனுடைய பேடைக்கு நெற்றி வெள்ளையாக இருக்கும். இதன் குரல் கரகரத்த ஓசையை உடையது.

வெண் நுதல் கம்புள் அரி குரல் பேடை – ஐங் 85/1

மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை
உகு வார் அருந்த, பகு வாய் யாமை
கம்புள் இயவன் ஆக, விசி பிணித்
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் - அகநானூறு 356

தண்ணீர் ஓடும் ஆற்றுத் துறையில் மேல்-துறையில் கழுவிவிட்ட பொருள்களைக் கீழ்த்துறையில் இருக்கும் ஆமை இயவன் அடிக்கும் தமுக்கு போல் பிறழ்ந்துகொண்டு தன் பெரிய வாயைப் பிளந்து உண்ணும். அதனைப் பார்த்துக் கம்புள் கோழி இயவன் அடிக்கும் தமுக்கு இசை போலக் கூவும்.

பெருநீர் மேவல் தண்ணடை எருமை
இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
5 கோள்இவண் வேண்டேம் புரவே; நார்அரி
நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித்
துறைநணி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்
10 மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே. - புறநானூறு 297

மிகுந்த நீரில் இருக்க விரும்பும் மெல்லிய நடையையுடைய எருமையின் பெரிய கொம்பு போன்ற நெடிய முற்றுக்ளையுடைய பசிய பயற்றின் தோட்டைப் படுக்கையாகக் கொண்டு கன்றுடன் கூடிய காட்டுப்பசு உறங்கும் சிறிய ஊர்களைக் கொடையாகக் கொள்வதை விரும்பமாட்டோம். நாரால் வடிக்கப்பட்டு பூக்களையிட்டு முதிரவைத்த சாடியிலுள்ள கள்ளை வாழ்த்தி, நீரின் பக்கத்தே பொருந்தி காட்டுக்கோழிகள் முட்டையிடும் மருதநிலத்தூர்களைப் பெறுவதும், கூர்மையான நுனியையுடைய நீண்ட வேல் தைத்து மார்புடன் மடல் நிறைந்த வலிய பனைமரம்போல் நிற்கும் வீரர்க்கு உரியதாகும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *