1. சொல் பொருள்
பழைய வீரக்குடியினருள் ஒரு சாரார்
2. சொல் பொருள் விளக்கம்
கடைச்சங்க காலத்தில், கோசர் என்றொரு வகுப்பார் மூவேந்தர்க்கும் படைத்தலைவராகவும், தமிழகத்தில் ஆங்காங்கு வெவ்வேறு சிற்றரசராகவும் இருந்தமை, பழந்தமிழ் நூல்களாலும் செய்யுட்களாலும் அறியக்கிடக்கின்றது. இவ் வகுப்பாரைப்பற்றி அறிஞரிடை பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. காலஞ்சென்ற ரா. இராகவையங்கார், தம் ‘கோசர்’ என்னும் ஆராய்ச்சி நூலில் கோசராவார் காசுமீர நாட்டினின்று வேளிரையடுத்துக் கோசாம் பியைத் தலைநகராகக்கொண்ட வத்த (வத்ஸ) நாட்டு வழியாய்த் தமிழ்நாடு போந்தவர் என்று கூறுகிறார். கோசர் என்பவர் பண்டைக்காலத் தென்னிந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள் என்றும் இவர்கள் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் துளு நாட்டிலும், கொங்கணத்திலும், கொங்கு நாட்டிலும் அதிகாரம் பெற்றிருந்ததோடு தமிழ் நாட்டின் வேறு பல பகுதிகளிலும் சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர் என்றும் அறிஞர் கருதுகின்றனர். இவர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள்.
இவர்களைப்பற்றிச் சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் கிடைக்கின்றன.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
An ancient caste of warriors;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழையன் என்ற மோகூர் மன்னனின் அரசவையில் இவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். பழையன் மோகூர் அவையகம் விளங்க நான் மொழி கோசர் தோன்றி அன்ன – மது 508,509 இவர்கள் பாண்டியன் நெடுஞ்செழியனின் அரண்மனையில் மன்னனின் ஏவலாளராக இருந்திருக்கின்றனர். கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர் இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப – மது 773,774 (பகைவரை)வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளைய பலராகிய கோசர்கள் நடக்கின்ற நெறிமுறைமையால் உன்னுடைய மெய்ம்மொழியைக் கேட்டு நடக்க, நாலூர்க் கோசர் என்பார் பறை முழக்கி, சங்கு ஊதி, வரி வாங்கினர் பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய நால் ஊர் கோசர் நன் மொழி போல – குறு 15/1-3 முரசு முழங்க, சங்கு ஒலிக்க, அமர்ந்து மிகப் பழமையான ஆலமரத்துப் பொதுவிடத்தில் தோன்றும் நான்கு ஊரிலுள்ள கோசர்களின் நன்மொழியைப் போல இவர்கள் வஞ்சினம் கூறி நன்னன் என்பானுடன் போரிட்டு அவனை வென்றதால் சொன்னதைச் செய்யும் கோசர் எனப்பட்டனர். நன்னன் நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய ஒன்றுமொழி கோசர் போல – குறு 73/2-4 நன்னன் என்பவனின் மணமுள்ள மா மரத்தை அழித்து நாட்டுக்குள் போக்கிய சொல்தவறாக் கோசர் போல கோசர்களின் மூதாதையர். துளுநாட்டில் வாழ்ந்துவந்தனர். வந்தவர்களையெல்லாம் முன்பே அறிந்தவர் போன்று வரவேற்றுப் பாதுகாக்கும் பண்பினை உடையவர்கள். எனவே இவர்கள் செம்மல் கோசர் எனப்பட்டனர். மெய்ம் மலி பெரும் பூண் செம்மல் கோசர் கொம்மை அம் பசும் காய் குடுமி விளைந்த பாகல் ஆர்கை பறை கண் பீலி தோகை காவின் துளுநாட்டு அன்ன 5 வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் – அகம் 15/2-6 மெய்மையையே நிறைந்த பெரிய கொள்கையாய்ப் பூண்ட தலைமை சான்ற கோசர்களின் – திரண்ட பசிய காய்களின் குடுமிப்பக்கம் பழுத்த பாகல்பழங்களை விரும்பி உண்ணும், பறை போன்ற கண்ணையுடைய பீலிகளையுடைய மயில்கள் வாழும் சோலைகளையுடைய – துளுநாட்டைப் போன்று, வெறுங்கையுடன் வரும் அயலவர்களை நன்கு உபசரிக்கும் பண்புடைய இவர்கள் சிறந்த போர் வீரர்கள். அதனால் இவர்கள் முகத்தில் தழும்பு இருக்கும். இதனால் இவர்கள் கருங்கண் கோசர் எனப்பட்டனர். நியமம் என்பது அவர்களின் ஊர். அது மிகவும் செல்வம் படைத்ததாக இருந்தது. யாணர் இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர் கருங்கண் கோசர் நியமம் – அகம் 90/10-12 எப்போதும் புதுவருவாயையுடைய, வாளினால் ஏற்பட்ட வடுக்களையுடைய முகத்தினரான அஞ்சாமையை உடைய கோசர்கள்வாழும் நியமம் என்ற ஊர் இவர்களின் ஒருசாரார் நெய்தலம்கானல்(செறு) என்ற ஒரு வளமான பகுதியில் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அஃதை என்பான் தலைவனாக இருந்திருக்கிறான். இவன் வள்ளலாக இருந்திருக்கிறான். இவர்கள் மிகப்பெரிய வேற்படையை வைத்திருந்ததினால் பல்வேல் கோசர் எனப்பட்டனர். கெட்டுப்போன நிலையிலும், நண்பனாயின் இவர்கள் கைவிடமாட்டார்கள் நன்று அல் காலையும் நட்பின் கோடார் சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின் புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன் மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின் வளம் கெழு நன் நாடு – அகம் 113/1-7 கேடுற்ற நிலையிலும் நட்பில் மாறமாடார், அவரிடம் சென்று அவர் குறிப்பில் படும் மாறுபாடு இல்லாத அறிவு உள்ளவர்களாதலால் புல்லிய தலையினையுடைய இளம் பெண்யானைகளையும் இந்தக் கூத்தரை ஆதரிக்கும் பெருமகனான குதிரைகளையும் அள்ளிக்கொடுக்கும் வள்ளண்மையில் சிறந்த அஃதை என்பானைப் பாதுகாத்து அவனைக் காவல் மிக்க இடத்தில் நிலைநிறுத்திய பல வேற்படையினையுடைய கோசர் என்பவரின் புதிய கள் கமழும் நெய்தலஞ்செறு என்னும் வளம் பொருந்திய நல்ல நாடு. ஒன்றுமொழிக்கோசர் என்பார் அன்னி ஞிமிலி என்ற பெண்ணின் தந்தையின் கண்களைக் குருடாக்கினர். அதனால் அன்னி ஞிமிலி அழுந்தூர் மன்னனான திதியன் என்பவனிடம் முறையிட்டு அவன் மூலமாக இந்தக் கோசரைப் பழிதீர்த்துக்கொண்டாள். தந்தை கண்கவின் அழித்ததன் தப்பல் தெறுவர ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய கடுந்தெர்த் திதியன் அழுந்தைக் கொடுஞ்குழை அன்னி ஞிமிலி – அகம் 196/8-12 தன் தந்தையின் கண்ணின் பார்வையைக் கெடுத்த தவற்றுக்காக, அச்சம் உண்டாக, ஒன்றுமொழிக் கோசர்களைக் கொன்று பழி தீர்த்துக்கொண்ட விரைந்த தேரினையுடைய திதியனின் அழுந்தூர் என்னுமிடத்தைச் சேர்ந்த, வளைந்த காதணியையுடைய அன்னி ஞிமிலி என்பாளைப் போல, இந்தக் கோசர்கள் வாய்மொழி தவறாதவர்களாக விளங்கினர். இவர்களின் புகழ் நெடுந்தொலைவு பரவிக் கிடந்தது. வளம் மிக்க இந்தக் கோசர்கள் சோழ மன்னனைப்பகைத்துக்கொண்டதால், சோழன் இவர்களை அழித்து வெற்றிகொண்டான். வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி – அகம் 205/8-10 உண்மை நிலைபெற்ற நெடுந்தூரத்து விளங்கும் நல்ல புகழினையுடைய செல்வம் மிக்க கோசர்களின் பெரும்படையை அழித்து அவர்களின் நிலத்தைக் கைக்கொள்ள விரும்பிய பொன்னினால் ஆன பூணை உடைய சோழன் இந்தக் கோசர்களில் பல்இளம் கோசர் எனப்படுபவர் செல்லூர் என்ற ஊரைச் சார்ந்து வழ்ழ்ந்தனர். அவர்களின் தலைவன் செல்லிக்கோமான் எனப்படும் ஆதன் எழினி. இவன் வேலெறிவதில் வல்லவன். பல் இளம் கோசர் கண்ணி அயரும் மல்லல் யாணர் செல்லி கோமான் எறிவிடத்து உலையா செறி சுரை வெள் வேல் ஆதன் எழினி – அகம் 216/11-14 பல் இளம்கோசர் என்பார் தலையில் மாலைகட்டி விளையாடும் மிக்க வளம் பொருந்திய செல்லூர்மன்னனாகிய ஆதன் எழினி இந்தக் கோசர் காற்றினும் கடிது செல்லும் தேர்ப்படையைக் கொண்டிருந்தனர். அதனால் மோகூர் மன்னனுடன் போரிட்டு அழிவை ஏற்படுத்தினர். எனினும் அந்த மன்னன் பணியாததினால், வடக்கிலிருந்த மோரியரைத் துணைக்கு அழைத்தனர். அந்த மோரியரின் தேர்ப்படை மலைவழியே வருவதற்குப் பாதை அமைத்துக்கொடுத்தனர். வெல் கொடி துனை கால் அன்ன புனை தேர் கோசர் தொன் மூதாலத்து அரும் பணை பொதியில் இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியாமையின் பகை தலைவந்த மா கெழு தானை வம்ப மோரியர் புனை தேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள் அருவிய அறை வாய் – அகம் 251/6-14 வெல்லும் கொடியினையுடைய விரையும் காற்றைப் போன்ற அழகு செய்யப்பட்ட தேரினையுடைய கோசர் என்பார் மிக்க தொன்மை வாய்ந்த ஆலமரத்தின் அரிய கிளைகளையுடைய மன்றத்தில் இனிய ஓசையையுடைய முரசம் குறுந்தடியாலடிக்கப்பெற்று ஒலிக்க, பகைவரின் போர்முனையை அழித்தகாலத்தில், மோகூர் மன்னன் பணிந்துவராததினால், அவன்பால் பகைகொண்டவராகிய குதிரைகள்பொருந்திய சேனையினையுடைய புதிய மோரியர் என்பாரின் அழகிய தேர்ச் சக்கரங்கள் உருண்டு செல்வதற்காக, உடைத்து வழியாக்கிய விளங்கும் வெள்ளிய அருவிகளைக் கொண்ட மலைப்பாதை இளம் பல் கோசர் என்பவர் முருங்க மரக் கம்பத்தின் மீது அம்புகளைப் பாய்ச்சிப் பயிற்சி பெற்றனர். இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார் இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் பெருமரக் கம்பம் போல – புறம் 169/9-11 இளைய பல கோசர் விளங்கிய படைக்கலம் கற்கும்வகையில் மாறுபட்டவராய் எறிந்த அகன்ற இலையைக் கொண்ட முருக்க்காகிய பெரிய மரத்தால்செய்யப்பட்ட தூணாகிய இலக்கைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்